திங்கள், மார்ச் 25, 2019

சிறுவன் பலி! மட்டக்களப்பு - சிகிச்சை பெற்ற சிறுவனுக்கு குருதி மாற்றி ஏற்றப்பட்டதால் உயிரிழந்த சம்பவம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற சிறுவனுக்கு குருதி மாற்றி ஏற்றப்பட்டதால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏறாவூர் காவல் துறை பிரிவிலுள்ள வந்தாறுமூலை பலாச்சோலையைச் சேர்ந்த ஜெயக்காந்தன் விதுலஷ்சன் (வயது – 9) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார்.

சிறுவன், கடந்த முதலாம் திகதி விபத்தில் காயமடைந்த நிலையில் செங்கலடி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதன்போது அவருக்கு குருதி இழப்பு ஏற்பட்டதாக குருதி ஏற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து குணமடைந்து வந்த சிறுவன் மீண்டும் நோய்வாய்ப்பட்டுள்ளார். அதன்பின்னர் அவரை அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றியுள்ளனர். இதன்போது சிறுவனின் கிட்னி பகுதியில் குருதிக் கசிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து கடந்த 17ஆம் திகதி சிறுவன் அசைவற்று காணப்பட்டதை அவதானித்த பெற்றோர், மருத்துவரிடம் இது தொடர்பில் தெரிவித்துள்னர்.

இதன்போதே சிறுவனுக்கு தவறான முறையில் குருதி ஏற்றப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் குருதி குறூப் மாற்றி ஏற்றியதாலேயே கிட்னி இரண்டும் பாதிக்கப்பட்டதாக மருத்துவர் தம்மிடம் கூறியதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக தெரிவித்த சிறுவனின் தந்தை “மகனுக்கு குருதி ஏற்ற வேண்டிய தேவை இல்லாத போதிலும் அந்த பெண் மருத்துவர் மற்றும் பெண் தாதியர்கள் வேறு நோயாளிக்கு ஏற்ற வேண்டிய குருதியை எனது மகனுக்கு ஏற்றியுள்ளனர். இதனால் எனது மகன் கிட்னி பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து உடற்கூற்றுப் பரிசோதனை இடம்பெற்ற பின்னர், குருதி மாற்றி ஏற்றப்பட்டதால் எனது மகன் உயிரிழந்தார் என்றும் விபத்தால் ஏற்பட்ட காயத்தால் உயிரிழக்கவில்லை என்றும் பொலிஸாரிடம் அறிக்கை வழங்கியுள்ளதாக சட்ட மருத்துவ அதிகாரி என்னிடம் தெரிவித்தார்.

பயிலுனர்களாக வரும் மருத்துவர்களனாலேயே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றன. எனவே எனது மகனுக்கு நீதிவேண்டும். பிழை செய்தோர் தண்டிக்கப்படவேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதேவேளை இந்த குற்றச்சாட்டு தொடர்பாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் திருமதி கே. கணேசலிங்கத்துடன் தொடர்புகொண்டபோது,

“கடந்த 19ஆம் திகதி போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த 9 வயதுடைய விதுலஷ்சனின் சம்பவம் தொடர்பாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து உடனடியாக அதனுடன் தொடர்புடையவர்கள் அனைவருக்கும் முதலில் விளக்கம் கோரி கடிதம் அனுப்பியுள்ளேன்.

அவர்களிடமிருந்து கோரப்பட்ட அந்த விளக்க கடிதம் கிடைத்தவுடன் விசாரணைக்குழு அமைத்து உடன் விசாரணை செய்யப்பட்டு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படும். யாராக இருந்தாலும் தவறு இழைத்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்” எனப் பதிலளித்தார்