திங்கள், செப்டம்பர் 11, 2017

அமெரிக்க ஓப்பன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் நடால்

அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் ஆடவர் பிரிவில், நடால் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

நடால்


கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான அமெரிக்க ஓப்பன் டென்னிஸ், பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. மகளிர் ஒற்றையர் பிரிவில் ஸ்டீஃபென்ஸ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இந்நிலையில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் நாட்டின் நடால் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் ஆண்டர்சன் மோதினர்.

இதில், ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய நடால் 6-3, 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்குகளில் வென்று, அமெரிக்க ஓப்பன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார். குறிப்பாக, 58 நிமிடங்களில் போட்டியை முடித்து, தான் நம்பர் 1 பிளேயர் என்பதை நிரூபித்துள்ளார் நடால். அமெரிக்க ஓப்பனில், சாம்பியன் பட்டம் வெல்வது இது நடாலுக்கு மூன்றாவது முறையாகும்.ஒட்டுமொத்தமாக, நடால் 16 கிராண்ட் ஸ்லாம்களை வென்றுள்ளார். இந்த ஆண்டில் மட்டும், இது அவருக்கு 5-வது டைட்டில். ஏற்கெனவே, கடந்த ஜூன் மாதம் ஃப்ரெஞ்ச் ஓப்பன் பட்டத்தை 10-வது முறையாகக் கைப்பற்றி சாதனை படைத்திருந்தார். தற்போது,16-வது கிராண்ட்ஸ்லாமைக் கைப்பற்றியதன் மூலம் ஃபெடரருக்கு அடுத்த இடத்தில் உள்ளார். ஃபெடரர், 19 கிராண்ட் ஸ்லாம்களைக் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.