ஞாயிறு, அக்டோபர் 28, 2018

தமிழக அரசியலில் அடுத்து என்ன திருப்பம் ஏற்படும்?

சட்டப்பேரவையில் 20 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் தமிழக அரசியலில்
அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்துள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை யார் ஆட்சிக்கு வர வேண்டும் என மக்கள் தெளிவாகவே தீர்ப்பளித்து விடுவார்கள். இதனால் இழுபறி, தொங்கு சட்டப்பேரவை என்ற நிலையே ஏற்படாமல் உள்ளது. 1984 தேர்தலில் அதிமுக 132 இடங்களில் வென்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்தது. ஆனால், 1987 டிசம்பர் 24-ல் எம்ஜிஆர் மறைந்ததும் அந்த ஆட்சி நீடிக்கவில்லை.
அதுபோலவே 2016 தேர்தலில் 135 தொகுதிகளில் வென்று பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைத்தது. முதல்வராகவும், அதிமுக பொதுச்செயலாளராகவும் இருந்தஜெயலலிதா 2016 டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அதன்பிறகு அதிமுக கட்சியிலும், ஆட்சியிலும் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தன.இந்நிலையில், தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை பேரவைத் தலைவர் பி.தனபால் அதிரடியாக தகுதி நீக்கம் செய்தார். இந்த உத்தரவு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இந்த வழக்கின் தீர்ப்பை அதிமுக, தினகரன் தரப்பு மட்டுமல்லாது திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், ஒட்டுமொத்த தமிழகமே எதிர்பார்த்து காத்திருந்தது.
சட்டப்பேரவையில் 20 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் தமிழக அரசியலில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்துள்ளது.
ஏனெனில் இந்த வழக்கில் 18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் செல்லாது என தீர்ப்பு வந்திருந்தால் தினகரனின் கை ஓங்கியிருக்கும். மேலும் பல எம்எல்ஏக்கள் தினகரன் பக்கம் சென்றிருப்பார்கள். அதிமுக அரசு கவிழ்ந்திருக்கும். புதிய அரசை அமைக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தால் பொதுத்தேர்தல் நடந்திருக்கும்.ஆனால், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பால் முதல்வர் பழனிசாமி அரசுக்கு நெருக்கடி தீர்ந்தது. ஆனால், இந்த நிலை தொடருமா அல்லது குழப்பம் அதிகரிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. உயர் நீதிமன்ற தீர்ப்பு அரசுக்கு சாதகம் என்றாலும் அரசுக்கு ஆதரவான எம்எல்ஏக்களின் பலம் 116 ஆக குறைந்துள்ளது. இதில் 3 பேர் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் வென்ற வேறு கட்சியினர்.
மீதமிருக்கும் 113 பேரிலும் 3 பேர் வெளிப்படையாகவே தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால், எந்த நேரத்திலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.திமுக - 88, காங்கிரஸ் - 8, முஸ்லிம் லீக் - 1 என திமுக கூட்டணிக்கு 97 எம்எல்ஏக்கள் உள்ளனர். எனவே, ஆட்சிக்கு எதிராக செயல்படுவதாகக் கூறி மேலும் சிலரை தகுதி நீக்கம் செய்யவும் முடியாது. அப்படி செய்தால் அதிமுகவின் பலம் குறைந்து, திமுகவுக்கு சாதகமாகி விடும்.ஜெயலலிதா வென்ற ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரனிடம் தோற்றதால் இடைத்தேர்தலை எதிர்கொள்ள அதிமுகவுக்கு தயக்கம் உள்ளது.
அதனால்தான் மழையை காரணம்காட்டி திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு தலைமைச் செயலாளர் கடிதம் எழுதினார். அதன்படி தேர்தலும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.தற்போது காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தால் அது அதிமுகவுக்கு சாதகமாக இருக்கும் என உறுதியாக கூற முடியாது. திமுக வலுவான கூட்டணியுடன் உள்ளது. தினகரன் வாக்குகளைப் பிரிப்பார் எனவே, திமுக அதிகமான தொகுதிகளில் வென்றால் ஆட்சி அமைக்கும் வாய்ப்பே உள்ளது.2019 ஏப்ரல் அல்லது மே மாதத்தில் மக்களவைத் தேர்தல் வரவுள்ளது. காலியாக உள்ள 20 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இப்போது இல்லாவிட்டாலும் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தல் நடத்திதான் தீர வேண்டும்.
 அதிமுக பிளவுபட்டிருந்தால் வெல்வதும் கடினம். எனவே, அப்போது மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது.மக்களவைத் தேர்தலில் திமுக அதிக இடங்களை வென்றால் காங்கிரஸ் ஆட்சி அமைக்கவே உதவி செய்வார்கள். எனவே,அதிமுகவை இணைக்க பாஜக முயற்சி செய்வதாகவும், இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், தினகரன் ஆகியோரிடம் பாஜக பேச்சு நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள 18 பேரை பொறுத்தவரை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் அல்லது தேர்தலை சந்திக்கலாம் என்ற2 வழிகள் உள்ளன.
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால், 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் தள்ளிப்போகலாம். தினகரன் ஆதரவாளர்களில் ஒரு தரப்பினர் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும், மற்றொரு தரப்பினர் தேர்தலை சந்திக்க வேண்டும் என்றும் விரும்புகின்றனர்.உயர் நீதிமன்ற தீர்ப்பால்அதிமுக அரசுக்கு உடனடியாகஎந்த ஆபத்தும் இல்லையென்றாலும், அடுத்தடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதைப் பொறுத்துதான் அரசு நீடிக்குமா என்பதை சொல்ல முடியும். மக்களவைத் தேர்தல் முடிவுகள் எல்லாவற்றுக்கும் விடையளிக்கலாம்.