செவ்வாய், மே 15, 2018

அதிக ஓட்டு எங்களுக்குதான்.. ஆனால் சீட்டு கிடைக்கல - காங்கிரஸ் கட்சிக்கு நேர்ந்த சோகம்

கர்நாடகாவில் 222 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடந்து
வருகிறது. பெரும்பான்மைக்கு தேவையான 112 இடங்களை எந்த கட்சியும் பெறவில்லை. அதிகபட்சமாக பாஜக 106 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
ஆளும் காங்கிரஸ் கட்சி 74 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 39 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. இந்நிலையில், சீட்டு எண்ணிக்கையில் காங்கிரசை பாஜக பின்னுக்கு தள்ளியிருந்தாலும், ஓட்டு எண்ணிக்கையில் காங்கிரஸ் பாஜகவை பின்னுக்கு தள்ளியுள்ளது.
தற்போது வரை, காங்கிரஸ் கட்சி ஒரு கோடியே 16 லட்சம் (37.9%) வாக்குகள் பெற்றுள்ளன. பாஜக ஒரு கோடியே 12 லட்சம் (36.5%) வாக்குகள் பெற்றுள்ளன. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 54 லட்சம் (18.1%) வாக்குகள் பெற்றுள்ளன. அதாவது, காங்கிரசை விட பாஜக 4 லட்சம் வாக்குகள் பின்தங்கியே உள்ளன.
ஆனால், சீட்டு கணக்கு அடிப்படையில் பாஜகவை விட காங்கிரஸ் கட்சி 35 தொகுதிகள் வரை பின் தங்கியுள்ளது. தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் - மஜத கூட்டணி அமைத்திருந்தால் பாஜகவை வென்றிருக்க முடியும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.