புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மார்., 2019

கம்பரளிய - ரெலோ வசமுள்ள சபைகளையும் வெட்டுகிறது தமிழரசு

அபிவிருத்தி மற்றும் மக்களின் விடயங்களில் பிரதேச சபைகளின் வகிபாகத்தினையும் அதற்குள்ள பொறுப்புக்களையும் சகலரும் புரிந்து கொள்ள வேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

ஊரெழுச்சித்; ( கம்ரளிய) திட்டத்தில் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் ஒப்பந்த நடைமுறைகள் தொடர்பில் இன்று (28, வியாழக்கிழமை) வலிகாமம் கிழக்கு கோப்பாய் பிரதேச செயலகத்தில் பொது அமைப்புக்களை கூட்டி கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இக் கூட்டம் பிரதேச சபையின் தவிசாளருக்கோ சபைக்கோ தெரிவிக்கப்படாது சமூக அமைப்புக்களை பிரதேச செயலகத்திற்கு அழைத்து அவ் வீதிகளுக்கான ஒப்பந்த நடைமுறைகள் தொடர்பிலும் மேலும் சில விடங்களும் ஆராயப்பட்டுள்ளன. இதுதொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே வலி கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் இவ்வாறு தெரிவித்தார்.

ஊரெழுச்சித் திட்டம் தொடர்பான பொறுப்புக்கள் சுற்று நிருபங்களின் பிரகாரம் பிரதேச செயலகம் ஊடாக கையளிக்கப்பட்டிருந்தாலும் சட்ட ரீதியிலும் அதற்கு அப்பாலும் பிரதேச சபைகளுக்கு பெரும் வகிபாகங்கள் உள்ளன. பிரதேச சபைகள் தனக்குச் சொந்தமான வீதிகள் என்ற அடிப்படையில் அவ் வீதிகளின் அபிவிருத்திக்கு அவைத்தீர்மானம் வாயிலாக சம்மதிக்க வேண்டியுள்ளது. மேலும் வீதிகளுக்கான தொழிநுட்ப மதிப்பீடுகளை தயாரிக்கும் வகிபாகத்தினையும் பிரதேச சபைகள் கொண்டுள்ளன. கொடுப்பனவுகக்கான சிட்டைத்தயாரிக்கும் பொறுப்பினையும் மேலதிகமாக நாம் கொண்டுள்ளோம். எல்லாவற்றுக்கும் மேலாக மக்களிடம் வீதி அபிவிருத்தி தொடர்பில் சச்சரவுகள் ஏற்படும் போதெல்லாம் சட்டரீதியிலும் அதற்கு அப்பாலும் எமக்குள்ள பொறுப்புக்களின் வாயிலாக நாம் இரவு பகல் பார்க்காது செயற்படுகின்றோம். அடிப்படையில் திட்டங்களின் வாயிலாக வீதிகள் அமைக்கப்பட்டாலும் மக்களுக்குப் பொறுப்புச் சொல்ல வேண்டிய கடப்பாட்டினை உள்ளுராட்சி தாபனங்களே கொண்டுள்ளன.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக இலங்கையின் அரசியல் கட்டமைப்பில் பிரதேச சபைகள் அதிகாரப்பகிர்வு ரீதியில் பாராளுமன்றம், மாகாண சபைகள், உள்ளுராட்சி மன்றங்கள் என்ற கட்டமைப்பு அந்தஸ்தினைப் பெற்றுள்ளன. இவ் வகிபாகங்களை புறந்தள்ளி செயற்படுவது மோசமான செயற்பாடாகும். மேலும் மக்களின் ஆணையினையும் மீறுகின்ற செயற்பாடாகும்.

எங்களுக்குச் சொந்தமான வீதிகளில் பிரதேசத்தில் நடைபெறுகின்ற அபிவிருத்திகள் தொடர்பில் சபையின் தவிசாளர் என்ற வகையில் அவையின் கௌரவ உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவும் அவர்களுக்குத் தேவையான விளக்கங்களை வழங்கவும் பொறுப்புச்சொல்லவும் வேண்டிய கடப்பாடு எனக்கிருக்கின்றது. இந்நிலையில் ஏற்கனவே சபையில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும் விடயங்களில் எமது சபை உறுப்பினர்கள் பல வினாக்களைத் தொடுத்துள்ளனர். அவற்றுக்கும் நியாயமான விளக்கங்களை நாம் வழங்கவேண்டியுள்ளது.

சமூக நிறுவனங்களில் சனசமூக நிலையங்கள் பிரதேச சபையின் விடயப்பரப்பிற்குள் வருகின்றன. வீதிகளும் எமது விடயப்பரப்பினுள் வருகின்றன என்ற அடிப்படையில் மக்களும் பல கேள்விகளைக்கொண்டுள்ளனர். குறித்த விடயம் பற்றி நடைபெறும் கூட்டங்களில் பிரதேச சபையின் நிறைவேற்று தரத்தில் உள்ள ஒருவரே விளக்கமளிக்க முடியும்.

எனவே எதிர்காலத்தில் உரிய நிர்வாக நடைமுறைகள் பின்பற்றப்பட்டு நடவடிக்கைகள் நடைபெறுவதை நாம் உறுதிப்படுத்திக்கொள்வதன் மூலமே சிக்கல்கள் இன்றி அபிவிருத்தியினை முன்னொடுக்க முடியும். அதுவே காத்திரமான அபிவிருத்தியாகவும் அமையமுடியும் இவ்வாறு வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தொகுதிப் பங்கீட்டு அடிப்படையில் வலிகாகம் கிழக்கு பிரதேச சபை ரெலோ கட்சியின் வசமுள்ளமை குறிப்பிடத்தக்கது

ad

ad