03.04.2019 - புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் தேர்த்திருவிழா www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

வெள்ளி, ஆகஸ்ட் 17, 2018

அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் தொடங்கியது


பா.ஜ.க கட்சியின் பிதாமகனும், இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாய் தனது 93-வது வயதில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று (ஆக.16) காலமானார். மிகச்சிறந்த பேச்சாளரும், கவிஞரும், மாபெரும் அரசியல் தலைவருமான இவரது மறைவுக்கு இந்திய நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணா மேனன் பார்க் வீட்டில் வைக்கப்பட்டுள்ள வாஜ்பாய் உடலுக்கு பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி இருவரும் வாஜ்பாய் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இன்று காலை , வாஜ்பாய் உடலுக்கு தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம், மக்களவை சபாநாயகர் தம்பிதுரை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இன்று காலை 9-30 மணிக்கு வாஜ்பாய் அங்கிருந்து, அலங்கரிக்கப்பட்ட ராணுவ ஊர்தியில் டெல்லி தீன்தயாள் உபாத்யாய் மார்க் பகுதியில் உள்ள பாரதீய ஜனதா தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. 9-30 மணிக்கு புறபட்ட ஊர்தி பாரதீய ஜனதா அலுவலகத்திற்கு 11.00 மணிக்கு வந்து சேர்ந்தது. அங்கு வாஜ்பாய் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அங்கு பிரதமர் மோடி, பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்பட பாரதீய ஜனதா தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர் .

பாஜக தலைமை அலுவலகத்தில் உள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு, பூடான் மன்னர் ஜிக்மே கேஷர் நம்கேல் வாங்சுக் அஞ்சலி செலுத்தினார்.

அங்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி முடிந்ததும், இறுதி ஊர்வலத்திற்கான பணிகள் நடைபெற்றது. 1.45 மணிக்கு மேல் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. வாஜ்பாயின் உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அங்கிருந்து ஊர்வலமாக காந்தி சமாதி மற்றும் இந்திரா காந்தி சமாதி அருகே உள்ள ‘ராஷ்ட்ரீய ஸ்மிரிதி ஸ்தல்’ என்ற இடத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

அங்கு மாலை 4 மணி அளவில் முழு அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்படுகிறது.

வாஜ்பாயின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், பல்வேறு மாநிலங்களின் முதல்- மந்திரிகள், கட்சி தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.