செவ்வாய், மார்ச் 12, 2019

ஏழு மாவட்டங்களை ஊடறுத்து வணிகப்பாதை அமைக்கும் அமெரிக்கா-விமல் வீரவன்ச


கொழும்பு மற்றும் திருகோணமலை துறைமுகங்களை இணைக்கும் வகையில் 7 மாவட்டங்களை ஊடறுத்து விசேட வணிக பாதையொன்றை உருவாக்குவதற்கு அமெரிக்கா முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதேவேளை திருகோணமலை துறைமுகத்தை அண்மித்த பகுதியில் 33,000 ஏக்கரில் பொருளாதார வலயமொன்றை உருவாக்குவதற்கு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த வலயத்திற்குள் அமெரிக்க போர்க் கப்பலுக்கு தேவையானவற்றை விநியோகிக்கும் மத்திய நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் வீரவன்ச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான 5ஆம் நாள் விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே வீரவன்ச எம்.பி இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இங்கு மேலும் தெரிவித்ததாவது:-அமெரிக்க அரசாங்கத்துக்கு சொந்தமான ''மிலேனியம் செலேஞ் கோப்ரேசன்'' என்ற நிறுவனமொன்று இங்கு இருக்கின்றது. இந்த நிறுவனத்தின் அந்நாட்டு அரசாங்கத்தின் அதிகாரங்கள் நிறைந்த அதிகாரிகளே பதவி நிலைகளில் 7மாவட்டங்களை இருக்கின்றனர்.

2016ஆம் ஆண்டில் அந்த நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு வந்தது. அவர்களின் செயற்பாட்டு அலுவலகம் அலரிமாளிகையிலேயே அமைந்துள்ளது.

வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கு அலரிமாளிகையில் அலுவலக வசதிகளை அமைக்கும் அளவுக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கு என்னவென்பது எமக்கு புரியவில்லை.

இந்த நிறுவனம் இங்கு ஆய்வுகளை செய்து அறிக்கையொன்றை தயாரித்துள்ளனர். அவர்கள் காணிச் சட்டம் எவ்வாறு இருக்க வேண்டுமென்றும் யோசனைகளை குறிப்பிட்டுள்ளனர்.

இதன்படி அவர்கள் 480மில்லியன் டொலர்களை முதலீடு செய்வார்கள். அவர்கள் தேவையான காணிகளை அளவீடு செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர்.

அத்துடன் அரசாங்கத்துக்கு சொந்தமான சகல காணிகளையும் காணி வங்கியொன்றை தயாரித்து அதற்குள் கொண்டு வருமாறு அதனூடாக அவர்கள் யோசனை முன்வைத்துள்ளனர்.