புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஜன., 2018

வெற்றியை அழகுபடுத்துபவர்! ரோஜர் பெடெரரின் வெற்றிக்குப் பின்னால்...




"இதை நான் தவிர்க்கத்தான் நினைத்தேன், ஆனால் முடியவில்லை. இதில் என்ன தவறு, என் ரசிகர்கள், என் மக்களுடன் என் உணர்வுகளைப்
பகிர்வதில் மகிழ்ச்சியே... நான் மகிழ்ச்சியில் தான் அழுகிறேன்" நேற்று (28-01-2018) வென்ற ஆஸ்திரேலியன் ஓப்பனுடன் சேர்த்து இதுவரை இருபது கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் வீரரான ரோஜர் பெடெரெர் தான் கண்ணீருடன் இவ்வாறு பேசியது. 

அவரது கண்ணீருக்குக் காரணம் இருக்கிறது. 2012ஆம் ஆண்டிலிருந்து அவர் சந்தித்த தொடர் தோல்விகளையும், 'அவருக்கு வயதாகிவிட்டது, ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது' என்ற விமர்சனத்தையும் 2017இல் தன் 35 வயதில் இதே ஆஸ்திரேலியன் ஓப்பன் பட்டத்தை வென்றுதான் எதிர்கொண்டார். 2017இல் ரஃபேல் நடாலுடன் போட்டியிட்டு வென்றதால் அந்த வெற்றி இன்னும் முக்கியமாகக் கருதப்பட்டது. தன் மீதான பார்வையை உடைத்து தன்னை மீட்ட அந்த வெற்றியை இந்த ஆண்டும் தக்கவைத்த மகிழ்ச்சியைத் தான் கண்ணீரால் வெளிப்படுத்தினார். அவர் பேசிக்கொண்டிருந்த பொழுது, அந்த அரங்கில் டென்னிஸ் வீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட சிறப்பு இடத்திலிருந்து தங்கள் பிள்ளையை பெருமிதத்தோடு பார்த்துக் கொண்டிருந்தது அந்த தம்பதி. அவரை பெருமிதத்துடன் பார்த்துக்கொண்டிருந்த அந்த தம்பதி அவரது பெற்றோர் அல்ல. பின் யார்? 




ரோஜர் பெடெரெர்  ஒன்பது வயதில் பீட்டர் கார்ட்டரிடம் பயிற்சிக்காக சேர்ந்தார். சேர்ந்தார் என்பதை விட, ரோஜரின் திறமையையும் பிற்காலத்தில் டென்னிஸ் உலகின் நட்சத்திரமாய் விளங்கும் வாய்ப்பு ரோஜரிடம் இருக்கிறது என்பதையும் அறிந்து கார்ட்டர் சேர்த்துக்கொண்டார் என்பதே சரி. ரோஜரின் முதல் பயிற்சியாளர் அவர் இல்லை, ஆனால் முதன்மையான பயிற்சியாளர் பீட்டர் கார்ட்டர் தான். சர்வதேச தரத்திற்கு ரோஜரை தயார் செய்தது அவர் தான். வெற்றிகளைப்  பார்க்க தொடங்கியிருந்தாலும், தோல்விகளையும் இழப்புகளையும் தாங்கிக் கொள்பவராய் தான் ரோஜர் இருந்தார். 2002இல் ஒரு நாள் டொரோண்டோவில் ஒரு போட்டியில் விளையாடிக்  கொண்டு இருந்த போது, அவர் தாங்கிக் கொள்ளவே  முடியாத அந்த செய்தி வந்தது. பீட்டர் கார்ட்டர், கார் விபத்தில் உயிரிழந்தார். 




"கண்டதெல்லாம் தன் புலன் , வென்றதெல்லாம் தன் திறன்" என்பவர்களே அதிகம் இருக்கும்பொழுதில் தன்  வெற்றிகளுக்கெல்லாம் தன்  பயிற்சியாளரும் போட்டியாளர்களுமே காரணம் என்றவர் ரோஜர். அத்தகைய பயிற்சியாளருக்கு அவரது இளம் வயதிலேயே ஏற்பட்ட மரணம், அதையும் தாண்டி பீட்டரை இழந்த அவரது பெற்றோரின் சோகம், ரோஜரை பாதித்தது. பீட்டரின் பெரு வெற்றிகளைக் காணக் காத்திருந்தவர்கள் அவர்கள். அதை ஈடு செய்ய பீட்டரால் பயிற்றுவிக்கப்பட்ட ரோஜர், 2005இல் இருந்து ஒவ்வொரு ஆஸ்திரேலியன் ஓப்பன் டென்னிஸ் போட்டிக்கும் பீட்டர் கார்ட்டரின் பெற்றோரை விமானத்தில் முதல் வகுப்பில் அழைத்து வந்து, தான் தங்கும் ஹோட்டலில் தங்க வைத்து, தான் பெரும் வெற்றிகளின் வாயிலாக பீட்டரை அவர்களுக்கு காட்டி அவர்களை மகிழ்ச்சிப் படுத்துகிறார் ரோஜர். இப்போதும் தொடர்கிறது இந்த வழக்கம். இதோ 2018இல் வெற்றி பெற்று இன்னுமொரு மகிழ்ச்சியைத் தந்திருக்கிறார்.

நேற்றைய வெற்றிக்குப் பின்னர் பேசிய ரோஜர், "எனது வெற்றிக்கு முக்கிய காரணம் என் மனைவியும் பெற்றோரும், அதைவிட,  என் விளையாட்டுக்கு அடித்தளம் அமைத்தவரான என் முன்னாள் பயிற்சியாளரான பீட்டர் கார்ட்டர். அவரது பெற்றோர் முன் வெற்றி பெறுவது எனக்கு மேலும் மகிழ்ச்சியளிக்கிறது" என்றார். திறமை உள்ளவர்களை வெற்றி அழகு படுத்தும். திறமையுடன், நல்ல மனம் உள்ளவர்கள் பெரும் பொழுது, வெற்றி அழகு படும்.

ad

ad