ஞாயிறு, செப்டம்பர் 17, 2017

கோத்தபாய சுவீகரித்த தொடர்மாடி கட்டடத்தை ஒப்படைக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு கடிதம்

கொழும்பு - வெள்ளவத்தை, சப்பல் ஒழுங்கையில் அமைந்துள்ள தொடர்மாடி வீட்டை அரசுடைமையாக்கியமை சட்ட ரீதியற்றதென கூறி தொடர்மாடி கட்டடத்தை மீண்டும் ஒப்படைக்குமாறு உயர் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், தீர்ப்பின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதியையும் இணைத்து பொலிஸ்மா அதிபருக்கு மனுதாரர்களின் சிரேஸ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசாவினால் கோரிக்கைக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு - வெள்ளவத்தை, சப்பல் ஒழுங்கையில் அமைந்துள்ள தொடர்மாடி வீட்டை அரசுடைமையாக்கியமை சட்ட ரீதியற்றதென கூறி தொடர்மாடி கட்டடத்தை மீண்டும் ஒப்படைக்குமாறு உயர் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், தீர்ப்பின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதியையும் இணைத்து பொலிஸ்மா அதிபருக்கு மனுதாரர்களின் சிரேஸ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசாவினால் கோரிக்கைக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சுவிற்சர்லாந்தை வசிப்பிடமாகக் கொண்ட சண்முகம் சிவராஜா, சிவராஜா சரோஜினி ஆகியோருக்கு கொழும்பு - வெள்ளவத்தை, சப்பல் ஒழுங்கையில் சொந்த தொடர்மாடி வீடொன்று அமைந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் 2009ஆம் ஆண்டு தை மாதம் 7ஆம் திகதி நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட அவசரகால ஒழுங்கின் 7(1ம்) விதியின் கீழ் குறித்த தொடர்மாடி வீடு வர்த்தமானி அறிவித்தல் மூலம் அரச உடமையாக்கப்பட்டுள்ளது.

இந்த தொடர்மாடி வீடு பயங்கரவாதத் தடைப்பிரிவுப் பொலிஸாரின் வேண்டுகோளுக்கு அமைய, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தொடர்மாடிக் கட்டடத்தில் மருத்துவ நிலையம் ஒன்றை நடத்துவதற்கு உரிமையாளர்களால் வாடகைக்கு கொடுக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டில் அரச உடமையாக்கப்பட்டுள்ளது. அரச உடமையாக்கப்பட்ட சப்பல் ஒழுங்கையில் அமைந்துள்ள தொடர் மாடிக் வீட்டை உரிமையாளர்களிடமிருந்து சட்டரீதியற்ற முறையில் அரச உடமையாக்கியமைக்கு எதிரா 2010ஆம் ஆண்டு சித்திரை மாதம் 20ஆம் திகதி உயர் நீதிமன்றில் சிரேஸ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அடிப்படை மனித உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் பொலிஸ் மா அதிபர், ஜனாதிபதியின் செயலாளர், பயங்கரவாதத் தடைப்பிரிவின் பொறுப்பதிகாரி, சட்டமா அதிபர் உட்பட நால்வர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர். இந்த மனு உயர் நீதிமன்றில் பிரதம நீதியரசர் தலைமையில், நீதியரசர்களான பீ.பி.அலுவிகார, அனில் குணரத்ன ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு ஆடி மாதம் 27ஆம் திகதி வரலாற்று முக்கியத்துவமான தீர்ப்பு வழங்கப்பட்டது.

முன்னாள் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் அரச உடமையாக்கப்பட்டமை சட்டரீதியற்றதென உயர் நீதிமன்றம் வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்தது. மேலும் அச் செயல்பாடு மனுதாரர்களின் அடிப்படை மனித உரிமை மீறல் எனவும் தீர்ப்பு வழங்கியதுடன், தொடர்மாடிக் கட்டடத்தை செப்டெம்பர் மாதம் 27ஆம் திகதி அல்லது அதற்கு முன்னைய திகதியில் பிரதிவாதிகள் மனுதாரர்களிடம் ஒப்படைப்பதுடன் ஐந்து இலட்சம் ரூபாவை நஸ்டஈடாக மனுதாரர்களுக்கு வழங்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற தீர்ப்பினை நடைமுறைப்படுத்தி செப்டம்பர் மாதம் 27ம் திகதி அல்லது அதற்கு முன்னைய திகதியில் தொடர் மாடிக்கட்டடத்தை மனுதாரர்களான குடியிருப்பின் உரிமையாளகளுக்கு கையளிக்கும்படி தீர்ப்பின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதியையும் இணைத்து பொலிஸ்மா அதிபருக்கு மனுதாரர்களின் சிரேஸ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசாவினால் கோரிக்கைக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது