திங்கள், மார்ச் 04, 2019

தமிழ் இளைஞர்கள் கடத்தல் விவகாரம்: சட்டமா அதிபர் திணைக்களம் எடுத்துள்ள முடிவு!


கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட மற்றும் ஏனைய கடற்படை அதிகாரிகளுக்கு எதிராக மேல்நீதிமன்ற ட்ரயல் அட்பார் தீர்ப்பாயமொன்றை அமைக்க சட்டமா அதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

குறித்த வழக்கு ஏற்படுத்தியுள்ள சர்ச்சைகளைக் கருத்தில் கொண்டு குற்றவியல் சட்டத்தின் 450 ஆவது பிரிவின் கீழ் மேல் நீதிமன்ற ட்ரயல் அட்பார் தீர்ப்பாயமொன்றை அமைக்க முடியுமென சட்டமா அதிபர் திணைக்களம் கருதுகிறது.

சட்டமா அதிபர் திணைக்களம் விரைவில் தமது முடிவைத் தலைமை நீதியரசருக்கு அறிவிக்கவுள்ளது.இதன் பின்னர் தலைமை நீதியரசர் மேற்படி தீர்ப்பாயத்துக்கான நீதிபதிகளைத் தெரிவு செய்வார்.

இதேவேளை, 11 இளைஞர்கள் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவிடம் விரைவில் வாக்குமூலமொன்றைப் பதிவு செய்யவுள்ளதுடன் அவரை விரைவில் நீதிமன்றத்தில் நிறுத்த முடியுமென நம்புவதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன