சனி, செப்டம்பர் 02, 2017

மாணவி அனிதா தற்கொலைக்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் போராட்டம்..!

நீட் தேர்வால் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காத விரக்தியால் மனமுடைந்து, மாணவி அனிதா நேற்று தற்கொலை செய்துகொண்டுள்ளார்.


அரியலூர் மாவட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர், அனிதா (17). மூட்டைத் தூக்கும் கூலித்தொழிலாளியின் மகளான இவர் +2 பொதுத்தேர்வில் 1176 மதிப்பெண்கள் எடுத்தும், நீட் தேர்வால் அனிதாவிற்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காத நிலை உருவானது. இதையடுத்து, நீட் தேர்வை எதிர்த்து, +2 மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவப்படிப்பிற்கான கலந்தாய்வுகளை நடத்த வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் அனிதா வழக்கு தொடர்ந்தார். ஆனால், நீட் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து மனமுடைந்த மாணவி அனிதா நேற்று மருத்துவப்படிப்பில் இடம் கிடைக்காத விரக்தியால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். இது தமிழகம் முழுவதும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. இது குறித்து அரசியல் தலைவர்களும் கடும் மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மாணவி அனிதா தற்கொலைக்கு நீதி கேட்டு, தமிழகம் முழுதும் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள், மாணவர் மற்றும் இளைஞர் அமைப்பினர், தமிழக வாழ்வுரிமை கட்சி, புரட்சிகர மாணவர் இளைஞர்- முன்னணி அமைப்பினர்,  கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளையும், கட்சிகளையும் சேர்ந்தவர்களும், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக எழும் கடும் கண்டனங்கள்..!
சென்னை அண்ணா சாலையில் இளைஞர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினரும் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே நாகர்கோயில் சாலையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து கைது செய்து போலீசார் அழைத்து சென்றனர். புதுச்சேரியில் அண்ணா சாலையில், சாலை மறியல் போராட்டம் நடந்தது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் ஏற்காமல் மறியல் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து அவர்களை கைது செய்தனர்.

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அருகே சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்டவர்களை கைது செய்து அழைத்து சென்றனர். வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை, முத்துக்கடை பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போலீசார் அவர்களை கைது செய்தனர்.

கோவை ரயில் நிலையத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தியதால், அவர்களை கைது செய்தனர். திருச்சி, கோவை, காரைக்குடி, திண்டுக்கல், சேலம், சூரமங்கலம், விழுப்புரம், கரைக்குடி, கடலூர், கொரடாச்சேரி, விழுப்புரம், திருவாரூர், நாகை என தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.