சனி, செப்டம்பர் 09, 2017

புதிய அரசியலமைப்பில் வடக்கு, கிழக்கு இணைப்பு பற்றிய எந்த முடிவும் இல்லை

புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை தயாராகிவிட்ட நிலையில், வடக்கு– கிழக்கு மாகாணங்களின் இணைப்புத் தொடர்பில் அதில் எந்தவிதமான இறுதித் தீர்மானமும் கூறப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதுபோன்றே மதச் சார்பற்ற நாடு என்ற விடயத்திலும் ஒருமித்த நிலைப்பாடு எட்டப்படவில்லை.
புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை தயாராகிவிட்ட நிலையில், வடக்கு– கிழக்கு மாகாணங்களின் இணைப்புத் தொடர்பில் அதில் எந்தவிதமான இறுதித் தீர்மானமும் கூறப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதுபோன்றே மதச் சார்பற்ற நாடு என்ற விடயத்திலும் ஒருமித்த நிலைப்பாடு எட்டப்படவில்லை.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. இதற்காக நாடாளுமன்றம் அரசமைப்புச் சபையாக மாற்றப்பட்டது. அத்துடன் புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான வழிகாட்டல் குழுவும் நியமிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் தரப்புகளையும் பிரதிநிதித்து வப்படுத்தி அந்தக் குழு அமைக்கப்பட்டது. அதன் இடைக்கால அறிக்கை தயாராகிவிட்டது.

எதிர்வரும் 21ஆம் திகதி அது நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அடுத்த மாதம் அது விவாதத் துக்கு எடுக்கப்படக்கூடும் என்றும் தெரிகிறது. அரசமைப்பு உருவாக்கம் குறித்து ஆராய அரசமைப்புச் சபையால் நியமிக்கப்பட்ட 6 உபகுழுக்களும் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவால் நியமிக்கப்பட்ட 7 ஆவது குழுவும் ஏற்கனவே தங்களது அறிக்கைகளை நாடாளுமன்றத்தில் முன்வைத்துவிட்டன. தற்போது தயாராகியிருக்கும் இடைக்கால அறிக்கையில் உள்ள விடயங்கள் மெல்லக் கசிந்து வருகின்றன.

இந்த அறிக்கைக்கான பின்னிணைப்புக்களை கட்சிகள் கடந்த 31ஆம் திகதிக்கு முன்பாகக் கொடுத்துள்ள நிலையில் இடைக்கால அறிக்கை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் தயாரிக்கப்பட்ட அறிக்கையில் பெரியளவில் மாற்றங்கள் செய்யப்படாத அறிக்கையே மீண்டும் தயாராகி இருக்கின்றது என்று அறியவருகிறது. அந்த அறிக்கையில் மாகாணங்களின் இணைப்புத் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை. குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்புத் தொடர்பில் எந்தத் தீர்மானமும் குறிப்பிடப்படவில்லை.

மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும் என்று ஒரு தரப்பும், மாகாணங்கள் இணைக்கப்படவே கூடாது என்று இன்னொரு தரப்பினரும், தற்போதுள்ள அரசமைப்பு நடைமுறைக்கு அமைவாக மக்களின் கருத்தை அறிந்த பின்னர் மாகாணங்கள் இணைக்கப்படலாம் என்று மற்றொரு தரப்பினரும் குறிப்பிட்டுள்ளனர். இந்த விடயத்தில் ஒருமித்த நிலைப்பாடு எட்டப்படவில்லை. அதனால் மூன்று தரப்பினரும் கூறிய கருத்துக்கள் இடைக்கால அறிக்கையில் அப்படியே குறிப்பிடப்பட்டுள்ளனவே தவிர இணைப்புக் குறித்த முடிவு எதுவும் இல்லை.

மதச் சார்பற்ற நாடு என்ற விடயத்திலும் அதாவது பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற விடயத்திலும் இணக்கம் எட்டப்படவில்லை. மாறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. தற்போதைய அரசமைப்பில் உள்ளவாறே பௌத்த மதத்திற்கான முன்னுரிமை தொடரவேண்டும் என்று ஒரு தரப்பு வலியுறுத்தியுள்ளது. மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்று மற்றொரு தரப்பு வலியுறுத்தியுள்ளது. ஒரு மித்த நிலைப்பாடு எட்டப்படாமையினால் இரு தரப்பினரது கருத்துக்களும் இடைக்கால அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் அதிகாரம் மாகாணங்களுக்கு வழங்கப்படவேண்டும் என்று இடைக்கால அறிக்கையில் குறிப்பிட்ட போதும் அந்த அதிகாரம் எந்த அளவில் வழங்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் இடைக்கால அறிக்கையில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.