சனி, மார்ச் 09, 2019

விமானங்களைத் தாக்கி அழிக்கும் நவீன துப்பாக்கியுடன் இராணுவ அதிகாரி கைது


விமானங்களை தாக்கி அழிக்க பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள் மற்றும் அதற்குரிய 73 சன்னங்கள் ஆகியவற்றை கைப்பற்றிய பொலிஸார், இராணுவ உயர் அதிகாரி ஒருவரையும் கைதுசெய்தனர்.

பதுளை – ரிதிமாலியத்தை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து, குருவிதென்னை என்ற இடத்தில், இராணுவ உயர் அதிகாரியொருவரது வீட்டைச் சுற்றிவளைத்து – நேற்று (08) தேடுதல் வேட்டையில் இறங்கினர் பொலிஸார்.

தேடுதலின் போது, வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பொதியொன்றை பரிசோதனை செய்தபோது துப்பாக்கிகளும், வெடிப்பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டு, மீட்கப்பட்டன.

மீட்கப்பட்ட பொருட்களின் உரிமையாளரென்று கருதப்படும், இராணுவ உயர் அதிகாரியையும் பொலிசார் கைது செய்தனர். இவர் உடனடியாக மகியங்கனை மாவட்ட நீதிபதி ஏ.ஏ. லக்சான் முன்னிலையில் ஆஜர் செய்ததும், நீதிபதி, அந் இராணுவ உயர் அதிகாரியை, எதிர்வரும் 13ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இவ் இராணுவ உயர் அதிகாரி, மன்னார் பகுதியின் பெரியமடு இராணுவ முகாமில் சேவையாற்றும் வை.எம்.விஜயசூரிய என்ற 35 வயது நிரம்பியவராவார். இவர் விடுமுறையில் வீடு வந்து தங்கியிருந்தவரென்று, ஆரம்ப விசாரணையின் போது, தெரிய வந்துள்ளதாக, ரிதிமாலியத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ரொசான் எஸ். பந்துசேன தெரிவித்தார்.

விமானங்களை தாக்கி அழிக்க பயன்படுத்தப்படும் துப்பாக்கிகளின் உதிரிப்பாகங்கள், அத்துப்பாக்கிகளுக்குரிய சி.பி.சி. (ஊடீஊ) ரகத்திலான 50 தசம் 95 மில்லி மீட்டர் கொண்ட 24 சன்னங்களும்,

சி.பி.சி. ரகத்திலான 50 தசம் 81 மில்லி மீட்டர் கொண்ட 49 சன்னங்களுமாக 73 சன்னங்கள் அத்துடன் எப்.என்.எம்.(குNஆ) ரகத்திலான 5 தசம் 81 மில்லி மீட்டர் கொண்ட 273 ரவைகளும் மீட்கப்பட்டிருப்பதாக, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

தொடர்ந்தும் பொலிசார் தீவிர புலனாய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.