வியாழன், பிப்ரவரி 28, 2019

சட்டரீதியற்ற தங்கச் சுரங்கம் தகர்ந்தது: பலரைக் காணவில்லை

இந்தோனேஷியாவின் சுலாவேசித் தீவிலுள்ள சட்டரீதியற்ற தங்கச் சுரங்கமொன்று தகர்ந்ததில் புதையுண்டு
போயுள்ளனர் என அஞ்சப்படும் ஏறத்தாழ 45 பேரை கண்டுபிடிப்பதற்காக, மண்வெட்டிகளையும் கயிறுகளையும் பயன்படுத்தி டசின் கணக்கான மீட்புப் பணியாளர்கள் தோண்டி வருவதாக இந்தோனேஷிய அதிகாரிகள், நேற்று (27) தெரிவித்துள்ளனர்.
வட சுலாவேசி மாகாணத்தின் பொலாங் மொன்கொன்டோ பகுதியின் சேற்று மலைப்பகுதியிலுள்ள குறித்த தற்காலிக சுரங்கத்தில் சிக்கியுள்ள சிலரின் குரலை கேட்கக் கூடியதாகவுள்ளதாகத் தெரிவித்த மீட்புப்பணியாளர்கள், பலர் இன்னும் உயிருடனிருப்பதாக நம்புவதாகக் கூறியுள்ளனர்.
இந்நிலையில், சுரங்கம் நேற்று முன்தினம் மாலையில் தகர்ந்த நிலையில், இலங்கை நேரப்படி நேற்றுக் காலை 6.30 மணியளவில் சடலமொன்று மீட்கப்பட்டதாக இந்தோனேஷிய இடர் கட்டுப்படுத்தல் முகவரகம் தெரிவித்துள்ளது. எவ்வாறெனினும், மூவர் உயிரிழந்துள்ளதாக இந்தோனேஷிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இவ்வாறான சிறிய அளவியால தங்கச் சுரங்கங்களை இந்தோனேஷிய அரசாங்கம் தடைசெய்துள்ளபோதும், ஒதுக்குப்புறமான பகுதிகளில் இதை பிராந்திய அதிகாரிகள் கண்டுகொள்ளாத நிலையில் இவற்றில் விபத்துகள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே காணப்படுகின்றன.
தேடுதல், மீட்பு அணிகளும் இராணுவ அதிகாரிகளும் ஒன்றாகப் பணியாற்றுகின்றபோதும் நிலமை தொடர்ந்தும் மோசமாக இருப்பதால், மண்வெட்டிகள், கயிறுகள் போன்ற இலகுவான உபகரணங்களையே பயன்படுத்துகின்றனர்