புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மார்., 2019

ஐ.நா மனித உரிமைப் பேரவை: இலங்கை தொடர்பில் இன்று அறிக்கை


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரரவையின் 40ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் இன்று (20) அறிக்கை சமர்பிக்கப்படவுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் தயாரிக்கப்படும் இந்த அறிக்கையில், சமரசம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் ஆகியவற்றை ஊக்குவிப்பது தொடர்பான விடயங்கள் அடங்கிய உத்தியோகபூர்வ அறிக்கை, இன்றைய கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக, ஜெனீவா தூதரகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்துடன், இலங்கை இணை அனுசரணை வழங்கியமை தொடர்பில் நாளையதினம் (21) ஆராயப்படுமென தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிக்கை, ஜெனிவா நேரப்படி இன்று பிற்பகல் 12.00 மணிக்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிஷல் பெசல் சமர்ப்பிக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து அவ்வறிக்கை தொடர்பில் சபையில் கருத்தாடல்கள் இடம்பெறுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, ஜெனிவா கூட்டத்தொடரில் உரை நிகழ்த்தவுள்ளார். இதனையடுத்து, சமரசம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றை ஊக்குவிப்பது தொடர்பில் மேற்கொண்டுள்ள செயற்பாடுகள் ​தொடர்பில், ​ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் கருத்துரைகளை வழங்குவர்.

இலங்கை அரசாங்கத்தின் சார்பில், வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரத் அமுனுகம, வடமாகாண முதலமைச்சர் சுரேன் ராகவன், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஏ.நெரின் புள்ளே ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

அத்துடன், ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கையின் வதிவிட பிரதிநிதி ஏ.எல்.ஏ.அசீஸ், பிரதி வதிவிட பிரதிநிதி சமந்தா ஜயசூரிய, மற்றும் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கையின் வதிவிட அலுவலக அதிகாரிகள் ஆகியோரும் இதில் பங்கேற்கவுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடரில் மேலும் 2 வருட கால அவகாசம் கோர எதிர்பாரத்துள்ளதாக, வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, பிரதமர் அலுவலகம், அரசாங்க தகவல் திணைக்களம் என்பன ஒன்றிணைந்து அறிக்கையொன்றை ஏற்கெனவே, வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி, இலங்கை தொடர்பில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை, 2017 பெப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களில் இடம்பெற்ற மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத்தொடரின் போது, 2 வருட கால அவகாசம் வழங்கப்பட்டது.

இதற்கமைய, குறித்த பிரேரணையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் பூரண அறிக்கையொன்றை முன்வைக்க வேண்டியுள்ளது. இதற்கமைய, ஆணையாளரால் இன்று (20) அவ்வறிக்கை பேரவையில் சமர்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad