வியாழன், மே 10, 2018

வவுனியாவில் சிறைக்கைதிகளுக்கு அநீதி நடப்பதாக தெரிவித்து வீதியில் இறங்கிய சட்டத்தரணிகள்


வவுனியா சிறைச்சாலையில் இடம்பெறும் ஊழல் குற்றச்சாட்டிற்கு எதிராக இன்று (10.05.2018) வவுனியா சட்டத்தரணிகள் ஒரு மணித்தியாலயம் (11.00 மணி தொடக்கம் 12.00 மணி வரை) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இப் பணிப்பறக்கணிப்பு தொடர்பாக வவுனியா மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரும் மூத்த சட்டத்தரணியுமான மு.சிற்றம்பலம் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

வவுனியா சிறைச்சாலையில் இடம்பெறும் அராஜகங்களை எதிர்த்து தாமாக குரல் கொடுக்க முடியாத விளக்கமறியல் கைதிகள் சார்பிலே சட்டத்தரணிகளான நாங்கள் அவர்களுடைய நிலைமைகளை வெளி உலக மக்களுக்குத் தெரிவிப்பதற்காகத்தான் இன்றைய பணிப்பறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியாவில் சிறைச்சாலை உருவாக்கப்படும் போது வடபகுதியிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு வெளியேற முடியாத மக்களுக்கு உதவியாக இருக்கும் என்ற அடிப்படையிலே அது ஏற்படுத்தப்பட்டது. ஒரு கைதி நீட்டி நிமிர்ந்து படுப்பதானால் ஒரு நாளைக்கு மூவாயிரம் ரூபா கொடுக்கவேண்டும் அங்குள்ள சிறைக்காவலர்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பினை உள்ளிருந்து வெளியே எடுப்பதாக இருந்தால் ஒரு நிமிடத்திற்கு நூறு ரூபா கொடுக்கவேண்டும்.

வவுனியா நீதிமன்றம் கஞ்சா, அபின் போன்ற போதைப் பொருட்கள் பாவனையில் இறுக்கமாக நிலையை கடைப்பிடிக்கின்றது. ஆனால் சிறைச்சாலையில் நீதிமன்றம் எதைத்தடுக்க நினைக்கின்றதோ அது தாராளமாகவே கிடைக்கின்றது.

ஏழைகள் துன்புறுத்தப்படுவதும் ஏழைகளுடைய பணம் வஞ்சிக்கப்படுவதும் ஏழைகளின் கஸ்டத்தில் ஒரு சிலர் பணம் சம்பாதிக்கின்றதை நிறுத்த வேண்டும் பொதுமக்கள் மத்தியிலே நாங்கள் பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தோம். பொதுமக்கள் தொடர்பில் போதிய விழிப்பணர்வு இல்லாத காரணத்தினால் இன்றைய பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டுள்ளோம்.

உடனடியாக இங்கு கடமையாற்றும் அனைத்து உத்தியோகத்தர்களும் மாற்றப்பட்டு புதிதாக உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவேண்டும். சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் சுதந்திரமாக பாரபட்சமற்ற ஒரு குழுவை அமைத்து இங்கு இடம்பெறுகின்ற அநீதிகளுக்கு சாட்சிகள் மூலம் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

இந்த விடயங்களை செய்ய முடியாது விட்டால் விளக்கமறியல் சிறைச்சாலையை மூடி விடவும் சிலருக்கு பணம் சம்பாதிப்பதற்காக சிறைச்சாலை இருக்கக்கூடாது மக்களுடைய தேவைக்கே சிறைச்சாலை

சிறைச்சாலையில் இடம்பெறும் அநீதிகளை நாங்கள் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு நீதிமன்றத்தில் தண்டம் விதிக்கப்பட்டு நீதிமன்ற சிறைக்கூடத்தில் வைக்கப்பட்ட ஒருவர் தனக்கு விதிக்கப்பட்ட தண்டத்தைச் செலுத்தி விரைவாக வெளியேறுவதனால் அங்கு நின்ற சிறைக்காவலருக்கு நூறு ரூபாய் வழங்கவேண்டும்.

நீதியின் மூக்கின் நுணியில் இந்த அநியாயம் நடைபெறுகின்றது இவற்றை வெளிக்காட்டுவதற்காகவே இன்றைய வெளிநடப்பினை மேற்கொண்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.