புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 செப்., 2018

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களால் கூட்டணியில் குழப்பம் கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைக்க முயற்சி


கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களால் கூட்டணி ஆட்சியில் நிலவும் குழப்பம் குறித்து பா.ஜனதா மேலிடத்திற்கு எடியூரப்பா அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.


கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களால் கூட்டணி ஆட்சியில் நிலவும் குழப்பம் குறித்து பா.ஜனதா மேலிடத்திற்கு எடியூரப்பா அறிக்கை தாக்கல் செய்துள்ளார். மேலும் கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைக்க முயற்சி செய்து வருகிறது. இதனால் குதிரை பேரம்-ரெசார்ட் அரசியல் தொடங்கியுள்ளது.

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடக்கிறது.

காங்கிரசில் கருத்து வேறுபாடு

குமாரசாமி முதல்-மந்திரியாக இருக்கிறார். அவர் பதவி ஏற்று 3 மாதங்களுக்கு மேல் ஆகிறது. இந்த நிலையில் பெலகாவியில் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி மற்றும் லட்சுமி ஹெப்பால்கர் எம்.எல்.ஏ.வுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

லட்சுமி ஹெப்பால் கருக்கு மந்திரி டி.கே.சிவக்குமாரின் ஆதரவு உள்ளது. லட்சுமி ஹெப்பால்கரை மந்திரியாக்க டி.கே.சிவக்குமார் முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. இதற்கு மந்திரி ரமேஷ் ஜார்கிகோளியும், அவரது சகோதரர் சதீஸ் ஜார்கிகோளியும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

டி.கே.சிவக்குமார் தலையிடக்கூடாது

இதனால் காங்கிரஸ் கட்சியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக குழப்பம் நீடித்து வருகிறது. ஜார்கிகோளி சகோதரர்கள் காங்கிரஸ் மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ், துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் ஆகியோரை நேற்று முன்தினம் நேரில் சந்தித்து பேசினர்.

அப்போது பெலகாவி மாவட்ட காங்கிரஸ் விவகாரங்களில் மந்திரி டி.கே.சிவக்குமார் தலையிடக்கூடாது, லட்சுமி ஹெப்பால்கருக்கு மந்திரி பதவி வழங்கக்கூடாது என்று ரமேஷ் ஜார்கிகோளி நிபந்தனை விதித்தார். இந்த நிபந்தனையை பரிசீலிப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் உறுதியளித்து உள்ளனர்.

கூட்டணி ஆட்சிக்கு சிக்கல்

தனது நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளாவிட்டால், 13 எம்.எல்.ஏ.க்களுடன் காங்கிரசை விட்டு விலகுவதாகவும் ரமேஷ் ஜார்கிகோளி எச்சரிக்கை விடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் எழுந்துள்ள இந்த குழப்பத்தால் கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி மராட்டிய மாநில முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவீசை நேரில் சந்தித்து, பா.ஜனதாவில் சேருவது குறித்து ஒருகட்ட பேச்சுவார்த்தையை நடத்தி முடித்து இருக்கிறார். அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை ‘ஆபரேசன் தாமரை’ மூலம் இழுத்து கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியை அமைக்க அக்கட்சியின் கர்நாடக மாநில தலைவர் எடியூரப்பா தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார்.

அறிக்கை தாக்கல்

இந்த நிலையில் காங்கிரசில் எழுந்துள்ள கருத்து வேறுபாடுகள் குறித்தும், பா.ஜனதாவுக்கு வரத்தயாராக இருக்கும் அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் குறித்தும் விவரங்கள் அடங்கிய அறிக்கையை பா.ஜனதா மேலிடத்திடம் எடியூரப்பா நேற்று தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையின் அடிப்படையில் பா.ஜனதா மேலிட தலைவர்கள் விரைவில் அடுத்தக்கட்ட முடிவு எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும் எடியூரப்பா நடவடிக்கை எடுத்துள்ளார்.

குதிரைபேரம்

இதை தடுக்கும் வகையில் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளை சேர்ந்த முன்னணி தலைவர்களும் பா.ஜனதாவை சேர்ந்த எம்.எல்.ஏ.க் களை இழக்க முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் கர்நாடகத்தில் மீண்டும் ரெசார்ட் மற்றும் குதிரைபேர அரசியல் களைகட்ட தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கர்நாடக அரசியல் களத்தில் இன்னும் சில நாட்களில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் நல்லநாள்

இந்த நிலையில் பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மந்திரி ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நான் ‘ஆபரேசன் தாமரை’ பற்றி பேசும் அளவுக்கு பெரிய ஆள் கிடையாது. எங்கள் கட்சியின் கொள்கை, கோட்பாடுகளை ஏற்று பா.ஜனதாவுக்கு வருபவர்களை நாங்கள் வரவேற்கிறோம். பா.ஜனதாவுக்கு விரைவில் நல்ல நாட்கள் வரவுள்ளது.

முதல்-மந்திரி குமாரசாமி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மக்களை ஏமாற்ற நினைக்கும் குமாரசாமியின் ஆட்டம் நீண்ட நாட்களுக்கு நடக்காது. கூட்டணி ஆட்சியில் அதிருப்தி எழுந்துள்ளது. இந்த கூட்டணி ஆட்சி கவிழ்ந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.

புனிதமற்ற கூட்டணி

நாங்கள் எந்த எம்.எல். ஏ.வையும் இழுக்க முயற்சி செய்யவில்லை. அவர்களே வீதியில் சண்டை போட்டுக்கொண்டால் நாங்கள் என்ன செய்ய முடியும். பா.ஜனதா எதிர்க்கட்சியாக தனது கடமையை சரிவர செய்து வருகிறது.

சட்டசபை தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றும், பா.ஜனதாவால் ஆட்சி அமைக்க முடியவில்லை. காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் புனிதமற்ற கூட்டணி அமைத்து எப்படியோ காலத்தை நகர்த்துகின்றன. இந்த கூட்டணி ஆட்சி நீடிக்க கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களே விரும்பவில்லை.

எடியூரப்பாவுக்கு மக்கள் பலம்

எடியூரப்பா முதல்-மந்திரி ஆகக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. எடியூரப்பாவுக்கு மக்கள் பலம் மற்றும் மடாதிபதிகளின் பலம் இருக்கிறது. இதை யாராலும் தடுக்க முடியாது.

பா.ஜனதாவை சேர்ந்த 104 எம்.எல்.ஏ.க்களும் ஒற்றுமையாக இருக்கிறோம். எங்கள் கட்சியை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் வேறு கட்சியில் சேருவதாக கூறுகிறார்கள். யாரும் பா.ஜனதாவை விட்டு விலக மாட்டார்கள்.

இவ்வாறு ரேணுகாச்சார்யா கூறினார்.

அரசியலில் பரபரப்பு

கர்நாடக காங்கிரசில் தற்போது எழுந்துள்ள குழப்பத்தை பயன்படுத்தி, கலங்கிய குட்டையில் மீன்பிடிக்கும் யுக்தியை பா.ஜனதா கையாளும் எனவும், அதன் மூலம் கர்நாடகத்தில் ஆட்சியை அமைக்க பா.ஜனதா மேலிடத் தலைவர்கள் முயற்சியில் இறங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ad

ad