ஞாயிறு, ஜனவரி 14, 2018

பீல்டிங்கில் சொதப்பிய இந்தியா! 335 ரன் சேர்த்த தென்னாப்பிரிக்கா

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 335 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. மார்க்ரம் (94 ரன்), அம்லா (82) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் நேற்றைய ஆட்ட நேர முடிலில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் டூ பிளசி 24 ரன்களுடனும், கேசவ் மகாராஜ் 10 ரன்களுடனும் களத்திலிருந்தனர்.


இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. ஸ்கோர் 282 ரன்களை எட்டியபோது கேசவ் மகாராஜ் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பிறகு களமிறங்கிய ரபடா சிறிது நேரம் நிலைத்து நின்றார். அவர் கொடுத்த அருமையான கேட்ச் வாய்ப்பை ஹர்திக் பாண்ட்யா தவறவிட்டார். ரபடாவின் ஒத்துழைப்பால் டூ பிளசி அரைசதம் கடந்தார். அவருக்கும் அஷ்வின் பந்துவீச்சில் ஒரு கேட்ச் வாய்ப்பை விக்கெட் கீப்பர் பார்த்திவ் பட்டேல் தவறவிட்டார். இந்திய அணியின் பீல்டிங் சொதப்பலாக இருந்தது, தென்னாப்பிரிக்க அணி 300 ரன்களைக் கடக்க உதவியது. ரபடா 11 ரன்களுக்கு அவுட்டானார். கேப்டன் டூ பிளசி 9-வது விக்கெட்டாக 63 ரன்களில் வெளியேறினார். மோர்னே மோர்கல் அஷ்வின் பந்துவீச்சில் விஜயிடம் கேட்ச் ஆக தென்னாப்பிரிக்காவின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. அந்த அணி முதல் இன்னிங்ஸில் 335 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் அஷ்வின் 4 விக்கெட்டுகளும், இஷாந்த் ஷர்மா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள். ஷமி ஒரு விக்கெட் கைப்பற்றினார். அடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. முரளி விஜய், லோகேஷ் ராகுல் களமிறங்கினார்கள். முதல் ஓவரை சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மகாராஜ் வீசினார். முதல் பந்தை முரளி விஜய் பவுண்டரிக்கு விரட்டினார். அதன்பிறகு அந்த ஓவரில் அனைத்து பந்துகளையும் தடுத்து ஆடினார். ஒரு ஓவர் முடிந்தததும் உணவு இடைவேளை விடப்பட்டது.