புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஏப்., 2019

சுமந்திரன் ஹிஸ்புல்லாவைச் சந்தித்தது எனக்கு தெரியாது; கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தேன்: மாவை

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புள்ளாவைச்
சந்தித்த விடயமானது தமக்கு அதிர்ச்சியளித்திருந்ததாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
மேலும் இது கூட்டமைப்பின் தலைமைக்குத் தெரிந்துதான் நிகழ்ந்திருக்குமா என்பதும் தமக்குத் தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் இடம்பெற்ற தொடர் தீவிரவாதத் தாக்குதல்களையடுத்து நாடாளுமன்ற உருப்பினர் எம்.ஏ சுமந்திரன் கிழக்கு மாகாண ஆளுநரை நேரில்சென்று சந்தித்திருந்தார். இது கூட்டமைப்பு சார்பானோரிடத்தில் கடும் எதிர்ப்பு நிலையினைச் சந்தித்திருந்த நிலையில், நாடாளுமன்றில் சுமந்திரன் அதுகுறித்த விளக்கத்தினைக் கொடுத்திருந்தார்.
மேலும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் துக்கதினத்தை அனுட்டிக்குமாறு தான் அவரைக் கேட்டுக்கொண்டதாகவும் ஆனாலும் அவர் அதனைத் திரிபுபடுத்தி கிழக்கில் கடைகளைமூடி ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்ததாகவும் சுமந்திரன் நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியிருந்தார்.
எவ்வாறாயினும் தமிழ் மக்கள் தொடர்பில் கடும்போக்காளராகச் செயற்படும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புள்ளாவை சுமந்திரன் சந்தித்திருந்தமை தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பானோரிடத்தில் சர்ச்சையினை ஏற்படுத்தியிருந்த நிலையிலேயே மாவை சேனாதிராசாவிடம் இதுகுறித்து ஐ.பி.சி தமிழின் சக்கரவியூகம் நிகழ்ச்சிக்காக கேட்கப்பட்டது.
அதில் அவர் மேலும் கூறியதாவது,
ஹிஸ்புல்லா “இரத்த ஆறு ஓடும்” என தெரிவித்ததாக வரும் கருத்து அவரது கருத்து. அவர் இவ்வாறான இயக்கங்களின் பின்னணியில் பேசினாரா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவரது பேச்சுக்கள் தமிழ் மக்களுக்கு எதிரானதாக, தமிழ் மக்களது போராட்டத்துக்கு எதிரானதாக, தமிழ் மக்களது அபிலாசைகளுக்கு விரோதமானதாக அமைந்திருந்தமையை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
இவ்வாறான நிலையில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தமையினைத்தொடர்ந்து கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புள்ளாவை உடனடியாக சந்தித்தமை தவறுதலாக இடம்பெற்றது என்பதை நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன். இது கூட்டமைப்பின் தலைமையோடு பேசுப்பட்டு அல்லது ஆராய்ந்து நிகழ்ந்த விடயமாக நான் நினைக்கவில்லை. அவர் ஹிஸ்புள்ளாவைச் சந்திக்கப் போனதன்பிற்பாடு நான் மட்டக்களப்புக்குச் சென்றபொழுது, அங்கு வீரகேசரி ஊடகத்தில் வந்ததை அடிப்படையாக வைத்து என்னிடம் கேட்கப்பட்டது. அப்பொழுது எனக்கே அதிர்ச்சியாக இருந்தது.” என்றார்.

ad

ad