புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஆக., 2018

மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு முப்படை வீரர்கள் மரியாதை


திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அண்ணா நினைவிடத்திற்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நல குறைவால் நேற்று(செவ்வாய்க்கிழமை) மாலை காலமானார். அவருக்கு வயது 95. இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவரான கருணாநிதியின் மறைவுக்கு, ஜனாதிபதி, பிரதமர் மோடி, தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி உள்பட தேசிய தலைவர்கள், திரை பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர்.

குடும்பத்தினர் அஞ்சலிக்காக கோபாலபுரம் மற்றும் சிஐடி காலனி இல்லத்தில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை வைக்கப்பட்டு இருந்த கருணாநிதியின் உடல், அதிகாலை 5 மணியளவில், பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டது. திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு தேசியக் கொடி போர்த்தி ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது. கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த, திமுக தொண்டர்கள் பல ஆயிரக்கணக்கில் திரண்டு வந்தனர். தங்கள் தலைவருக்கு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்த குவிந்து இருந்த தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு தேசியத் தலைவர்கள், தமிழகத்தில் உள்ள தலைவர்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியும், இரங்கலும் தெரிவித்தனர். தனிவிமானம் மூலம் சென்னை வந்த பிரதமர் மோடி, ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டு இருக்கும் கருணாநிதியின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், எம்.பி. கனிமொழி உள்ளிட்ட குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறிய பிரதமர் மோடி, அங்கிருந்து மீண்டும் டெல்லி புறப்பட்டார். முதல் அமைச்சர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

நண்பகல் 2 மணிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமானம் மூலம் சென்னை வந்தார். சிறப்பு வாகனம் மூலம் ராஜாஜி அரங்குக்குச் சென்ற ராகுல் காந்தி, அங்கு வைக்கப்பட்டு இருக்கும் கருணாநிதியின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். ராகுல் காந்தியுடன் மாநில காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தமிழக பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் உள்ளிட்டோரும் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், கருணாநிதி குடும்பத்தாருக்கும் ராகுல் காந்தி ஆறுதல் தெரிவித்தார்.

உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதிக் கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், லாலுபிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவ், மனோஜ் குமார் ஆகியோர் ராஜாஜி அரங்குக்கு வந்து கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆளுநர் சதாசிவம், எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா ஆகியோரும் நேரில் வந்து கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ராஜாஜி அரங்குக்கு நேரில் வந்து கருணாநிதியின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இறுதி ஊர்வலம்

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் மாலை 4 மணியளவில் துவங்கியது. முப்படை வீரர்கள் அவரது உடலை அலங்கரிக்கப்பட்ட ராணுவ வண்டியில் ஏற்றிக்கொண்டு சென்றனர். அண்ணாசாலை, வலாஜா சாலை வழியாக, கருணாநிதியின் உடல் ராணுவ வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது. பொதுமக்கள், தொண்டர்கள் கண்ணீர் கடலில் மிதந்தபடி திமுக தலைவர் கருணாநிதியின் உடல் மெரினாவுக்கு சென்றது. வழியெங்கும் வாழ்த்து முழக்கங்களை இட்ட படி, கண்ணீருடன் திமுக தொண்டர்கள் பின் தொடர்ந்தனர். திமுக தலைவர் கருணாநிதியை சுமந்து செல்லும் வாகனத்திற்கு பின்னால் ஸ்டாலின் நடந்து சென்றார். மாலை 6.15 மணியளவில், கருணாநிதியின் உடலை சுமந்து வந்த ராணுவ வாகனம் அண்ணா நினைவிடத்திற்கு கொண்டு வரப்பட்டது. மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு முப்படை வீரர்கள் மரியாதை செலுத்தினர்.


ad

ad