வியாழன், செப்டம்பர் 07, 2017

கல்லூரி மாணவன் தற்கொலை! சொந்த விவகாரமா? ப்ளூ வேலா? -விருதுநகர் பரபரப்பு!

விருதுநகர் ஸ்ரீவித்யா பொறியியல் கல்லூரியின் விடுதியில் EEE மூன்றாமாண்டு மாணவன் பிரசாந்த் பாண்டியன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தேனி மாவட்டம் குச்சனூரைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் முருகேசனின் மகனான இவர், கடந்த வாரம் கல்லூரியில் இருந்து வீட்டுக்குச் சென்றுவிட்டு, ஒரு வாரம் கழித்து விடுதிக்கு வந்திருக்கிறார். வந்ததிலிருந்தே சோகமாக காணப்பட்ட பிரசாந்த் பாண்டியன், கல்லூரி விடுதியில் உள்ள தன்னுடைய அறையில் தூக்கு மாட்டிக்கொண்டார். இவரது உடலைக் கைப்ப்ற்றிய விருதுநகர் போலீசார், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரசாந்த் பாண்டியன் ஏன் தற்கொலை செய்து கொண்டார்? கல்லூரியில் எதுவும் பிரச்சனையா? இல்லையென்றால் குடும்பச் சூழ்நிலையா? என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.  வீட்டில் ஒரு பிரச்சனையும் கிடையாது என பெற்றோர் தரப்பிலும்,  கல்லூரியிலும் எந்த பிரச்சனையும் இல்லை என்று கல்லூரி தரப்பிலும் சொல்லி வருகிறார்கள். உடன் பயிலும் மாணவர்களோ, “காலில் சிறு ஊனம் உள்ள பிரசாந்த் பாண்டியன் அமைதியான சுபாவம் கொண்டவர். கல்லூரி மாணவர்களுக்கே உரித்தான கலகலப்பு அவனிடம் எப்போதும் இருந்தது இல்லை. தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அவனுக்கு என்ன பிரச்சனையோ?” என்று வியப்பினை வெளிப்படுத்துகிறார்கள். 

தற்போது நீலத்திமிங்கலம்  தற்கொலைகள் அதிகரித்துவரும் நிலையில்,  பிரசாந்த் பாண்டியனின் தற்கொலையும் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  “மாணவன் உடலில் எந்த இடத்திலும் கீறல்கள் காணப்படவில்லை.” எனச் சொல்லும் காவல்துறையினர், “பிரேத பரிசோதனை அறிக்கை வரட்டும்..” என்கிறார்கள்.