புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 நவ., 2018

கொழும்புக் குழப்பமும் தமிழ்த் தேசிய அரசியலும்
கே. சஞ்சயன்
இலங்கையின் அரசியலில் ஜனாதிபதி ஏற்படுத்திய குழப்பம், தெற்கு அரசியல்வாதிகளை மாத்திரமன்றித் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளையும் குழப்பி விட்டிருப்பதாகவே தெரிகிறது.

இந்த நெருக்கடியை எப்படி எதிர்கொள்வது என்ற விடயத்தில், அறிவுரை சொல்வதாக நினைத்துக் கொண்டு, தமிழ்த் தேசிய அரசியல் தரப்புகள் முன்வைத்த கருத்துகள், நடைமுறைக்கு ஒத்துவராதவை.

நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமே ஆசனங்களைக் கொண்டிருப்பதால், ஏனைய தமிழ்த் தேசிய அரசியல் தரப்புகளால், வெறுமனே செய்தியாளர் சந்திப்புகளிலும், அறிக்கைகளிலும்தான், தமது கருத்துகளை வெளியிட முடியுமே தவிர, செயல் ரீதியாக இந்த விவகாரத்தைக் கையாள முடியாது.

எனவேதான், மஹிந்தவுக்கும் ரணிலுக்கும் பெரும்பான்மை பலத்துக்கான தேவை ஏற்பட்டவுடன், கூட்டமைப்பு அப்படிச் செய்ய வேண்டும், இப்படிப் பேரம் பேச வேண்டும், எதையெதையெல்லாம், முன்வைத்துப் பேரம் பேச வேண்டும் என்று ஆளாளுக்குக் கருத்துகளை முன்வைக்கத் தொடங்கினர்.

சிங்கள அரசியல் தலைமைகள், தமிழ் மக்களுக்கு ஒருபோதும் நியாயமான தீர்வை வழங்காது; சர்வதேச ஒத்துழைப்பு மூலமே அதை அடைய முடியும் என்று ஒற்றைக்காலில் நின்று வலியுறுத்தியவர்களும் விமர்சித்தவர்களும் கூட, வடக்கு, கிழக்கு இணைப்பு, சமஷ்டி, அதிகாரப் பகிர்வு என்று பல விடயங்களை முன்னிறுத்திப் பேரம்பேச வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டார்கள்.

கூட்டமைப்பு பேரம் பேசி விட்டால் மாத்திரம், இவையெல்லாம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கை பலருக்கு எப்படித் திடீரென முளைத்ததோ தெரியவில்லை. கூட்டமைப்பைக் ‘கழு’மரத்தில் ஏற்றிவிடும் முயற்சியாக இது இருக்கலாம்.

இங்குதான், தமிழ்த் தேசியத் தரப்புகள் இன்னமும், சிங்கள அரசியல் தலைமைகளைச் சரிவரப் புரிந்து கொள்ளவில்லை என்பது வெளிப்பட்டது. இலங்கையின் அரசியல் குழப்பம் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என்பதில் சந்தேகமில்லை.

ஆனாலும், தமிழர்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து, சமஷ்டிக்கு இணங்கி, வடக்கு, கிழக்கை இணைத்து, அந்த நெருக்கடியைத் தீர்க்க, சிங்களத் தலைமைகள் முன்வரும் என்று எதிர்பார்க்கும் அளவுக்கு தமிழர்கள் முட்டாள்களாக இருக்கக்கூடாது.

இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில், அவர்கள் தமக்கெனப் பொதுவானதோர் எல்லைக்கோட்டை வைத்திருக்கிறார்கள். அந்தக் கோட்டைத் தாண்டுகின்ற கட்டம் வரும் போது, அவர்கள் தமக்குள்ளேயே முட்டிக் கொண்டு குழப்பி விடுவார்கள்; அல்லது தமக்குள் ஒன்றுபட்டு, அந்த நெருக்கடியைத் தீர்த்துக் கொள்வார்கள்.

இப்படியானதொரு சூழலில், பழம் நழுவிப் பாலில் விழப் போகிறது என்று தமிழ்த் தேசியவாதத் தரப்புகள் கற்பனைக் கடலில் மிதந்தமை ஆச்சரியமானது.

கொழும்பு அரசியல் நெருக்கடியின் பின்னணியில் இருப்பது சீனா, மேற்குலகு, இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான அதிகாரப் போட்டியா, சிங்கள அரசியல் தலைமைகளுக்கு இடையிலான அதிகார யுத்தமா? என்ற கேள்விகளுக்கு இன்னமும் விடை காணப்படவில்லை.

ஆனால், இந்தக் குழப்பம், சர்வதேச அரசியல் அதிகார சக்திகளுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்குலக, இந்திய நலன்களுக்கும் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே, ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்திருக்கிறது என்றதொரு குற்றச்சாட்டைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் முன்வைத்திருந்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில், மஹிந்தவை ஆதரிப்பது, ரணிலை ஆதரிப்பது, நடுநிலை வகிப்பது என்ற மூன்று தெரிவுகள் தான் இருந்தன. ஆனாலும், மஹிந்தவை ஆதரிப்பதும், நடுநிலை வகிப்பதும் கிட்டத்தட்ட ஒரே விளைவுக்குத் தான் வழிவகுக்கும். அது மஹிந்தவைக் காப்பாற்றும் நிகழ்ச்சி நிரலாகவே இருக்கும்.

இந்தக் கட்டத்தில் கூட்டமைப்பு, மஹிந்தவை ஆதரிப்பதோ, நடுநிலை வகித்து, மறைமுகமாக மஹிந்தவின் ஆட்சியை ஏற்றுக்கொள்வதோ, தமிழர்களின் நலன் சார்ந்த விடயமாக இருக்குமா என்பதே பிரதானமான கேள்வி.

மஹிந்தவுக்குப் பின்னால், சீன நிகழ்ச்சி நிரல் இருப்பதும், ரணிலுக்குப் பின்னால் இந்திய - மேற்குலக நலன் சார்ந்த நிகழ்ச்சி நிரல் இருப்பதுவும் வெளிப்படையானவை.

இப்படியான நிலையில், மேற்குலக -இந்திய நிகழ்ச்சிநிரலை விட்டு, சீன நிகழ்ச்சி நிரலைக் கூட்டமைப்பு முன்னெடுப்பதாயின், மஹிந்தவைத் தான் ஆதரிக்க வேண்டும். மஹிந்தவை ஒரு பக்கம், போர்க்குற்றவாளியாகவும் இனப்படுகொலையாளனாகவும், விமர்சித்துக் கொள்ளும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, இன்னொரு பக்கம், சீன நிகழ்ச்சி நிரலுக்குட்பட்டு, செயற்பட வேண்டும் என்ற தொனியில் கூறும் ஆலோசனை விந்தையானது.

மேற்குலக -இந்திய நிகழ்ச்சி நிரல், எப்படி ரணிலைக் காப்பாற்ற முனையுமோ, அதுபோலத் தான், சீன நிகழ்ச்சிநிரல் எப்போதும் மஹிந்தவையே காப்பாற்ற முனையும்.

அப்படியான நிலையில், சீன நிகழ்ச்சி நிரலுக்குட்பட்டுச் செயற்படுவது எந்த வகையில், தமிழர்களுக்கு விமோசனத்தைத் தரும் என்ற கேள்விக்கு யாரும் பதிலளிப்பதாகத் தெரியவில்லை. அதேவேளை, மேற்குலக, இந்திய நிகழ்ச்சி நிரல், அத்தகைய விமோசனத்தை அளிக்கும் என்ற கற்பிதத்தை எவரும் அளிக்க முயன்றால், அதுவும் கூட அபத்தமானதே.

இப்படியானதொரு சூழலில், மேற்குலக, இந்திய நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே கூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவளித்துள்ளது என்று குற்றம்கூறும் தரப்புகள், அதற்கு மாற்றான அணுகுமுறை என்ன, அதன் விளைவு எப்படி இருக்கும் என்பதைக் கூறத்தயாராக இருப்பதில்லை.

அதைவிட, 2015 ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் கொடுத்த ஆணை மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவானது அல்ல. அது மஹிந்தவுக்கு எதிராகக் கொடுக்கப்பட்ட ஆணை. தமிழ் மக்களின் அந்த ஆணையை மீறி, மஹிந்தவைப் பதவியில் வைத்திருப்பதற்குத் தான், கூட்டமைப்பு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்தளவுக்கு நியாயமானது என்றும், சில தமிழ்த் தேசிய அரசியல் தரப்புகளுக்குப் புரியவில்லை.

இந்த விடயத்தில் மாத்திரமன்றி, தமிழ்த் தேசிய தரப்புகள், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், சுமந்திரன் விடயத்தில் காட்டிய வெறுப்பும், வியப்பானதே. வவுனியாவில் நடந்த தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி மாநாட்டில் அவர், ஜனாதிபதியை நீ, உனக்கு, என்றெல்லாம் ஏக வசனத்தில் கேள்வி எழுப்பி உரையாற்றியிருந்தார்.

அரசியல் நாகரிகத்துக்கு இது ஒவ்வாத சொற்பிரயோகங்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை. எதிரியையும் மதிக்கும் பண்பு அரசியலுக்கு மிகவும் முக்கியமானது.

அதேவேளை, இதேமாதிரி, கூட்டமைப்பின் வேறொரு நாடாளுமன்ற உறுப்பினர், தலைவர் பேசியிருந்தால் இந்தளவுக்கு விவகாரமாகியிருக்காது. அது சுமந்திரனாக இருந்ததால் தான் இந்தளவு பிரச்சினை எழுப்பப்படுகிறது.

இந்த உரையை, தெற்கிலுள்ள யாரும் பெரிதாகக் கவனத்தில் எடுத்ததாகத் தெரியவில்லை. ஆனால், வடக்கில் உள்ள அதிலும் குறிப்பாகத் தமிழ்த் தேசியத் தரப்புகளாக அடையாளப்படுத்தும் அரசியல்வாதிகளும், ஊடகங்களும் தான் போர்க்கொடி எழுப்பியிருக்கின்றன.

சிலர் சுமந்திரனுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப் போகிறார் ஜனாதிபதி என்ற செய்திகளை வெளியிடுகிறார்கள். இன்னும் சிலர், சுமந்திரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள்.

வேறு சிலர், சுமந்திரனை தமிழரசுக் கட்சியில் இருந்தே நீக்க வேண்டும் என்கிறார்கள். இதில் விசித்திரமான விடயம், அண்மையில் புதிய கட்சியைத் தொடங்கிய அனந்தி சசிதரன், சுமந்திரன் மீது ஜனாதிபதி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியது தான்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்களின் வாக்குகளுக்கு துரோகமிழைத்தார். அதுபோலவே ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்காளர்களுக்கும் துரோகமிழைத்தார். ரணிலைப் பதவி நீக்கியதும், மங்கள சமரவீர தெரிவித்த கடும் விமர்சனங்களை விட, சுமந்திரன் ஒன்றும் அதிகமாகப் பேசி விடவில்லை.

மங்கள சமரவீரவை கைது செய்ய வேண்டும் என்று சிங்கள அரசியல்வாதிகளுக்கு வராத ரோஷம், ஜனாதிபதியை ஏக வசனத்தில் பேசியதற்காக, தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளுக்கு வந்திருப்பது தான் ஆச்சரியம்.

சுமந்திரனைப் பழிவாங்கி விட வேண்டும் என்ற ஆர்வத்தில், ஜனாதிபதி மீதான அதீத விசுவாசத்தை வெளிப்படுத்தும் அளவுக்கு, தமிழ்த் தேசியத் தரப்பினர் வந்து நிற்கிறார்கள். ஜனாதிபதியை எப்படி அழைக்க வேண்டும் என்று அரசியல் சட்டம் கூறவில்லை. மதிக்க வேண்டும் என்பது மரபே தவிர சட்டமல்ல.

சுமந்திரனின் பேச்சு அரசியல் நாகரிகத்தை மறந்து போனதாயினும், அவரை சட்டத்தின் முன் நிறுத்துமாறு கோருவது சர்வாதிகாரத்தை வலிந்து இழுப்பது போன்றது.

மஹிந்த- மைத்திரி எதிர்ப்பைத் தீவிரப்படுத்தி, எங்கே தமது இடத்தை சுமந்திரன் பிடித்துக் கொள்வாரோ, என்ற அச்சம் தமிழ்த் தேசியத் தரப்பினர் சிலருக்கு வந்து விட்டதோ தெரியவில்லை.

இப்படிப் பல்வேறு குழப்பங்களை வடக்கு, கிழக்கின் தமிழ்த் தேசிய அரசியல்தரப்புகளையும் குழப்பி விட்டிருக்கிறது இந்தக் கொழும்புக் குழப்பம்.


கொழும்புக் குழப்பம் முடிவுக்கு வந்தாலும், தமிழ்த் தேசிய அரசியல் தரப்புகளின் இந்தக் குழப்பமும் அடிபிடியும் முடிவுக்கு வரப் போவதில்லை.

ad

ad