சனி, செப்டம்பர் 02, 2017

அனிதா படுகொலை செய்யப்பட்டுள்ளார்..! இறுதிச் சடங்கில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின் வேதனை

நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மாணவி அனிதாவின் உடலுக்கு தி.மு.க
செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிதாவின் மருத்துவக் கனவு நீட் தேர்வினால் தகர்ந்ததால் விரக்தி அடைந்தவர், நேற்று தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் மற்றும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். நேற்று இரவே விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
சற்று நேரத்துக்கு முன்னர் தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குழுமூருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவரது சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தார். தி.மு.க சார்பில் 10 லட்ச ரூபாய் நிதியை அவரது குடும்பத்துக்கு மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் தவறான தகவல்கள் அளித்து மாணவர்களை ஏமாற்றிவிட்டனர். மாணவி அனிதா, தற்கொலை செய்யவில்லை. படுகொலை செய்யப்பட்டுள்ளார்.  அனிதாவின் இறப்புக்கு காரணமான மத்திய அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் பதவி விலகவேண்டும்' என்று தெரிவித்தார். 
அதன்பின்னர், அனிதாவின் உடல் வீட்டிலிருந்து எடுக்கப்பட்டு இறுதி ஊர்வலம் தொடங்கியது. இறுதி ஊர்வலத்தில் மு.க.ஸ்டாலினும் பங்கேற்று நடந்து சென்றார்.