புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 டிச., 2018

முஸ்லிம் அரசியல்: மூன்றாவது அணி?

அரசியலைப் பொறுத்தமட்டில், தமது தேவைக்கு ஏற்ற வடிவில், தீர்மானிக்கும் சக்தியொன்றைத் தாமே சிருஷ்டித்து, அதனது மூக்கணாங்கயிற்றைக் குறிப்பிட்டதொரு காலத்துக்குத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சூட்சுமம் இருக்கின்றது.

இலங்கையின் நடப்பு அரசியல் சூழலில், ஆட்சியாளர்களை நிர்ணயம் செய்யக் கூடிய வல்லமை கொண்ட இன்னுமோர் அரசியல் அணியைப் பெருந்தேசியமோ, குறிப்பிட்டதொரு பெரும்பான்மைக் கட்சியோ உருவாக்கும் சாத்தியமிருப்பதாகத் தெரிகின்றது.

இலங்கையின் முஸ்லிம் அரசியல் பற்றி, அரசியல் தலைவர்களும் அவர்களது ‘கோயாபல்ஸ்’களும் என்னதான் தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், அது கொள்கை ரீதியாகவோ, கோட்பாட்டு அடிப்படையிலோ பயணிக்கவில்லை. இது ஒருபுறமிருக்க, பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்ட (Issue based) அரசியலாகவும் அமையப் பெறவில்லை என்பதே நிஜமாகும்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கை சரியா, ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கை சரியா, பொதுஜன பெரமுன போன்ற இதர கட்சிகளின் கோட்பாடுகளுக்குப் பின்னால் போக முடியுமா என்ற அறுதியும் உறுதியுமான எந்த நிலைப்பாடுகளும் முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் கிடையாது. அந்தந்தத் தருணத்தில், தமக்குச் ‘சரி’ எனத் தோன்றுவதன் அடிப்படையிலேயே, தீர்மானங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஆர். பிரேமதாஸவுடன் நல்லுறவைப் பேணிய முஸ்லிம்களின் தனித்துவ அரசியல், பின்னர் 1994இல் சந்திரிகா அம்மையாரின் சுதந்திரக் கட்சியின் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருந்தது.

2000ஆம் ஆண்டு, நாடாளுமன்றத் தேர்தலுக்குச் சில நாள்கள் இருக்கும் போது, மு.கா தலைவர் எம்.எச்.எம் அஷ்ரப், சந்திரிகாவுடன் முரண்பட்டார். அதிலிருந்து ஒரு சில நாள்களில், அஷ்ரப் மரணித்தார் அல்லது மரணிக்கச் செய்யப்பட்டார்.

2005ஆம் ஆண்டு தேர்தலில், முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் சுதந்திரக் கட்சிக்கு ஆதரவளித்தது. முஸ்லிம்களின் ஆதரவுடன், மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியானார். மீண்டும் 2010இலும் அதுவே நடந்தது.

2015இல் ஒன்றரைத் தசாப்தங்களுக்குப் பிறகு, மீண்டும் முஸ்லிம்களின் வாக்குகள், ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம் திரும்பின. இந்த இடத்தில், இரு முஸ்லிம் கட்சிகள், மைத்திரி - ரணில் கூட்டணியை ஆதரிக்க, மற்றைய கட்சி, மஹிந்தவை ஆதரித்தது.

மஹிந்த ஆட்சியில் இடம்பெற்றதைப் போன்றதான இனவாதச் சம்பவங்கள், மைத்திரி - ரணில் ஆட்சியிலும் இடம்பெற்றதைத் தொடர்ந்து, முஸ்லிம்களின் கவனம், மஹிந்த பக்கம் சற்றுத் திரும்பியிருந்த தருணமாகப் பார்த்து, மைத்திரிபால சிறிசேனவும் மஹிந்த ராஜபக்‌ஷவும் சேர்ந்து, அவசரப்பட்டுத் ‘தாழியை உடைத்து’ விட்டார்கள் என்று கூற முடியும்.

இவ்வாறிருக்கையில், தேர்தல் ஒன்று நடைபெறாமலேயே, ஆட்சி மாற்றம் ஒன்றை நிகழ்த்துவதற்கு ஏதுவான ஒரு களச்சூழல், கடந்த இரு மாதங்களாக, இலங்கையில் ஏற்பட்டிருந்தது.

இந்தச் சந்தர்ப்பத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தமது கட்சியில் கொண்டிருக்கின்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள், ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஆதரவளித்திருக்கின்றன.

கடந்த காலங்களைப் போலவே, இம்முறையும் முஸ்லிம் பொதுமக்களின் அபிலாஷைகளை அடிப்படையாகக் கொண்ட தீர்மானங்களோ, அன்றேல் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்ட ஆதரவுகளோ அளிக்கப்படவில்லை என்பது முக்கியமான விடயம். ‘இப்போதைக்கு இவர்/ இந்தக் கட்சி; மற்றையதைப் பிறகு பார்ப்போம்’ என்ற மனோநிலையிலேயே பெரும்பாலும் முடிவுகள் எட்டப்பட்டன.
இந்நிலையில், மாகாண சபைத் தேர்தலும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலும் நம்மை எதிர்நோக்கியுள்ளன. இவ்விரு தேர்தல்களும் பிறக்கப் போகின்ற, 2019ஆம் ஆண்டிலேயே நடைபெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

இப்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கின்ற இரு முஸ்லிம் கட்சிகளும் அடுத்தடுத்த தேர்தல்களில், சுதந்திரக் கட்சியை ஆதரிக்கலாம். இக்கட்டான சூழ்நிலையொன்று வருகின்ற போது, மஹிந்த ராஜபக்‌ஷவின் பொதுஜன பெரமுனவும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் நம்பிக்கைக்குரிய தெரிவாக அமைலாம். இதை, அவர்கள் இப்போது ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஆயினும், அதற்கான சாத்தியங்கள் உள்ளன என்பதை, அரசியலறிவு உள்ளோர் புரிந்து கொள்வர்.

ஆனால், தற்சமயம் மஹிந்த ராஜபக்‌ஷவின் தரப்பு, இரு பிரதான முஸ்லிம் கட்சிகளிலும் கட்சித் தலைமைத்துவங்களிலும் முழுமையாக நம்பிக்கை இழந்திருப்பதாக, அவர்களுக்கு நெருக்கமானோர் கூறுகின்றனர்.

இங்கு வலியுறுத்தப்படும் விடயம், மஹிந்தவை ஆதரிக்க வேண்டும் என்பதோ, அவரது நம்பிக்கையை வெல்வதோ முஸ்லிம்களின் கடமை அல்ல. மாறாக, மஹிந்தவை ஆதரிக்காதிருப்பதற்கு, முஸ்லிம் கட்சிகளிடம் நியாயமான காரணங்கள் இருக்கின்றன. ஆனால், மஹிந்த தரப்பின் கோணத்தில், முஸ்லிம் கட்சிகள், தம்மை ஏமாற்றி விட்டதாக இவ்விடயத்தைப் பார்க்கின்றனர்.

முஸ்லிம் கட்சிகள் இரண்டும், ஜனநாயகத்தின் பெயரில், ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை மீள நிலைநிறுத்த ஆலாய்ப்பறந்து கொண்டிருந்தன. இருந்த போிலும், ரணில் விக்கிரமசிங்க தரப்பைப் போலவே, ஜனாதிபதி சிறிசேன, மஹிந்த தரப்புடனும் முஸ்லிம் கட்சித் தலைமைகள் ‘தொடர்பில்’ இருந்தன.

சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் எனத் தன்னை அடையாளப்படுத்தியவாறு, எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்துள்ள மஹிந்த ராஜபக்‌ஷவின் தரப்பில், பெயர் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அரசியல்வாதிகளில் ஓரிருவர், “முஸ்லிம் அரசியல் கட்சிகள், தங்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு விட்டு, அமைச்சு, பிரதியமைச்சு பொறுப்புகளையும் வெகுமதிகளையும் கேட்டுவிட்டு, ஈற்றில் காலை வாரிவிட்டார்கள்” என அங்கலாய்ப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

முஸ்லிம் கட்சிகளின் அரசியல்வாதிகளில் சிலர், நேரடியாகவே மஹிந்த தரப்பைச் சந்தித்ததாகவும் ஒவ்வொரு கட்சியில் இருந்தும், தலா ஒவ்வொருவர் பிரதியமைச்சுப் பதவிக்காகக் கட்சி மாற உடன்பட்டதாகவும், இதில் ஒருவர் பதவியேற்பதற்காக அங்கு சென்று, ஆவணங்களை நிரப்பியதாகவும் சொல்லப்படுகின்றது.

ஆயினும், “எல்லோரும் கூட்டத்தோடு வருவார்கள் என்ற நம்பிக்கையில், அந்த நகர்வை மேற்கொண்டு முன்னெடுக்கவில்லை” என்று, மஹிந்த அணியின் முக்கிய அரசியல்வாதிகள், தகவல்களைக் கசியவிட்டுள்ளனர்.

அண்மைக்கால நகர்வுகளால், ‘சறுக்கி விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்ற நிலையில், மஹிந்த ராஜபக்‌ஷ இருக்கின்றார். அவர், இனி எழுச்சி பெறுவது மிகச் சிரமம் என்று பரவலாகக் கருதப்பட்டாலும், அதற்காக எந்தப் பிரயத்தனத்தையும் மஹிந்த குடும்பம் செய்யும்.

எதிர்வருகின்ற தேர்தலில் வெற்றி பெறாவிட்டால், இனியொருபோதும் அது சாத்தியமில்லை என்றபடியால், வரும் தேர்தலை முன்னோக்கியதாக, முஸ்லிம் அரசியலுக்குள்ளும் முழுமையாக ஊடுருவி, வேலை செய்ய மஹிந்த, பஸில், கோட்டாபய ராஜபக்‌ஷக்களின் மூளைகள், கடுமையாக வேலை செய்யத் தொடங்கி இருப்பதாக, அனுமானிக்க முடிகின்றது.

அடுத்த தேர்தலில் இல்லாவிடினும், அதற்குப் பிறகாவது, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் தம்மை நோக்கி வருவதற்கு, வாய்ப்புகள் உள்ளன என்று மஹிந்த தரப்பினர், தமது அனுபவத்தின் அடிப்படையில் எண்ணுகின்றனர். ஆயினும் ரவூப் ஹக்கீமையும் ரிஷாட் பதியுதீனையும் இனி முழுமையாக நம்பியிருந்து, கடைசியில் ஏமாற முடியாது என்ற, கருத்து நிலைக்கு வந்திருப்பதாகவும் தெரிகின்றது.

பிரதான முஸ்லிம் கட்சிகள் இரண்டும், நன்றாகத் தம்மளவில் ஸ்திரமாக நிறுவப்பட்ட கட்சிகளாகும். அவற்றுக்கென்று ஏதாவது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்கள் இருக்கின்றன. எனவே ஓர் எல்லைக்கப்பால், பெரும்பான்மைக் கட்சிகளால் செல்வாக்குச் செலுத்த முடியாது.

ஆனால், பெரும்பான்மைக் கட்சியொன்று தாமாகவே ஒரு முஸ்லிம் கட்சியை, அரசியல் அணியை உருவாக்குமாக இருந்தால், அந்த அணி ஊடாக, முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறலாம் என்பதுடன், தமக்குத் தேவையான போது ஆதரவைப் பெறவும் முடியும்.

எனவே, அவ்வாறானதோர் அணியை உருவாக்குவது குறித்து, மஹிந்த ராஜபக்‌ஷ தரப்பு இப்போது அதிகமதிகம் சிந்திப்பதாக அறிய முடிகின்றது. அதாவது, ரவூப் ஹக்கிம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸிலும் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான மக்கள் காங்கிரஸிலும் நம்பிக்கை இழந்திருக்கின்ற அல்லது அப்படிப் பொய்த்தோற்றம் காண்பிக்கின்ற மஹிந்த தரப்பினர், மூன்றாவது அரசியல் அணியை, முஸ்லிம்களுக்குள் இருந்து சிருஷ்டிப்பதில் உள்ள சாதக பாதகங்கள் குறித்துச் சிந்திப்பதாகத் தெரிகின்றது.

பெருந்தேசியக் கட்சி ஒன்றால், முஸ்லிம்களுக்குள் இருந்து இன்னுமோர் அணி உருவாக்கப்படுமாக இருந்தால், குறைந்தது ஐந்து வருடங்களுக்கும், கூடியது 10 வருடங்களுக்கும் தம்மை உருவாக்கிய பெரும்பான்மைக் கட்சிக்கு, அந்த அணி விசுவாசமாக இருந்து, அவர்களது ஆட்சியதிகாரத்தைத் தீர்மானிக்கும் முஸ்லிம் தரப்பாக இருக்கும் என்று கூறலாம்.

பிரதான முஸ்லிம் கட்சிகளைத் தவிர்த்துப் பார்த்தால், தேசிய காங்கிரஸ், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளுடன் அண்மையில் உருவாக்கப்பட்டுள்ள சமத்துவ முற்போக்கு முன்னணி போன்ற அரசியல் ஆர்வமுள்ள இன்னோரன்ன சிவில் அமைப்புகளையும் மூன்றாவது அணியை உருவாக்க விரும்புவோர் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக் கூடும்.

முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ், மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆஸ்தான ஆதரவுக் கட்சியாகும். அந்தக் கட்சிக்குரிய இடத்தை, மஹிந்த தரப்பினர் வழங்குவார்கள் என எதிர்பார்க்கலாம். ஆனால், முழு நாட்டிலுள்ள முஸ்லிம்களையும் இல்லாவிட்டாலும் வடக்கு, கிழக்கிலுள்ள முஸ்லிம்களையாவது, இல்லையென்றால் கிழக்கிலாவது முஸ்லிம்கள் இடையே பூரண ஆதரவுள்ள ஓர் அணியையே மஹிந்த அணி தேடலாம்.

இந்த அடிப்படையில், கடந்த காலப் பதிவுகளை நோக்கும் போது, தேசிய காங்கிரஸை மட்டும் வைத்துக் கொண்டு, தமது திட்டத்தை நிறைவேற்றுவது கடினம் என, மஹிந்த தரப்பு நினைக்க இடமுள்ளது.
அதேவேளை, இந்நாட்டு முஸ்லிம்களின் பரவலான ஆதரவைப் பெற்ற, வடக்கு-கிழக்கில் முழு ஆதிக்கம் செலுத்துகின்ற அரசியல் சக்தியாக ‘காங்கிரஸ்கள்’ இன்னும் வளரவில்லை என்றிருக்கையில், அவ்வாறான பலமுள்ளதாக, வேறு எந்தத் தனியோர் அரசியல் அணியும் இருக்க வாய்ப்பேயில்லை.

எனவேதான், சிறு அரசியல் கட்சிகள், அதில் ஒரு பிரிவினர், சாத்தியமான அரசியல்வாதிகள், பதவியில்லாத அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள், குழுக்கள் என அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தெரிவு செய்து, இந்த அரசியல் அணி கட்டமைக்கப்படலாம். அன்றேல், பல சிறு அணிகளை உருவாக்கி, அவற்றை ஒரு குடையின் கீழ் அணிதிரளச் செய்வது பற்றியும் சிந்திக்கச் சாத்தியம் இருக்கின்றது.

மூன்றாவது அரசியல் அணியொன்று உருவாவதால், முஸ்லிம்களுக்கு அனுகூலங்களும் உருவாகலாம் என்று எடுத்துக் கொண்டாலும், முஸ்லிம்களின் வாக்குகள் மேலும் சிதறடிக்கப்படும் பாதகமான நிலை உடனே உருவாகும்; முஸ்லிம் அரசியலுக்குள் முரண்பாடுகள் இன்னும் வலுவடையும்.

எனவே, பிரதான முஸ்லிம் கட்சிகள் முன்கூட்டியே செயலில் இறங்கி, தேசிய அரசியலில் மிதவாதப் போக்கைக் கடைப்பிடித்து, மக்கள் சார்பு அரசியலில் உள்ள இடைவெளியை நிரப்புவதன் மூலம், இவ்வாறான அணியொன்று உருவாகாத வண்ணம் தடுக்க முடியும்.

என்றாலும் கூட, அதைச் செய்ய மாட்டார்கள் என்றபடியால், மூன்றாவது அணியை உருவாக்க நினைப்போரின் கனவு நனவாகலாம்.

ad

ad