புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 மார்., 2019

நாப்போலியை வென்றது ஜுவென்டஸ்


இத்தாலிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில், நேற்று இடம்பெற்ற, நடப்புச் சம்பியன்கள் ஜுவென்டஸுடனான போட்டியில் நாப்போலி தோற்றது.

இப்போட்டியானது 25ஆவது நிமிடத்தில் இடம்பெற்ற சம்பவத்திலேயே பிரதானமாகக் காணப்பட்டது. நாப்போலியின் பின்கள வீரரான கெவின் மல்குயிட் பின்புறமாகக் கொடுத்த பந்தை, ஜுவென்டஸின் நட்சத்திர முன்கள வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ இடைமறித்ததைத் தொடர்ந்து, தனது பெனால்டி பகுதிக்கு வெளியே வந்த நாப்போலியின் கோல் காப்பாளர் அலெக்ஸ் மெரெட், ரொனால்டோவுடன் மோதிய நிலையில் அவர் வீழ்ந்தார்.

இந்நிலையில், உடனடியாக அலெக் மெரெட்டுக்கு நேரடியாக சிவப்பு அட்டை காண்பித்து, அவரைக் களத்திலிருந்து மத்தியஸ்தர் வெளியேற்றியிருந்தார். இதைத் தொடர்ந்து வழங்கப்பட்ட பிறீ கிக்கை, ஜுவென்டஸின் மத்தியகள வீரர் மிரலெம் பிஜானிக் கோலாக்க அவ்வணி முன்னிலை பெற்றது.

பின்னர், ஜுவென்டஸின் இன்னொரு மத்தியகள வீரரான எம்ரே கான், போட்டியின் 39ஆவது நிமிடத்தில் தலையால் முட்டிப் பெற்ற கோலோடு தமது முன்னிலையை ஜுவென்டஸ் இரட்டிப்பாக்கியது.

இந்நிலையில், முதற்பாதி முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் ஜுவென்டஸ் முன்னிலையிலிருந்தநிலையில், இரண்டாவது பாதியின் இரண்டாவது நிமிடத்தில், வேண்டுமென்றே பந்தைக் கையால் தடுத்தமை காரணமாக, இப்போட்டியின் தனது இரண்டாவது மஞ்சள் அட்டையைப் பெற்ற பிஜானிக், சிவப்பு அட்டை காட்டப்பெற்று களத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்.

தொடர்ந்த போட்டியின் 61ஆவது நிமிடத்தில், ஜுவென்டஸின் பின்களவீரர்களினூடு, சக முன்கள வீரரான லொரென்ஸோ இன்சீனியா கொடுத்த பந்தைக் கோலாக்கிய, நாப்போலியின் இன்னொரு முன்கள வீரரான ஜொஸே கல்லகோன், ஜுவென்டஸின் முன்னிலையை ஒரு கோலால் குறைத்தார்.

இந்நிலையில், போட்டியின் 82ஆவது நிமிடத்தில், ஜுவென்டஸின் பின்கள வீரரான அலெக்ஸ் ஸான்ட்ரோவில் கையில் பந்து பட்டதாக, காணொளி உதவி மத்தியஸ்தர் அமைப்பால் தீர்மானிக்கப்பட்டு பெனால்டி வழங்கப்பட்டபோதும், இன்சீனியா செலுத்திய அப்பெனால்டி, கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியிருந்த நிலையில், இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜுவென்டஸ் வென்றது.

அந்தவகையில், இத்தாலிய சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் 72 புள்ளிகளுடன் முதலிடத்தில் ஜுவென்டஸ் காணப்படுகின்ற நிலையில், இரண்டாமிடத்தில் காணப்படுகின்ற நாப்பாலி, ஜுவென்டஸை விட 16 புள்ளிகள் குறைவாக 56 புள்ளிகளைப் பெற்றுள்ளது. 48 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் ஏ.சி மிலனும் 47 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் இன்டர் மிலனும் 44 புள்ளிகளுடன் ஐந்தாமிடத்தில் றோமாவும் காணப்படுகின்றன.

ad

ad