புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஆக., 2018

“ 35 ” ஐ எட்டிப்பிடிக்கும் மலிங்க - முற்றுப்புள்ளி வைப்பாரா? தொடர்வாரா?

தலை முடியில் ஆங்காங்கே பொன்னிறமு



ம் கறுப்பு நிறம் கலந்த முடியுடன் சிங்கத்தைப் போன்ற பார்வையுடன் இலக்கை நேக்கிப் பார்த்தபடி எதிரணியை திணறடிக்கும் நோக்குடன் ஓடிவரும் யோக்கர் மன்னன் லசித் மலிங்க இலங்கை கிரிக்கெட் அணிக்கு கிடைத்த வரம்.

வேகப்பந்து வீச்சாளர்களுக்கே உரிய ஆக்ரோஷமான வேகமும், பந்து வீச்சில் வேறெந்த பந்து வீச்சாளர்களும் கையாண்டிராத வித்தியாசமான பாணியும், தனது யோக்கர் பந்து வீச்சின் மூலம் தலைசிறந்த துடுப்பாட்டக்காரர்களுக்கு கிரிக்கெட்டில் அச்சுறுத்தலாக விளங்கிய இலங்கை அணியின் இருபதுக்கு 20 போட்டிகளின் முன்னாள் தலைவரும் இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத்தை இலங்கைக்கு வென்றுகொடுத்த தலைவருமான நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மலங்கவின் 35 ஆவது பிறந்த தினம் இன்றாகும்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாறு

1983 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி பிறந்த லசித் மலிங்க தனது 20 ஆவது வயதில், 2004 ஜூலை மாதம் 3 ஆம் திகதி இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கிரிக்கெட் உலகில் காலடி எடுத்து வைத்தார்.

அப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் லசித் மலிங்க வேகப் பந்து வீச்சில் தனது புதிய யுக்தியை சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கு வெளிக்காட்டி 14 ஓவர்களை மாத்திரம் வீசினார்.

இதில் மூன்று ஓவர்களுக்கு ஓட்டம் எதையும் கொடுக்காது தடுத்ததுடன் அந்த இன்னிங்ஸில் இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார்.

இந்த இன்னிங்ஸில் மலிங்க லீமனை எல்.பி.டபிள்யூ.முறையில் ஆட்டமிழக்க செய்ததன் மூலம் தனது விக்கெட் தகர்ப்புக்களை ஆரம்பித்தார்.

இதையடுத்து அப் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் தனது யோக்கர் பந்து வீச்சின் மூலம் அவுஸ்திரேலிய வீரர்களை நிலைகுலைய வைத்த மலிங்க, 15.1 ஓவர்களை வீசி 42 ஓட்டங்களை கொடுத்து 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இருப்பினும் டெஸ்ட் கிரக்கெட் வரலாற்றில் அதிகளவாக சாதிக்காத லசித் மலிங்க, துடுப்பாட்டத்தில் 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 37 இன்னிங்ஸில் 275 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளதுடன் இவரின் ஓட்ட எண்ணிக்கை சராசரி 11.45 ஆகும்.

அத்துடன் 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய மலிங்க 59 இன்னிங்ஸில் 3349 ஓட்டங்களைக் கொடுத்து 101 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளதுடன், டெஸ்ட் போட்டியில் பந்து வீச்சில் மலிங்கவின் பெறுதி 50 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்கள் என்பதுடன் இவரது சராசரி 33.15 ஆகும்.

உபாதை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்ட மலிங்க, கடந்த 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி இந்தியாவுக்கு எதிராக ஆரம்பமான மூன்றாவது டெஸ்ட் தொடரின் முதல் இன்னிங்ஸில் 30 ஓவர்களுக்கு 119 ஓட்டங்களை கொடுத்து மூன்று விக்கெட்டுக்களை பெற்றுக் கொண்டார்.

இந்த போட்டியில் இந்திய அணி ஐந்து விக்கெட்டுக்களினால் வெற்றியீட்டியிருந்தது. இப் போட்டியே மலிங்கவின் இறுதி டெஸ்ட் போட்டியாக அமைந்தது.

ஒருநாள் கிரிக்கெட் வரலாறு

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிகளவாக பேசப்படாத லசித் மலிங்க, ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென ஒரு தனி இடத்தை தனது துல்லியமான யோக்கர் பந்து வீச்சின் மூலம் தக்க வைத்துக் கொண்டார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஆசிய கிண்ணத்தின் நான்காவது போட்டி இலங்கை மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துக்கிடையில் (UAE) தம்புள்ளையில் ஜூலை மாதம் 17 ஆம் திகதி இடம்பெற்றது. இப் போட்டியே மலிங்க களம்புகுந்த முதல் ஒருநாள் போட்டியாகும்.

தனது கன்னிப் போட்டி என்பதனால் மலிங்க அப் போட்டியில் துடுப்பாட்டத்தில் 5 ஓட்டங்களையும் பந்து வீச்சில் 10 ஓவர்களுக்கு 39 ஓட்டங்களை கொடுத்து ஒரு விக்கெட்டினை மாத்திரேமே பெற்றுக் கொண்டார். அந்த வகையில் ஐக்கிய அரபு இராஜ்ஜிய அணியின் தலைவர் குராம் கானை போல்ட் முறையில் ஆட்டமிழக்க வைத்து ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டை ருஷிக்க ஆரம்பித்தார்.

அடுத்தடுத்து மலிங்கவுக்கு பல போட்டிகள் பல்வேறு அனுபவங்களையும் பாடங்களையும் கற்றுக் கொடுக்க விக்கெட்டுக்களை பதம் பார்ப்பதில் இவருக்கு மோகம் அதிகரித்தது.

அந்த வகையில் பந்து வீச்சில் தனக்கென தனியான ஒரு பாணியையும் யோக்கர் முறையினூடாக எதிரணியின் துடுப்பாட்டக் காரர்களுக்கு அச்சுறுத்தலையும் காண்பித்த மலிங்க தான் யார் என்பதை 2007 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலக கிண்ணப் போட்டியின் போது நிரூபித்துக் காட்டினார்.

இதன்படி 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையேயான போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி பெறுவதற்கு 32 பந்துகளுக்கு 5 விக்கெட்டுக்கள் கைவசமிருக்க 4 ஓட்டங்கள் மாத்திரமே தேவ‍ை என்ற நிலையில் இருந்தது.

இருப்பினும் மலிங்க தென்னாபிரிக்க அணிக்கு இறுதித் தருவாயில் பாரிய சிம்மசொப்பனமாகத் திகழந்து அரங்கில் பார்வையாளர்கள் மத்தியில் ஆராவாரத்தை அதிகரித்தார். அந்த வகையில் அவர் தென்னாபிரிக்க அணியின் அடுத்தடுத்து நான்கு விக்கெட்டுக்களை தகர்த் தெறிந்து, ஹெட்ரிக் சாதனையும் புரிந்தார். எனினும் இந்த போட்டியில் தென்னாபிரிக்க அணி அபார நெருக்கடிக்கு மத்தியில் வெற்றி கொண்டது.

204 ஒருநாள் பேட்டிகளில் விளையாடிய லசித் மலிங்க, துடுப்பாடத்தில் 102 இன்னிங்ஸுகளில் களமிறங்கி 496 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளார். இதில் அவரது அதிகப்படியான ஓட்டம் 56 ஆகும்.

பந்து வீச்சில், 204 போட்டிகளில் 198 இன்னிங்ஸுகளில் 8 ஆயிரத்து 705 ஓட்டங்களை கொடுத்து 301 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார். ஒருநாள் போட்டியில் பந்து வீச்சில் மலிங்கவின் பந்துவீச்சுப்பெறுதி 38 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்கள் என்பதுடன் இவரது சராசரி 28.92 ஆகும்.

இறுதியாக லசித் மலிங்க 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதி இந்தியாவுக்கு எதிராக இடம்பெற்ற போட்டியே இவரின் இறுதி ஒருநாள் போட்டியாக அமைந்தது. இப் போட்டியில் 8 ஓவர்கள் பந்து வீசிய மலிங்க 35 ஓட்டங்களை கொடுத்து ஒரு விக்கெட் மாத்திரம் கைப்பற்றினார்.

ஒருநாள் தொடரில் இதுவரை அதிகளவான ஹெட்ரிக் சாதனைகளை நிகழ்த்திய வீரர் என்ற சாதனையும் மலிங்கவையே சாரும். அதன்படி கடந்த 2007 ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணிக்கு எதிராகவும் 2011 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்கு எதிராகவும் அதே ஆண்டில் கென்ய அணியுடனான போட்டிகளின் போதும் ஹெட்ரிக் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இருபதுக்கு 20 கிரிக்கெட் வரலாறு

கடந்த 2004 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் சபை கிரிக்கெட் ரசிகர்களுக்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2006 ஆம் ஆண்டும் ஜூன் மதம் 6 ஆம் திகதி இங்கிலாந்து மண்ணில் இடம்பெற்ற இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான போட்டியே மலிங்கவின் முதலாவது இருபதுக்கு 20 போட்டியாகும்.

இந்த போட்டியில் மலிங்க மூன்று ஓவர்களை வீசி 25 ஓட்டங்களை கொடுத்த போதும் அவரால் விக்கெட்டுக்களை தகர்க்க இயலாமல் போனது, இருப்பினும் அடுத்தடுத்து இடம்பெற்ற பல இருபதுக்கு 20 போட்டிகளில் தனது யோக்கரின் திறமையை நிரூபித்துக்காட்டி எதிரணியின் வீரர்களுக்கு பந்து வீச்சில் சிம்மசொப்பனமாக திகழ்ந்தார் மலிங்க.

கடந்த 2014 ஆம் ஆண்டில் பங்களாதேஷில் இடம்பெற்ற இருபதுக்கு 20 தொடரின் இறுதிப் போட்டிக்கு தலைமை தாங்கிய மலிங்க இந்திய அணியை வெற்றிகொண்டு இலங்கையின் இருபதுக்கு 20 உலக கிண்ணத்தை கைப்பற்றும் கனவையும் நனவாக்கி காட்டினார்.

அத்துடன் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி பங்களாதேஷ் அணியுடன் இடம்பெற்ற இருபதுக்கு 20 போட்டியின் போது 24 ஓட்டங்களை க‍ெடுத்து அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றி ஹெட்ரீக் சாதனையும் புரிந்துள்ளார்.

68 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடியுள்ள லசித் மலிங்க 1780 ஓட்டங்களை கொடுத்து 90 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார். இதில் மலிங்கவின் பெறுதி 31 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்கள் என்பதுடன் இவரது சராசரி 19.77 ஆகும்.

இறுதியாக மலிங்க கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக இடம்பெற்ற போட்டியே இவரின் இறுதி இருபதுக்கு 20 போட்டியாகும். இதில் மலிங்க 4 ஓவர்களுக்கு 31 ஓட்டங்களை கொடுத்து ஒரு விக்கெட்டினை மாத்திரம் கைப்பற்றினார்.

ஏனைய போட்டிகள்

மலிங்க சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மாத்திரமல்ல இந்தியன் பிரீமியர் லீக், அவுஸ்திரேலிய பிக்பாஸ், மேற்கிந்தியத் தீவுகள் லீக் போட்டிகள் உட்பட பல சர்வதேச லீக் போட்டிகளிலும் உள்ளூர் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

கிரிக்கெட் வரலாற்றில் பொதுவாக வேகப்பந்து வீச்சாளர்கள் அடிக்கடி உபாதைக்குள்ளாவதும் அவர்களின் பந்து வீச்சின் வேகம் காலப் போக்கில் குறைவடைவதும் வழக்கமான ஒரு விடயம். இதற்கு லசித் மலிங்கவும் விதிவிலக்கல்ல.

காலப் போக்கில் மலிங்கவுக்கு எற்பட்ட உபாதைகள் என்பவற்றின் காரணமாக மலிங்கவின் பந்து வீச்சும் சரிவை நோக்கி செல்ல ஆரம்பித்தது. அதன்படி அவரின் பந்துவீச்சில் முன்னைய வேகமும் துல்லியமும் இல்லாமையின் காரணமாகவும் மலிங்க அணியிலிருந்து ஓரம் கட்டப்பட்டார்.

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற சம்பியன் கிண்ணத் தொடரின் போது இலங்கை அணிக்காக சேவையாற்ற இலங்கை கிரிக்கெட் தேர்வாளர்களால் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்ட மலிங்கவினால் அத் தொடரில் பந்து வீச்சிலும் களத்தடுப்பிலும் தேர்வாளர்கள் எதிர்பார்த்த சேவையை அவரால் வழங்க முடியாமல் போனது.

அது மாத்திரமன்றி மீண்டும் இவர் திறமை மீது நம்பிக்கை வைத்த இலங்கை தெரிவுக்குழு இலங்கையில் நடைபெற்ற சிம்பாப்வே, இந்தியாவுடனான தொடர்களுக்கு தெரிவு செய்யப்பட்டார். ஆனால் இத்தொடர்களில் கூட அவர் தன்னை நிரூபித்துக் காட்டுவதை தவறவிட்டார்.

ஐந்து போட்டிகள் கொண்ட இந்தியத் தொடரில் 39 ஓவர்களை வீசி 243 ஓட்டங்களை கொடுத்து மூன்று விக்கெட்டுக்களை மாத்திரம் கைப்பற்றியதன் மூலம் தனது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததா என்ற சந்தேகம் அவரின் மனதிலும் ரசிகர்களின் மனதிலும் தோன்றியது.

எனினும் இம் மாதம் தென்னாபிரிக்க அணியுடன் நடைபெற்ற இருபதுக்கு - 20 போட்டியில் லசித் மலிங்க களமிறங்க வாய்ப்புள்ளதாக திலான் சமரவீர தெரிவித்தார். இருப்பினும் அதுவும் சாத்தியப்படவில்லை.

இந்நிலையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இடம்பெறவுள்ள ஆசியக்கிண்ண தொடரின் போது, இலங்கை கிரிக்கெட் அணியின் குழாமில் மலிங்க இணைத்துக் கொள்ளப்படலாம் என தெரிவுக்குழுவின் தலைவர் கிரஹாம் லெப்ரோய் தெரிவித்துள்ளார்.

எவ்வாரெனினும் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும் மலிங்கவின் கிரிக்கெட் பயணம் முற்றுப் புள்ளியாக அமையுமா? அல்லது அவரது கிரிக்கெட் வாழ்க்கை தொடருமாவென..

ad

ad