புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 நவ., 2018

ரஜினிகாந்த் பாணியில் யாழ்ப்பணம் வந்திறங்கிய டக்ளஸ் தேவாநந்தா



“நான் வந்திட்டேன்னு சொல்லு”

சிறிலங்காவின் மஹிந்த – மைத்ரி அரசாங்கத்தில் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சராகப் பதவியேற்றுள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது அடுத்த இலக்கு வட மாகாண முதலமைச்சர் என்று தெரிவித்திருக்கின்றார்.

புதிதாக அமைச்சராக பதவியேற்றுள்ள அவரை வரவேற்பதற்காக இன்றைய தினம் அவரது ஆதரவாளர்கள் யாழ்ப்பாணத்தில் நடத்திய வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டிருந்த டக்ளஸ் தேவாநந்தா, தமிழ் திரையுலகளின் சுப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிரபல்யமான திரைப்பட வசனமான “நான் வந்திட்டேன்னு சொல்லு” என்ற வசனத்தை கூறியமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

மைத்திரி மஹிந்த கூட்டணி அரசாங்கத்தின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை வரவேற்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.







யாழ்.வைத்தியசாலை வீதியிலிருந்து பாண்ட் வாத்திய கருவிகளுடன் அழைத்து செல்லப்பட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்.போதனா வைத்தியசாலை முன்றலில் வைத்து வைத்தியசாலை ஊழியர்களால் மலர்மாலை அணிவித்துக் கௌரவிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து ஊர்வலமாக யாழ்.மத்திய பேருந்து தரிப்பு நிலைய வீதியூடாக அழைத்து செல்லப்பட்டு இலங்கை போக்குவரத்துச் சபையின் வட பிராந்திய தொழிற்சங்கத்தினரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

இதன்போது அமைச்சரின் ஆதரவாளர்கள் பட்டாசு கொழுத்தி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

அத்துடன் மயிலாட்டம் குதிரையாட்டங்களுடன் கஸ்தூரியார் வீதியூடாக அழைத்து செல்லப்பட்ட அமைச்சரை ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு ஆதரவாளர்கள் மலர் மாலை அணிவித்து அழைத்துச் சென்றனர்.



இந்த நிகழ்வில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டிருந்தனர்.

மக்கள் கூட்டத்தின் மத்தியில் உரையாற்றிய அமைச்சர் நான் வந்திட்டேன்னு சொல்லு என தெரிவித்ததுடன், வடமாகாண முதலமைச்சராக தெரிவு செய்யப்படும் பட்சத்தில் மக்களுக்கு சேவையாற்ற தயாராக உள்ளதாகவும் கூறினார்.

அதேவேளை, யாழ் மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டு காசோலைகள் வழங்கும் நிகழ்வு யாழ் மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் இன்று மாலை இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் மீள்குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உதவிப்பொருட்களை வழங்கி வைத்தார்.

யுத்தம் மற்றும் ஏனைய அனர்த்தங்களினால் கடந்தகாலங்களில் பாதிப்புக்குள்ளான அரச ஊழியர்கள் சொத்துக்களை இழந்தவர்கள் மற்றும் ஆலயங்களின் புனரமைப்பு என நூற்றி ஐம்பத்தைந்து பயனாளிகளிக்கு மீள்குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சின் கீழ் இந்த இழப்பீட்டுத்தொகைகள் வழங்கி வைக்கப்பட்டன.


இதன்போது உரைலயாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா , மைத்திரி - மஹிந்த கூட்டணி தற்போது ஏற்படுத்தியுள்ள ஆட்சியே தொடர்ந்தும் நீடிக்கும் என்றும் வடமாகாணத்தை அபிவிருத்தி செய்ய இந்த அரசு பூரண ஒத்திழைப்பை வழங்கும் என்றும் தெரிவித்தார்

ad

ad