திங்கள், செப்டம்பர் 11, 2017

சமஷ்டி என்­பது பிரி­வி­னை­யே! - விக்கியுடன் மல்லுக் கட்டிய அஸ்கிரிய பீடத்தின் பிக்குகள்­

சமஷ்டி என்பது பிரிவினையேயாகும். இது தொடர்பில் எம்மிடம் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை என்று அஸ்கிரிய பீடத்தைச் சேர்ந்த தேரர்கள் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் நேற்று அஸ்கிரிய பீடத்தின் உப பீடாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோதே இவ்வாறு கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளன.
சமஷ்டி என்பது பிரிவினையேயாகும். இது தொடர்பில் எம்மிடம் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை என்று அஸ்கிரிய பீடத்தைச் சேர்ந்த தேரர்கள் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் நேற்று அஸ்கிரிய பீடத்தின் உப பீடாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோதே இவ்வாறு கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளன.

இந்த சந்திப்பில் அஸ்கிரிய பீடத்தின் தேரர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இதன்போது இனப்பிரச்சினைக்கான தீர்வு அதிகார பரவலாக்கல் மற்றும் சமஷ்டி அடிப்படையிலான அரசியலமைப்பு குறித்தும் தேரர்கள் தமது கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

இதேவேளை இந்த சந்திப்பின்போது மேலாதிக்க நிலைப்பாட்டில் இருந்தே தேரர்கள் பேச்சுவார்த்தையை முன்னெடுத்ததாக வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்தார். சிலர் நல்லெண்ணத்துடன்செயற்பட்ட போதிலும் சிலரது மனங்களில் விரோதங்கள் மேலோங்கியுள்ளன எனவும் அஸ்கிரிய பீடத்துடனான சந்திப்பின் பின்னர் வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் குறிப்பிட்டார்.

இதன்போது சமஷ்டி தீர்வின் அவசியம் தொடர்பில் வடக்கு முதல்வர் தேரர்களுக்கு விளக்கமளித்தபோதும் தேரர்கள் அவற்றை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையில் இருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சந்திப்பு தொடர்பில் வடக்கு முதல்வர் தெரிவிக்கையில்,

கண்டி அஸ்கிரிய தேரர்களை நல்லெண்ண அடிப்படையில் நாம் சந்தித்திருந்தோம். நேற்று (நேற்று முன்தினம்) நாம் மல்வத்து மாநாயக்க தேரரை சந்தித்தோம். அவர் என்னுடன் தனிப்பட்ட பேச்சுவார்த்தையை முன்னெடுத்திருந்தார். மிகவும் புரிந்துணர்வு ரீதியில் நல்லதொரு பேச்சுவார்த்தையாக இது அமைந்தது. ஆனால் இன்று ( நேற்று ) அஸ்கிரிய பீட தேரருடன் சந்திப்பானது சற்று மாறுபட்ட சங்கடத்துக்குறிய வகையில் அமைந்தது. குறிப்பாக அவருடன் நான் தனிப்பட்ட ரீதியில் கருத்துக்களை பகிரவே விரும்பினேன். ஆனால் இந்த சந்திப்பில் மாநாயக்க தேரருடன் மேலும் 12 தேரர்களும் கலந்துகொண்டனர். அவர்களின் பிரித் பிரார்த்தனைகளை செய்த பின்னரே என்னுடன் பேச்சுவார்த்தைக்கு வந்தனர்.

இந்த சந்திப்பின்போது ஏற்கனவே அவர்கள் இருந்த நிலைப்பாட்டில் இருந்தே என்னுடன் பேச்சுவார்த்தைக்கு வந்தார்களே தவிர எனது நிலைப்பாட்டை முழுமையாக செவிமடுக்கும் நோக்கம் இருக்கவில்லை என நான் உணர்ந்தேன் . எனினும் இவர்கள் என்ன நிலைப்பாட்டில் இருந்து என்னுடன் பேசினார்கள் என்பதை என்னால் உணர்ந்துகொள்ள முடியும். ஆனால் எனது தரப்பின் காரணிகளை முன்வைத்தேன். குறிப்பாக எமது உரிமைகளை நாம் பெற்றுக்கொள்ள போராடுவது குறித்தும், எம்மிடம் பிரிவினைவாதம் , மதவாதம், இனவாத கொள்கைகள் இல்லை என்பதையும் கூறினேன். மேலும் எமது பிரச்சினைகளுக்கு சமஷ்டி முறையிலான தீர்வு மட்டுமே சாதகமாக அமையும். அரசியல் தீர்வு குறித்து நாம் மிகவும் ஆழமான எதிர்பார்ப்பை கொண்டுள்ளோம் என்பதையும் தெரிவித்தோம்.

மேலும் நாட்டில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக இருந்த போதிலும் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களே பெரும்பான்மையான மக்களாக உள்ளனர். எனவே எமது சுய கௌரவம், அடையாளத்தை பாதுகாக்க நாம் முயற்சிக்கின்றோம். சிங்கள மேலாதிக்கம் எம்மத்தியில் திணிக்கப்பட கூடாது என்பதை நான் தெரிவித்தேன். அதேபோல் அரசியலமைப்பு விடயத்தில் இவர்கள் மத்தியில் மாற்றுக் கருத்துக்கள் உள்ளன. நாடு பிரியும் வகையில் அல்லது ஒருசிலரது தேவைக்கு அமைய புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதாக கூறுகின்றனர். மாறுபட்ட கருத்தில் இவர்கள் இருப்பதால் எமது தரப்பு நியாயங்களை நாம் முன்வைக்க கிடைத்தது.

எனினும் இவர்கள் கூறும் அனைத்தையும் எம்மால் ஏற்றுகொள்ள முடியாது. ஒருசில விடயங்களில் எம்மால் இணக்கம் தெரிவிக்க முடியும். ஆனால் வடக்கு மற்றும் தமிழர்கள் விடயத்திலும் சமஷ்டி விடயத்திலும் இவர்களின் நிலைப்பாடு மாறுபட்ட ஒன்றாகும். இந்த பேச்சுவாரத்தை முன்னெடுக்கப்பட்டமையை மிகவும் ஆரோக்கியமான ஒன்றாக நாம் கருதுகின்றோம். தொடர்ந்து வரும் காலங்களில் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றுகொள்ள இவர்களின் தலையீடுகள் மற்றும் நடுநிலைத்தன்மை கிடைக்கும் என நம்புகின்றோம். நல்ல மாற்றங்களை எதிர்காலத்தில் உருவாக்க வாய்ப்புகள் உள்ளன என்றார்.