புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஆக., 2018

திமுகவின் கனவை நிறைவேற்ற இன்று புதிதாய் பிறந்திருக்கிறேன் : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு


திமுகவின் கனவை நிறைவேற்ற இன்று புதிதாய் பிறந்திருக்கிறேன் என திமுக தலைவரான பின்னர் முதன்முறையாக பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.


திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. திமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகை தந்துள்ளனர். அண்ணா அறிவாலயம் வளாகத்திலும் திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.

பொதுக்குழு கூட்டம் துவங்கியதும், மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு. கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இரண்டு நிமிடம் மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இதையடுத்து, மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதேபோல், முன்னாள் ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா மற்றும் முன்னாள் ஐநா பொதுச்செயலாளர் கோபி அன்னான் ஆகியோரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

மேலும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் பொதுச்செயலாளர் அன்பழகன் தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதை தொடர்ந்து அண்ணா அறிவாலயத்திற்கு வெளியே கூடியிருந்த தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

தலைவராக அறிவிக்கப்பட்ட மு.க. ஸ்டாலின், அன்பழகனிடம் வாழ்த்துப் பெற்றார்.

50 ஆண்டுகளுக்கு பிறகு திமுகவின் 2-வது தலைவரானார் மு.க. ஸ்டாலின்.

திமுக பொருளாளராக துரைமுருகன் பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டார்.

திமுக செயல் தலைவர் பதவிக்கான கட்சி விதி பிரிவு 4 நீக்கப்பட்டதாக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்தார்.

தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் பேசினர்.

கனிமொழி பேசும் போது கூறியதாவது;-

திமுக தொண்டர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் நாள் இது. மெரினாவில் இடம் கேட்டு ஸ்டாலின் தவித்த தருணங்களை அறிவேன். இடம் இல்லை என்றவுடன் மெரினாவில் போராட்டம் நடத்த ஆலோசனை, உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக செயலாற்றினார் ஸ்டாலின் என கூறினார்.

பொருளாளராக தேர்ந்து எடுக்கபட்ட துரைமுருகன் பேசும் போது கூறியதாவது;-

உலக தமிழர்களின் உரிமைக்காக போராடியவர் கருணாநிதி. சிவப்பு கம்பளத்தில் நடந்து கருணாநிதி பதவியில் அமரவில்லை.
சிலுவைகளை சுமந்தே பதவிகளை அடைந்தார். தி.மு.கவின் பேச்சாளர் என்பதிலே தான் எனக்கு பெருமை. சிறுவனாக பார்த்து என் கண்முன் வளர்ந்தவர் இன்று தலைவராகி இருக்கிறார். தம்பி என அழைத்துக் கொண்டிருந்த ஸ்டாலின் இன்று என் மரியாதைக்குரிய தலைவர்.

தி.மு.கவில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. கட்சியை காப்பாற்ற சரியான ஆள் ஸ்டாலின் தான். கருணாநிதியே கொடுத்த பதவியாக கருதி ஏற்கிறேன். பொருளாளர் வேலை நிதி சேகரிப்பது தான், நிதி கொடுங்கள்... இல்லாதவர்கள் ஆதரவு கொடுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

என் உயிரினும் மேலான என கருணாநிதி பாணியில் உரையை தொடங்கினார் திமுக தலைவர் ஸ்டாலின்.

அவர் பேசும் போது கூறியதாவது:-

கருணாநிதி போல் மொழி ஆளுமை தனக்கு கிடையாது. நான் கருணாநிதி இல்லை; அவர் போல் பேசத் தெரியாது; பேசவும் முடியாது.
எதையும் முயன்று பார்க்கக் கூடிய துணிவு கொண்டவனாக இருக்கிறேன் . திமுக தலைவராக நான் பொறுப்பேற்றதை பார்க்க கருணாநிதி இல்லையே என்பதே எனது ஒரே குறை.

கருணாநிதியின் மகன் என்பதைவிட தொண்டன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன். கருணாநிதி இல்லாத அறிவாலயத்தை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

“அப்பாவிடம் நல்ல பெயர் வாங்குவது 100 மடங்கு கடினமானது... பெரியப்பாவிடம் நல்ல பெயர் வாங்குவது 200 மடங்கு கடினமானது...

நீங்கள் பார்த்த ஸ்டாலின் வேறு... மு.க. ஸ்டாலினாகிய நான் இன்று புதிதாக பிறந்துள்ளேன். திமுகவின் கனவை நிறைவேற்ற இன்று புதிதாய் பிறந்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

ad

ad