வெள்ளி, மார்ச் 01, 2019

மோடிக்கு எதிராக போராட்டம்: வைகோ உள்ளிட்ட ம.தி.மு.க.வினர் கைது

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்ட, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட உறுப்பினர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி இன்று விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து திருநெல்வேலி, காவல்கிணறு பகுதியில் கருப்புக்
கொடி காட்டும் போராட்டம் வைகோ தலைமையில் நடத்தப்பட்டது.
இதில் அக்கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டதுடன் பிரதமருக்கு எதிராக கண்டன கோஷங்களும் எழுப்பப்பட்டது.
இதன்போது செய்தியாளர்களை சந்தித்த வைகோ, “காவிரி விவகாரம், மேகேதாட்டுவில் அணை கட்ட அனுமதி உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் தமிழகத்துக்கு எதிரான நடவடிக்கைகளையே  மோடி தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றார்.
இவ்வாறு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கும் மோடி, தமிழகத்துக்கு வருகை தருவதற்கு எந்ததொரு தகுதியும் இல்லாதவர்” என வைகோ கூறியுள்ளார்.
இதன்போது அவ்விடத்திற்கு வருகை தந்த பா.ஜ.க.வினர் அதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.
அப்போது, மோதலை  கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு வைகோ உள்ளிட்ட பலரை பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது