புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 பிப்., 2018

நாட்டில் உண்மையான நல்லிணக்கத்திற்கு வித்திடப்படவில்லை-வெறும் கண்துடைப்பே!

நாட்டில் உண்மையான நல்லிணக்கத்திற்கு வித்திடப்படவில்லையென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்தோடு, நல்லிணக்கத்தின் பெயரில் வெறும் கண்துடைப்பே இடம்பெறுகின்றதென அவர் மேலும் தெரிவித்தார்.

முதலமைச்சரால் வழங்கப்பட்டு வரும் வாரம் ஒரு கேள்விக்கு பதில் பகுதியில், நாட்டின் நல்லிணக்கம் தொடர்பில் வினவப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மேற்குறித்தவாறு குறிப்பிட்டார். முதலமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்-

”நல்லிணக்கத்திற்கு புரிந்துணர்வு ஏற்படுவது முக்கியம். நாம் மேன்மையானவர்கள், தமிழர்கள் கீழானவர்கள், கள்ளத்தோணிகள் என்ற எண்ணம் சிங்களவர்கள் மனதில் இருக்கும் வரையில் நல்லிணக்கத்திற்கு இடமில்லை. கிணற்றுக்குள் விழுந்திருக்கும் ஒருவனுக்கும் கிணற்றுக்கு வெளியில் இருக்கும் ஒருவனுக்கும் இடையில் நல்லிணக்கம் ஏற்பட முடியாது.

கிணற்றில் விழுந்திருப்பவனை மேலே எழுப்பி நிலத்தில் நிலைபெறச் செய்தால்தான் இருவரும் நல்லிணக்கத்திற்கு வித்திடலாம். ஆகவே நல்லிணக்கத்திற்கு ஒடுக்கப்பட்டிருக்கும் நாங்கள் விடுதலை அடைந்திருக்க வேண்டும்.

இல்லையென்றால் எம்மைக் கிணற்றுக்குள் வைத்துக்கொண்டே புசிக்க சில உணவு வகைளைக் கொடுத்துவிட்டு தாம் நினைத்தது போல் நல்லிணக்கம் ஏற்பட்டதாக உலகிற்கு அறிவிப்பார்கள். தற்பொழுது நல்லிணக்கம் என்ற பெயரில் நடைபெறுவது வெறும் கண்துடைப்பே. உண்மையான நல்லிணக்கத்திற்கு நாங்கள் வித்திடவில்லை.

நல்லிணக்கம் வேண்டுமென்றால் கைகொடுத்து எம்மை எழுப்பவேண்டியவர்கள் அரசாங்கத்தினரே. இராணுவத்தை எம்மிடையில் வைத்துக்கொண்டு, மத்தியின் அதிகாரத்தை இங்கு பிரயோகித்துக் கொண்டு, எங்கள் பொருளாதார விருத்தியில் உள்ளிடும் உரிமையைத் தம்கைவசம் வைத்துக்கொண்டு அரசாங்கம் நல்லிணக்கம் பேசுகிறது. கிணற்றின் உள்ளே இருப்பவருடன் கிணற்றுக்கு வெளியில் இருப்பவர் சமாதானம் பேசுகின்றார். அவர்கள் நல்லிணக்கத்திற்கான வழிமுறைகளைக் கடைப்பிடிக்கவில்லை என்றே கூறுவேன்.

தென்னாபிரிக்காவில் கறுப்பின மக்களுக்கு ஒரு அரசியல் ரீதியான தீர்வைக் கொடுத்த பின்னரே உண்மைக்கும் சமரசத்திற்குமான ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. இங்கு விழுந்தவர்களை விழுந்திருக்க வைத்துக்கொண்டே வியப்பான ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் விளைகின்றது. அது பயனளிக்காது என்பதே எனது கருத்து” என்றார்.

ad

ad