சனி, மார்ச் 02, 2019

மனித உரிமைகள் ஆணைக்குழு இரணைதீவிற்கு திடீர் விஜயம்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இரணைதீவிற்கு திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளது.
இரணைதீவில் குடியேறியுள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக நேரடியாக அறித்து கொள்வதற்காக குறித்த விஜயம் மேற்கொள்ளப்பட்டதாக மனித உரிமைகள் ஆணைகுழுவின் ஆணையாளர் திரு.கனகராஜ் எமது ஆதவன் செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.
யாழ் மற்றும் கிளிநொச்சி பிராந்திய மனித உரிமைகள் ஆணைகுழுவின் ஆணையாளர் திரு.கனகராஜ் தலைமையிலான அதிகாரிகள் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை இரணைமாதா நகரில் இருந்து படகு மூலம் இரணைதீவிற்குச் சென்றிருந்தனர்.
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் (மெசிடோ) ஊடாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு மற்றும் ஊடகங்களின் மூலம் அறிக்கையிடப்பட்ட செய்திகளின் அடிப்படையில் இரணைதீவு மக்கள் தொடர்பாக ஆராய்வதற்கு குறித்த விஜயம் மேற்கொள்ளப்பட்டதாக மனித உரிமைகள் ஆணைகுழுவின் ஆணையாளர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் மக்கள் நேரடியாக தங்களுடைய முறைப்பாடுகளை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகளின் முன்னிலையில் தெரிவித்திருந்தனர்.
குறிப்பாக இரணைதீவுப் பகுதியில் குடியேறி ஒரு வருடம் பூர்த்தியாகும் நிலையில் இதுவரை தாம் உரிய முறையில் குடியேற்றப்படவில்லை எனவும் இவ்விடயத்தில் அதிகாரிகள் அசமந்தப்போக்குடன் செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குறித்த குழுவினர் மக்களின் வீடுகள், கோவில், பாடசாலைகள் போன்ற இடங்களைப் பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.