வியாழன், மார்ச் 08, 2018

சர்வதேச சமவாய சட்டத்தை தமிழர்கள் ஏற்கப்போதில்லை;மாவை

வலுக்கட்டாயமாக காணாமலாக்கப்படுவதிலிருந்து சகலரையும் பாதுகாத்தல் பற்றிய சர்வதேச சமவாய சட்டத்தை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு இந்தச் சட்டமூலம் விடையாக அமையும் என மக்கள் நம்பவில்லையென்றும், முறையாக விசாரிக்கப்பட்டு, குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்கி, எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறதிருக்கும் வகையிலான சட்டத்தைக் கொண்டுவருவதே ஆக்கபூர்வமானதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

வலுக்கட்டாயமாக காணாமலாக்கப்படுவதிலிருந்து சகலரையும் பாதுகாத்தல் பற்றிய சர்வதேச சமவாயச் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மாவை சேனாதிராஜா இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ஒரு சம்பவம் நீதிக்கு அப்பாற்பட்டதாக இருக்குமாயின் அதற்கான சட்டத்தைக் கொண்டுவரும்போது அது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடியதாக இருப்பதாக வேண்டும். எதிர்காலத்தில் இடம்பெறாமல் இருப்பதைத் தடுப்பது முக்கியமானது. எனினும், யுத்தத்துக்குப் பின்னர் 16 ஆயிரம் அல்லது 20 ஆயிரம் பேர் காணாமல்போயுள்ளனர் என்ற பதிவு உள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எந்த சந்தர்ப்பத்தில் காணாமல் ஆக்கப்பட்டனர். போர் முடியும் தறுவாயில் இராணுவத்தினடம் சரணடைந்தவர்கள், பெற்றோர் உறவினர்கள் அவர்களை இராணுவத்தினரிடம் கையளித்தவர்கள் என பலர் காணாமல் போயுள்ளனர்.

இவ்வாறான நிலையில் இந்தச் சட்டமானது இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்கள் எங்கே இருக்கின்றனர் என்பதைக் கூறுவதற்கு முடியுமானதாக இருக்க வேண்டும்.

போரின் காரணமாக, போர் முனையிலும் அதற்குப் பின்னரும் ஏற்பட்ட போர் குற்றங்களின் அடிப்படையில் தான் ஐ.நா மனித உரிமைப் பேரவையின் பிரேரணை உருவாக்கப்பட்டு பல நாடுகளின் இணக்கத்தில் ஏற்படுத்தப்பட்ட சமவாயத்தின் அடிப்படையிலேயே இந்தச் சட்டம் கொண்டுவரப்படுகிறது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு தீர்காணப்பட வேண்டும். சென்ற ஆட்சியில் இது இடம்பெற்றிருந்தாலும் இந்த அரசாங்கம் பொறுப்புக் கூறவேண்டும்.

இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும், காணாமல் போனவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு இந்தச் சட்டமூலம் விடையாக அமையும் என மக்கள் நம்பவில்லையென்றும், முறையாக விசாரிக்கப்பட்டு, குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்கி, எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறதிருக்கும் வகையிலான சட்டத்தைக் கொண்டுவருவதே ஆக்கபூர்வமானதாக இருக்கும்.

காணாமல் போனவர்களின் உறவுகள் கையளிக்கப்பட்டவர்கள் எங்கே என்றே கேட்கின்றனர். மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் பேச்சுவார்த்தை நடத்தியபோது அவர் முன்னிலையிலும் கூட காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயம் பேசப்பட்டபோது, பசில் ராஜபக்ஷ பதிவு இருப்பதாக பதில் வழங்கியிருந்தார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இராணுவத்தில் சரணடைந்தவர்களின் பட்டியல் உங்களிடம் இருக்கிறதா? இல்லையா? இதனை பகிரங்கப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம். அதன் அடிப்படையில் ஜனாதிபதி நியமித்துள்ள குழு விசாரணைகளை நடத்த வேண்டும். பொது மக்கள் கொல்லப்பட்டார்களா இல்லையா. அவர்களுக்கு என்ன நடந்தது என்பதைக் கூறவேண்டும் என்றார்