செவ்வாய், ஜனவரி 30, 2018

தமிழீழ விடுதலைப் புலிகளும் எமது நாட்டு பிரஜைகளே! – மஹிந்த ராஜபக்ஷ

ஆயுதம் ஏந்தி போராடிய அமைப்பாக இருந்தாலும் தமிழீழ விடுதலைப் புலிகளும் எமது நாட்டு பிரஜைகளே என
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நேற்றிரவு (திங்கட்கிழமை) இடம்பெற்ற நேரடி விவாத நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்தோடு, யுத்தத்தின் போது பிரித்தானியா மற்றும் அமெரிக்காவின் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்ளாத காரணத்தினாலேயே குறித்த நாடுகள் தமக்கு எதிராக செயற்படுவதாக மஹிந்த மேலும் தெரிவித்தார்.

அரசியலலைப்பின் இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சமஷ்டி மற்றும் பௌத்த மத முன்னுரிமை போன்ற விடயங்கள் தொடர்பாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வடக்கிற்கு ஒரு முகத்தையும் தெற்கிற்கு இன்னொரு முகத்தையும் காட்டுகின்றார் என்ற குற்றச்சாட்டையும் மஹிந்த முன்வைத்தார்.

இதேவேளை, வடக்கின் 89 சதவீதமான வாக்குகள் கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமக்கு எதிராக பயன்படுத்தப்பட்டதாக குறிப்பிட்ட மஹிந்த, கிழக்கு மக்கள் தற்போது தன்னை ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்றும் வடக்கு மக்களும் தன்னை ஏற்றுக்கொள்வார்கள் என நம்புவதாகவும் இதன்போது குறிப்பிட்டார்