புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஆக., 2018

அமெரிக்காவில் குடும்பத்தினருடன் இருக்கும் போட்டோவை வெளியிட்ட விஜயகாந்த்


சினிமாவில் தனது கணீர் குரல் மூலமாக அனல் தெறிக்கும் வசனங்களை பேசி ரசிகர்களை கவர்ந்த விஜயகாந்த், அதே வேகத்துடன் அரசியல் களத்திலும் கால் பதித்தார்.

தே.மு.தி.க.வை தொடங்கிய பின்னர் அவரது மேடைப் பேச்சுக்களும் கவனம் ஈர்த்தன. கட்சி தொடங்கிய புதிதில் விஜயகாந்த் மேடைகளில் மணிக்கணக்கில் பேசினார். விஜயகாந்த் பொதுக்கூட்டம் என்றால் அவர் என்ன பேசப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பும் இருந்தது. இப்படி ரசிகர்களை கவர்ந்திழுந்த அவரது பேச்சுக்கள் நாளடைவில் கிண்டலுக்குள்ளானது.

விஜயகாந்த் என்ன பேசுகிறார்? என்பதை புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அவரது குரல் மாறிப்போனது. அதே நேரத்தில் பேச்சாலேயே பேசப்பட்ட விஜயகாந்தால் நீண்ட நேரம் தொடர்ந்து பேச முடியாத நிலையும் ஏற்பட்டது.

அரசியல் பயணத்தில் யாருடனும் கூட்டணி வைக்கப்போவதில்லை என்று கூறிவந்த விஜயகாந்த் பின்னர், ‘‘அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து எதிர்க்கட்சி தலைவர் ஆனார். இது அரசியல் பாதையில் அவருக்கு ஏறுமுகமாக பார்க்கப்பட்டது. பின்னர் கடந்த சட்டமன்ற தேர்தலில் முதல்-அமைச்சர் கனவுடன், மக்கள் நல கூட்டணியுடன் சேர்ந்து போட்டியிட்டார். ஆனால் இதனை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இது கட்சிக்கு இறங்குமுகமானது.

விஜயகாந்தின் உடல் நல குறைவும், கட்சிக்கு ஏற்பட்ட இந்த பின்னடைவும் தே.மு.தி.க. தொண்டர்களை சோர்வடைய செய்தது.இதற்கிடையே கடந்த பாராளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் வீசிய மோடி அலையில் நாமும் நீந்தி கரை சேர்ந்துவிடலாம் என்று எண்ணிய விஜயகாந்த் பா.ஜனதாவுடன் கை கோர்த்தார். ஆனால் அதுவும் கையை கடித்துவிட்டது. ஒரு இடத்தில் கூட தே.மு.தி.க.வால் வெற்றி பெற முடியவில்லை.

இந்த நிலையில் விஜயகாந்தின் எதிர்கால அரசியல் பயணம் எப்படி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு பரவலாகவே நிலவுகிறது.

தைராய்டு மற்றும் குரல் வளை பிரச்சனையால் பாதிக்கப்பட்ட விஜயகாந்த் இதற்கு சிகிச்சை பெறுவதற்காக கடந்த மாதம் 7-ந்தேதி அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அங்கு 40 நாட்கள் தங்கி இருந்து சிகிச்சை பெற திட்டமிட்டுள்ள விஜயகாந்துக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியானது.இதற்காக உளுந்தூர்பேட்டையை சேர்ந்த கட்சி பிரமுகர் ஒருவர் அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தனது உடல் நிலை பற்றிய தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் உற்சாகமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் விஜயகாந்தே இதனை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்து தே.மு.தி.க. தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் விஜயகாந்த் புத்துணர்வோடு தீவிர அரசியலில் ஈடுபட திட்டமிட்டுள்ளார். அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு சென்று நாளையுடன் ஒரு மாதம் முடிகிறது. இன்னும்10 நாட்கள் அங்கேயே தங்கி இருக்க விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார்.இதன் பின்னர் அவர் சென்னை திரும்புகிறார். உடல் ஆரோக்கியத்துடன், விஜயகாந்த் மீண்டும் அரசியல் பணிகளில் வேகம் காட்டுவார் என்று கட்சி நிர்வாகிகள் கூறினர்.

இதன்படி இன்னும் சில தினங்களில் சென்னை திரும்பும் விஜயகாந்த் கட்சி நிர்வாகிகளை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் விஜயகாந்தின் உடல் நிலை குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ad

ad