புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஆக., 2018

காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படவில்லை: அமைச்சர் ஜெயக்குமார்


கருணாநிதி உடல் அடக்கத்துக்கு இடம் ஒதுக்குவதில் காழ்ப்புணர்ச் சியுடன் செயல்படவில்லை. திமுகவின் பழிச் சொற்கள் கண்டு கலங்கமாட்டோம். கடமை தவறமாட்டோம் என அதிமுக தெரிவித்துள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடல் அடக்கத்துக்காக இடம் ஒதுக்கும் விவகாரத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்துகளுக்கு அமைச்சர் டி.ஜெயக்குமார் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
திமுக தலைவர் கருணாநிதி முதுமையாலும், உடல்நலக் குறைவாலும் காலமானார் என்ற துயரமான நிகழ்வு நடைபெற்ற சில மணி நேரங்களுக்கு உள்ளாகவே, அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுக அரசு மீது அபாண்டமான குற்றச்சாட்டையும், நஞ்சை விதைக்கும் பழிச் சொல்லையும் கூறியுள்ளார். இதைக் கண்டு உள்ளம் பதைபதைக்கிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு இறுதி மரியாதை செலுத்த தமிழக அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
மெரீனா கடற்கரையில் புதிய கல்லறைகள், நினைவிடங்கள் அமைப்பது தொடர்பாக ஐந்து மனுதாரர்கள் தாக்கல் செய்த மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குகளாக நிலுவையில் இருந்தன.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை மெரீனா கடற்கரையில் இருந்து அப்புறப்படுத்திவிடத் துடித்தவர்கள் தொடுத்த வழக்குகள்தான் அவை.
ஐந்து வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் சட்டச் சிக்கல்கள் உருவாகி கடைசி நேரத்தில் பெரும் குழப்பம் ஏதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால்தான் அண்ணாசதுக்கத்தில் இடம் தருவது இயலாமல் போனது.
ஏது காழ்ப்புணர்ச்சி? அடக்கத்துக்காக காரியங்கள் நடைபெறுவதில் நடைமுறை இடர்ப்பாடுகள் வந்துவிடக் கூடாது என்பதால், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு எதிரே ராஜாஜி, காமராஜர், பக்தவத்சலம், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரது நினைவிடங்களுக்கு அருகே மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும் 2 ஏக்கர் நிலம் ஒதுக்க அரசு முன்வந்தது. அதில் ஏது காழ்ப்புணர்ச்சி?
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திருவுருவப் படத்தை சட்டப் பேரவைக்குள் திறந்து வைக்க எதிர்ப்புத் தெரிவித்து கேலி பேசியது திமுக. மெரீனா கடற்கரையில் இருந்து ஜெயலலிதாவின் நினைவிடத்தை அப்புறப்படுத்துவோம் என மேடை போட்டுப் பேசிய அந்தக் கட்சியினருக்கு மனசாட்சி இருக்கிறதா என்ற கேள்வியே எழுகிறது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது எண்ணற்ற வழக்குகளைப் போட்டு சிறையில் தள்ளி, சித்ரவதை செய்து அவருக்கு மனவேதனையையும், அவமானத்தையும் பரிசளித்த திமுகவினருக்கு, அதிமுக அரசின் களங்கமில்லாத வெள்ளை உள்ளம் புரியாது.
காட்சிக்கு எளியவர்களாய், கடுஞ்சொல் அற்றவர்களாய், தமிழகத்தை வலிமை மிக்க எதிர்காலம் நோக்கி வழிநடத்திக் கொண்டிருக்கும் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நாங்களும், திமுக தலைமை பழைய பாதையில் பயணித்து பழிச் சொல் வீசுவது கண்டு கலங்கப் போவதும் இல்லை-கடமை தவறப் போவதும் இல்லை.

ad

ad