புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜன., 2019

பிரான்சின் நாடாளுமன்றத்தில், தமிழர் பிரதிநிதிகள்

பிரான்சின் நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில், தமிழர்கள் நலன் பேணும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆய்வுக்குழுவுக்கும், தமிழர் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று 23/01/19 புதன்கிழமை இடம்பெற்றது.

பிரான்சின் தமிழர் நலன்பேணும் நாடாளுமன்ற ஆய்வுக்குழுவின் தலைவரும், Seine-Saint-Denis பிராந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான திருவாட்டி Marie-George-Buffet அவர்கள் இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.

தமிழர்தரப்பில், பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை, தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு, ஐரோப்பியத் தமிழர் ஒன்றியம், தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் பெண்கள் அமைப்பினர் பங்கேற்றனர்.

இச்சந்திப்பில் இன்றைய இலங்கை அரசியல் நிலவரம், இனவழிப்பு இடம்பெற்று 10 ஆண்டுகள் ஆகியும் சிறிலங்கா அரசு தமிழர்களின் பிரச்சனையைத் தீர்ப்பதில் எதுவித முன்னேற்றமும் காட்டவில்லை, சர்வதேச நாடுகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளைத் தொடர்ந்தும் உதாசீனம் செய்துவருவதுவும் வலுவாகச் சுட்டிக்காட்டப்பட்டது.

இனியும் தொடர்ந்து காலவகாசம் கொடுத்துக் கொண்டிருக்காமல் சர்வதேச விசாரணை ஒன்றை மேற்கொள்ள பிரான்சு அரசு சார்பில் அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

சர்வதேச அரசுகளின் நிலைப்பாடுகள் சிங்கள அரசுக்கு உதவுவதாகவே அமைகின்றன. தமிழர்களுக்கு நீதியானதும் நிலைத்து நிற்கக்கூடியதுமான தீர்வின் அவசியம் குறித்தும் பேசப்பட்டது.

பிரான்சில் உள்ள தமிழர் அமைப்புகளை பிரான்சின் வெளிவிவகார அமைச்சு உத்தியோகபூர்வமாகச் சந்திப்பதைத் தவிர்த்துவருவதும் சுட்டிக்காட்டப்பட்டது. தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்பது அங்கீகரிக்கப்படவேண்டும்.

இலங்கையராகப் பொதுமைப்படுத்தல் ஊடாகத் தமிழர் என்னும் இன அடையாளத்தை இல்லாமல் செய்யும் வேலையை சர்வதேச நாடுகளும் திட்டமிட்டுச் செயல்படுகின்றனவா என்ற ஐயமும் எழுப்பப்பட்டது. தமிழின அழிப்பு நடவடிக்கைகளும் மறைக்கப்படுகின்றன எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

இவற்றைக் கரிசனையோடு செவிமடுத்த நாடாளுமன்ற ஆய்வுக்குழு, வெளிவிவகார அமைச்சுக்கும், பிரான்சின் அரசதரப்புக்கும் இங்கு பேசிக்கொண்ட விடயங்கள் உரியமுறையில் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று உறுதியளித்தது.

ad

ad