சனி, மார்ச் 17, 2018

தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்

சிறந்த பேச்சாளரும் எழுத்தாளருமான நாஞ்சில் சம்பத், ம.தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தபோது அவருக்கு கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவியை வழங்கினார் ஜெயலலிதா. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பிளவுபட்டபோது சசிகலா அணியில் நாஞ்சில் சம்பத் பணியாற்றி வந்தார்.

சசிகலா தலைமையிலான அ.தி.மு.க. அம்மா அணியை டிடிவி தினகரன் வழிநடத்தியபோது அவருக்கு ஆதரவாக நாஞ்சில் சம்பத் பொது மேடைகளிலும், விவாத நிகழ்ச்சிகளிலும் வலுவாக குரல் கொடுத்து வந்தார். தற்போது டிடிவி தினகரன் புதிதாக அரசியல் அமைப்பை தொடங்கி உள்ள நிலையில் நாஞ்சில் சம்பத் திடீரென தினகரன் அணியில் இருந்து விலகி உள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், ‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அண்ணா, திராவிடம் என்பதை தவிர்த்து விட்டு என்னால் பேச முடியாது. அண்ணாவையும் திராவிடத்தையும் அலட்சியப்படுத்தி விட்டு கட்சி நடத்தலாம் என டிடிவி தினகரன் நம்புகிறார். அவரது நம்பிக்கை வெற்றி பெற வாழ்த்துக்கள். ஆனால், அதில் நான் இல்லை. இனிமேல் நான் எந்த அரசியலிலும் நான் இல்லை.

டிடிவி தினகரனின் அநியாயத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதற்காக அவருக்கு எதிர்வினையாற்ற மாட்டேன். அரசியல் தமிழில் இனி அடைபட்டுக் கிடக்க மாட்டேன். இனி தமிழ் இலக்கிய மேடைகளில் என்னை பார்க்கலாம்” என்றார்.