புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜன., 2019

மார்ச் மாதம் தீர்வா வரும்?

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40வது கூட்டத்தொடர், அடுத்த மாதம் (பெப்ரவரி) 25ம் நாள் ஆரம்பமாகி, மார்ச் 22ம் நாள் வரை இடம்பெறவுள்ளது.

பேரவையின் நிகழ்ச்சி நிரல் வரைவு கடந்தவாரம் தயாரிக்கப்பட்ட போது, மார்ச் 20ம் நாள் இலங்கை தொடர்பான விவாதம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறியவருகின்றது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இந்த அமர்வில், இலங்கை தொடர்பான அறிக்கையை, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பசெலெட் அல்லது பிரதி ஆணையாளர் பேரவையில் சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்பட்டு விவாதம் நடத்தப்படும் என்று பணியகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருக்கின்றார்.

பொறுப்புக் கூறல் மற்றும் மீள் நிகழாமையை உறுதிப்படுத்தும் வகையிலும் ஏற்கனவே சிறீலங்கா அரசு உறுதிமொழி வழங்கியமைக்கு அமைவான மனித உரிமைகள் உள்ளிட்ட விடயங்களை உறுதிப்படுத்தும் நோக்கிலும் சிறீலங்காவிற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் எதிர்வரும் மார்ச் மாதம் 19ம் திகதியுடன் நிறைவடைகின்றது.

இந்நிலையில் இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து மிகவும் முக்கியமான தீர்மானங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் எடுக்கப்படவுள்ளதாக நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டு மைத்திரிபால சிறீசேன பதவியேற்றதன் பின்னர், புதிய ஆட்சியாளர்களுக்கு கால அவகாசத்தை வழங்குவதாக இரண்டு ஆண்டுகளை சர்வதேச நாடுகளின் அணுசரணையுடன் ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு வழங்கியது.

பின்னர் அது மேலும் இரண்டாண்டுகள் நீடிக்கப்பட்டு நான்காண்டு கால அவகாசமானது. நான்கு ஆண்டுகளிலும் மைத்திரிபால சிறீசேன அரசால் எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்கப்படவில்லை.

இன்னும் ஓராண்டில் அவரது பதவிகூட நிறைவிற்கு வந்துவிடப்போகின்றது.

வழங்கப்பட்ட கால அவகாசமான இந்த நான்கு ஆண்டுகளில் காணாமல்போனவர்களை கண்டறியும் ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

ஆனால், காணாமல்போன எவரும் கண்டுபிடிக்கப்படவில்லை, தோண்டத் தோண்ட நிலங்களில் இருந்து மனித எலும்புக்கூடுகள்தான் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

இராணுவத்தின் ஆக்கிரமிப்பிலுள்ள நிலங்களை விடுவிப்பதாகக் கூறிக்கொண்டு, மறுவளமாக தொல்லியல் திணைக்களம் ஊடாக தமிழர் நில ஆக்கிரமிப்புக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

தமிழ் அரசியல் கைதிகள் ஒருவரைக்கூட இதுவரை விடுதலை செய்யவில்லை. புதிய அரசியல் சீர்திருத்தம் என்ற பெயரில் புதிய அரசியல் யாப்பு வரைபு என்ற மாயமான் இன்னமும் தன் ஓட்டத்தை நிறுத்தவில்லை.

சந்திரிக்காவின் வெற்றுத் பொதிபோல் தமிழர்களுக்கு எதுவுமேயற்ற இந்தப் புதிய அரசியல் யாப்பை எதிர்பார்த்து இலவம் காத்த கிளிகளாகக் காத்திருக்கின்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

தமிழர்களுக்கு ஏதுமற்ற இந்த யாப்பை இன்னும் சொல்லப்போனால் இலங்கைத் தீவை முழுமையாக சிங்கள, பெளத்த பூமியாக்கப்போகும் இந்த யாப்பை அதற்குள் தமிழர்களுக்கு ஏதோ இருப்பதுபோலவும் அதனைத் தாங்கள் எதிர்ப்பதுபோலவும் சிங்கள இனவாதிகளும், பெளத்த பேரின
வாதிகளும் காட்டிக்கொள்கின்றார்கள்.

இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிகளை சிறீலங்கா நிறைவேற்றவேண்டும் என இரு தேசங்களாக இருந்த இலங்கைத் தீவை முழுமையாக சிங்களவர்களின் கைகளில் ஒப்படைத்துவிட்டு வந்த பிரித்
தானியா வலியுறுத்துகின்றது.

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பிலான உண்மைகளை வெளிப்படுத்தல் மற்றும் நீதி வழங்கல் பொறிமுறை என்பன குறித்த கடப்பாட்டினை அங்கு ஏற்பட்ட அரசியல் நெருக்கடி நிலைமையானது வலுவிழக்கச் செய்துள்ளது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கவலை வெளியிடு
கின்றது.

நீண்டகாலமாக துன்பங்களை அனுபவித்துவரும் மக்கள் தொடர்பான தமது கடப்பாடுகளை விரைந்து நிறைவேற்றுவது தொடர்பில் சிறீலங்காவின் நட்புறவு நாடுகள் மற்றும் அமைப்புக்கள் சிறீலங்கா அரசுக்கு அழுத்தம் வழங்க வேண்டும் என்று அது வலியுறுத்துகின்றது.

இத்தனைக்கும் மத்தியில்தான் சிறீலங்கா அண்மையில் அந்த அதிரடி முடிவை எடுத்திருக்கின்றது. போர்க் குற்ற விசாரணைகளை விரைந்து முன்னெடுக்கவேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை அமைப்பும் சர்வதேச நாடுகளும் வலியுறுத்திவரும் நிலையில், போர்க் குற்றங்களில் ஈடுபட்ட
தாக (தமிழர்கள் இனப்படுகொலையில் ஈடுபட்டதாகவே வலியுறுத்துகின்றார்கள்)

சர்வதேசத்தால் மட்டுமல்ல ஐ.நாவினால் குற்றம்சாட்டப்படுகின்ற சிறீலங்காவின் இராணுவத் தளபதிகளில் ஒருவரும் இறுதி இனஅழிப்பு நடவடிக்கையில் 58வது படைப் பிரிவின் தளபதியாக இருந்து நேரில் நின்று வழிநடத்தியவருமான மேஜர் ஜெனரல் சவேந்திர டி சில்வாவுக்கு சிறீலங்காப் படைகளின் பிரதானியாக பதவி உயர்வை மைத்திரிபால சிறீசேனா வழங்கி இராணுவம் மீது எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கப்போவதில்லை என்பதை இந்த உலகிற்கு சூழுரைத்திருக்கின்றார்.

இதற்கும் ஒருபடி மேலே சென்று, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரான அருந்திக பெர்ணான்டோ, போரில் நாம் ஈடுபடும்போது மனித உரிமைகள் மீறப்படுகின்றமை பெரிய விடயமல்ல என்று நாடாளுமன்றத்திலேயே கடந்த வாரம் கர்ச்சித்திருக்கின்றார்.

இப்போது விழித்தெழுந்து சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமையை அமெரிக்கா முதல் ஐரோப்பிய ஒன்றியம் வரை அதிர்ச்சியுடன் பார்க்கின்றன.சர்வதேச மன்னிப்புச்சபையும் கண்டனம் வெளியிடுகின்றது.

இப்படி நடந்துகொண்டால் போர்க்குற்றவாளிகள் பொறுப்புக்கூற வைப்பதில் உங்களின் நேர்மை எப்படி நிரூபிக்கப்படும் என்றும் சிறீலங்காவிடம் கேள்வி எழுப்புகின்றனர்.

இலங்கைத் தீவில் குந்தியிருக்க திருகோணமலையில் ஓரிடம் கிடைக்குமா, மன்னாரில் ஒரு நிலம் கிடைக்குமா, ஹம்பாந்தோட்டவில் ஒரு வனம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் நாடுகள் இவ்வாறான கண்டன அறிக்கைகளுடன் நின்றுவிடும். சிறீலங்கா ஆட்சியாளர்களுக்கு வலிக்கும் வகையில் ஆக்கபூர்வமாக எதனையும் செய்யப்போவதில்லை என்பதுதான் உண்மை.

ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில் சிறப்புரிமையுடைய மனித உரிமைகள் அமைப்புகள் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் தங்கள் மனக் கண்ணைத் திறந்தபடி இன்னும் காத்திருக்கின்றன.

இவர்கள் இனியும் கால அவகாசத்தை நீடிக்காமல் சிறீலங்காவிற்கு எதிரான சர்வதேச விசாரணையை கோரும் நிலையே காணப்படுகின்றது.

குறிப்பாக மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஜஸ்மின் சூகா உள்ளிட்டவர்கள் சிறீலங்காவுக்கு இம்முறை கடும் சவால்களை ஏற்படுத்துவார்கள் என்றும் இது சிறீலங்காவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று நம்பிக்கை வெளியடப்படுகின்றது.

ஆனால் அதுவும் எவ்வளவு தூரம்? காலம் கடந்த நீதி அநீதிக்கு சமமானது. ஆனாலும் காத்திருப்போம். பொறுமையோடு காத்திருப்பது தமிழர்களுக்கு பழகிப்
போன விடயம்தானே..?

ஆசிரிய தலையங்கம்
நன்றி: ஈழமுரசு

ad

ad