புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஆக., 2018

எதிர்கட்சித் தலைவர் பதவிக்கு சொந்தக்காரர் சம்பந்தன் மட்டுமே! -அதைப் பறிப்பது பெரும் ஜனநாயக மீறலாகும்-

நாடாளுமன்ற சம்பிரதாய மற்றும் ஜனநாயக அடிப்படையில் எதிர்கட்சித் தலைவர் பதவி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்,சம்பந்தனிடமே இருக்க வேண்டும்.அதைப் பறிக்க நினைப்பது பெரும் ஜனநாயக மீறலாகும்.எதிர்கட்சித் தலைவர் பதவியை வகிப்பதற்கு சம்பந்தனுக்கு இருக்கின்ற அரசியல் உரிமை தொடர்ந்தும் பாதுகாக்கப்படும் என்று சுகாதார,போசாக்கு மற்றும் சுதேச வைத்திய பிரதி அமைச்சர் பைசல் காசீம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:

நல்லாட்சியைக் கவிழ்ப்பதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவை அனைத்தையும் செய்து வருகின்றது இந்த மஹிந்த அணி.அவர்களின் சதிகளில் ஒன்றுதான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனிடம் இருக்கின்ற எதிர்கட்சித் தலைவர் பதவியைப் பறிக்க முயற்சிப்பது.

இந்த முயற்சி ஜனநாயக மீறலாகும்.நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுள் ஆட்சியில் பங்கெடுக்காத அதிக ஆசனங்களைக் கொண்டுள்ள கட்சிக்குத்தான் எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்படும்.

அந்த வகையில் ஆறு கட்சிகள் மாத்திரமே நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.அவற்றுள் ஐக்கிய தேசிய கட்சி,ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய மூன்றும் அரசுக்குள் இருக்கின்றன.ஏனைய மூன்று கட்சிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பு,ஜேவிபி மற்றும் ஈபிடிபி ஆகிய கட்சிகள் எதிர்கட்சிகளாக உள்ளன.

அந்தக் கட்சிகளுள் தமிழ் தேசிய கூட்டமைப்பு 16 ஆசனங்களையும் ,ஜேவிபி 6 ஆசனங்களையும் மற்றும் ஈபிடிபி ஓர் ஆசனத்தையும் கொண்டுள்ளன.நாடாளுமன்ற சம்பிரதாயத்தின்படி அதிக ஆசனங்களைக் கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்புக்குத்தான் எதிர்கட்சித் தலைவர் பதவி செல்லும்.அதன்படி,கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு எதிர்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

மஹிந்த அணியினர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள்.அந்தக் கட்சியுடன் சண்டை பிடித்துக்கொண்டு எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளனர்.அது அவர்களின் பிரச்சினை.அவர்கள் எங்கு வேண்டுமானாலும் போய் அமரட்டும்.அதற்காக அவர்கள் எதிர்கட்சித் தலைவர் பதவியைக் கோர முடியாது.

அவ்வாறு கோர முடியாது என்று அவர்கள்நன்கு அறிவர்.இருந்தும்,வெறுமனே சிங்கள மக்களைக் குழப்பி தமிழர்களுக்கு எதிராக இனவாதத்தை விதைத்து அரசியல் இலாபம் அடைவதே மஹிந்த அணியினரின் திட்டம்.

எதிர்கட்சித் தலைவர் பதவியை வகிப்பதற்கு சம்பந்தனுக்கு இருக்கின்ற அரசியல் உரிமை,நாடாளுமன்ற சம்பிரதாயம் மற்றும் ஜனநாயகம் பாதுகாக்கப்படும்.மஹிந்த அணியினரின் அரசியல் இலாபத்துக்காக இவற்றை நாம் விட்டுக்கொடுக்கமாட்டோம்.-எனத் தெரிவித்துள்ளார்.

ad

ad