ஞாயிறு, அக்டோபர் 28, 2018

நாட்டிற்கு பாதகமான சூழ்நிலை ஏற்படும் - கரு

சபாநாயகர் கரு ஜயசூரிய, சிறீலங்கா அதிபர் சிறிசேனவிற்கு இன்று (28)
கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
சில நாடுகள் ஏற்கனவே தமது பிரஜைகள் சிறீலங்காக்கு செல்வதைத் தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளமை தற்போதைய நிலையின் பாரதூரத் தன்மையை புலப்படுத்துவதாகவும் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பாராளுமன்றத்தில் எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி வரை 20 நாட்கள் மூடி வைப்பதன் ஊடாக, நாட்டிற்கு பாதகமான சூழ்நிலை ஏற்படுவதற்கு இடமளிக்க வேண்டாம் எனவும் சபாநாயகர் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜனநாயக சம்பிரதாயத்திற்கு அமைய சபாநாயகருக்கு அறிவித்தே பாராளுமன்றத்தை ஒத்திவைக்க வேண்டும் என்பதை ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவருவதாகவும் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மை நம்பிக்கையை வெற்றிகொண்ட உறுப்பினர் உறுதி செய்யப்படும் வரை ரணில் விக்ரமசிங்கவின் சிறப்புரிமைகளை பாதுகாக்குமாறு வேண்டுகோள் விடுக்கும் வகையில் தமக்கு கடிதமொன்று கிடைத்துள்ளதாக சபாநாயகர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வேண்டுகோளை ஜனநாயக ரீதியிலான நியாயமான கோரிக்கையாக தாம் கருதுவதாகவும் ஜனநாயக நல்லாட்சிக்காக மக்கள் ஆணையைப் பெற்றுக்கொண்ட அரசாங்கம் என்ற வகையில் இந்த வேண்டுகோளை ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவருவதாகவும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகங்கள் வாயிலாக சிலர் அச்சுறுத்தல் விடுத்த சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் சபாநாயகர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரச ஊடகங்களில் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படும், பலவந்த தலையீட்டினால் நாட்டிற்குள் அமைதி சீர்குலைவதற்கு அப்பால், சர்வதேச ரீதியில் ஏற்படும் பாரதூரமான விளைவுகளையும் ஜனாதிபதி உணர்வார் என தாம் நம்புவதாக கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.