சனி, மார்ச் 10, 2018

தமிழ், முஸ்லிம் மக்கள் தமிழர் என்ற உணர்வில் உரிமைக்காக இணைந்து போராடவேண்டிய காலம்,மாவை

தமிழ், முஸ்லிம் மக்கள் தமிழர் என்ற உணர்வில் உரிமைக்காக இணைந்து போராடவேண்டிய காலம் இதுதமிழ்
மக்களின் உரிமைக்காக வழங்கும் அழுத்தங்களை போன்று முஸ்லிம் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளையும் கவனத்தில் கொண்டு இம்முறை ஜெனிவா தீர்மானம் அமைய வேண்டும். தமிழ், முஸ்லிம் மக்கள் தமிழர் என்ற உணர்வில் எமது உரிமைக்காக இணைந்து போராடவேண்டிய காலம் வந்துள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

அடக்குமுறைகளின் கொடுமையினை அனுபவித்தவர்கள் என்ற ரீதியில் முஸ்லிம் மக்கள் மீதான அடக்கு முறையை எம்மால் உணர முடிகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் மதுவரி திருத்தச்சட்டம் மீதான விவாதத்தின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் கண்டிய மற்றும் அம்பாறையில் இடம் பெற்ற சம்பவங்கள் எமது மனங்களை உலுக்கியவைகளாக மாறியுள்ளன.

கடந்த காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் பல இடம்பெற்றுள்ளன. வரலாற்றுக் காலத்தில் இருந்து முஸ்லிம் மக்கள் மீதான அடக்கு முறை இடம் பெற்றமை பதிவாகியுள்ளது. அப்போது தமிழ்த் தலைமைகள் முஸ்­லிம்கள் தொடர்பில் குரல் கொடுக்கவில்லை என்ற கருத்து நிலவியது. எனினும் தந்தை செல்வா முஸ்லிம் மக்கள் குறித்து தமிழ் மக்களின் குரலாய் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தார்.

இன்று முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராக நிகழும் அடக்குமுறை போன்றே தமிழ் மக்களும் அடக்குமுறைக்கு ஆளானார்கள். தமிழ் மக்கள் அடக்குமுறையின் போர்வையில் படுகொலை செய்யப்பட்டனர். அன்று சிறுபான்மை மக்களான எம்மை அடக்கியதை போலவே இன்று முஸ்லிம் மக்கள் மீதும் அடக்குமுறை பிரயோகிக்கப்பட்டு ஒடுக்கப்படுகின்றனர்.

முஸ்லிம் மக்களின் துன்பம், வலி என்ன வென்பது குறித்து அடக்குமுறையை அனுபவித்த ஒரு இனமாக எம்மால் உணர முடிகின்றது. கண்டியில் இடம்பெற்ற சம்பவம் யாரால் இடம் பெற்றது என்பது குறித்தும் அது நடக்கவிருப்பது என்பது குறித்தும் பொலிஸ், புலனாய்வு துறைக்கு தெரிந்திருக்க வேண்டும்.

பிரச்சினைகளுக்கு தீர்வு காண இன, மத ரீதியில் அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிடக் கூடாது. ஜனாதிபதியும், பிரதமரும் நிலைமைகளை சரியாக இனங்கண்டு பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். அதேபோல் இன்று இலங்கையின் கடந்த கால யுத்த குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், தமிழ் மக்களின் காணி விடுவிப்பு, மீள் குடியேற்றம், காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் குறித்து ஜெனிவாவில் தற்போது கூடியுள்ள மனித உரிமைகள் பேரவையில் ஆராயப்படுகிறது.

அதற்கான தீர்வு ஒன்றினை நாம் எதிர்பார்த்து செயற்பட்டு வரும் நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள முஸ்லிம் மக்களுக்கு எதிரான அடக்குமுறை சம்பவங்களையும் பதிவு செய்து தமிழ் மக்கள் போல் முஸ்லிம் மக்களின் உரிமைக்கும் தீர்வு ஒன்றினை பெற்றுக்கொடுக்க வேண்டும். முஸ்லிம் மக்களும் இந்த நாட்டில் சம உரிமையுடன் வாழக்கூடிய அங்கீகாரத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

கடந்த காலத்தில் அடக்குமுறை இராணுவ ஆட்சி ஒன்று இடம் பெற்ற நிலையில் அதில் இருந்து விடுபட வேண்டும் என்பதற்காகவே மக்கள் நல்லாட்சி அரசாங்கம் ஒன்றை உருவாக்கினர்.

இந்த ஆட்சியிலும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக அடக்குமுறை கையாளப்படுகின்ற நிலையில் நல்லாட்சி மீது நம்பிக்கை இழக்கப்பட்டு வருகின்றது. எனவே, அரசாங்கம் உடனடியாக மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் நடவடிக்கை களை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.