புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 செப்., 2018

மோட்டார் வாகன ஆய்வாளர்-புரோக்கர் வீடுகளில் சோதனை கோடிகணக்கில் நகை- பணம் பறிமுதல்

லஞ்சம் வாங்கி கைதான மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு- புரோக்கர் கோடிக் கணக்கில் சொத்து குவித்து இருப்பது
பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள வட்டார போக்கு வரத்து அலுவலகத்தில் வாகன ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். புதிய வாகனங்களுக்கு பதிவு சான்றிதழ் வழங்குதல், வாகனங்களை ஆய்வு செய்து சான்று வழங்குதல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

கூத்தக்குடியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் தனது புதிய டூரிஸ்ட் வேனுக்கு தகுதி சான்றிதழ் பெற விண்ணப்பித்து இருந்தார். கள்ளக்குறிச்சியில் தனியார் டிரைவிங் ஸ்கூல் நடத்தி வரும் முத்துக் குமார் மூலம் மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவை அணுகினார்.

அவர் வேனுக்கு தகுதி சான்றிதழ் வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத முத்துக்குமார் இது குறித்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.

பின்னர் ரூ.25 ஆயிரத்தை மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவிடம் கொடுக்க முயன்றார். பணத்தை உதவியாளர் செந்தில் குமாரிடம் வழங்கும் படி கூறினார்.

இதைத் தொடர்ந்து ரூ.25 ஆயிரத்தை செந்தில்குமார் பெற்றுக் கொண்டார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையிலான போலீசார் செந்தில்குமாரையும், பாபு வையும் கையும் களவுமாக கைது செய்தனர்.லஞ்ச வழக்கில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு அவரது உதவியாளர் செந்தில்குமார் சிறையில் அடைக்கபட்டு உள்ளனர்.

பாபு வீடு கடலூரில் இருப்பது தெரியவந்தது. நேற்று மதியம் 2 மணி அளவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடலூர் செம்மண்டலம் தவுலத் நகரில் உள்ள பாபுவின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

8 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் கட்டுகட்டாக ரூ.35 லட்சம் பணம், 15 கிலோ வெள்ளி பொருட்கள், 200 பவுன் தங்க நகைகள், 45 வங்கி கணக்குகள், மேலும் 6 வங்கி லாக்கர்களுக்கான சாவிகள், 500-க்கும் மேற்பட்ட பத்திரங்கள் மற்றும் பலகோடி மதிப்புள்ள சொத்துக்களின் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

பாபுவுக்கு பல வங்கிகளில் 6 பெட்டகங்கள் இருப்பதும், அதில் 300 பவுனுக்கு மேல் நகைகளும், லட்சக்கணக்கான பணம் இருப்பதற்கான ஆதாரங்களும் சிக்கியது.

மேலும் பாபுவுக்கு சென்னையில் கோடிக் கணக்கான மதிப்புள்ள பங்களா வீடு, வணிக வளாகம் இருப்பது தெரிய வந்தது. கடலூர் நகரில் மட்டும் 6 வீடுகளும், சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான காலி மனைகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுபோல் கைதான செந்தில் குமார் வீட்டிலும் சோதனை நடத்தினர். செந்தில் குமார் வீடு ஆத்தூர் கோட்டை எல்.ஆர்.சி. நகரில் பங்களா உள்ளது. இந்த பங்களா சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வீட்டின் கிரஹபிரவேசம் இன்று நடைபெறுவதாக இருந்தது.

இந்த நிலையில் செந்தில் குமார் கைதானதைத் தொடர்ந்து சேலம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் எஸ்.பி.சந்திரமவுலி தலைமையிலான போலீசார் நேற்று மாலை ஆத்தூரில் உள்ள செந்தில்குமாரின் புது பங்களா, வணிக வளாகம், ஜோதிட நிலையங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

சுமார் 8 மணிநேரம் நடந்த இந்த சோதனையில் 100 பவுன் நகைகள் மற்றும் 15 வங்கி கணக்குகள், சொத்து ஆவணங்கள் சிக்கியது. மேலும் வங்கியில் ரூ.3 கோடி வரை அவர் பல்வேறு வகையில் டெபாசிட் செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த 2006-ம் ஆண்டு அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பாபு மற்றும் செந்தில்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

அப்போது பாபு மற்றும் அவரது மனைவி மங்கையர்க்கரசி பெயர்களில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், சென்னை உள்ளிட்ட பல ஊர்களில் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்களை வாங்கியதற்கான ஆவணங்கள் சிக்கின.

இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பிறகும் லஞ்சம் வாங்குவதை நிறுத்தாத பாபு, புரோக்கர் செந்தில்குமார் உதவியுடன் மீண்டும் சொத்து சேர்த்துள்ளது அம்பலத்திற்கு வந்துள்ளது

ad

ad