திங்கள், மே 20, 2019

சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பு - அதிபர்,உப அதிபர் கைது!

உயிர்த்தஞாயிறு அன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானுடன் தொடர்புடைகளை பேணிய இரண்டு முஸ்லிம் பள்ளிவாசல்களின் அதிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை இவர்கள் விசேட அதிரடிப்படையினரால் ஹொரவப்பொத்தான என்ற இடத்திலுள்ள பத்தேவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரும் நேற்றையதினம் கெப்பிட்டிகொலாவ நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டவேளை இருவரையும் எதிர்வரும் 28 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களான அதிபர் மற்றும் உப அதிபருக்கு தேசிய தவ்ஹீத் அமைப்பின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் நன்கு தெரியும் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை சஹ்ரான் மற்றும் மொகமட் இப்ராஹிம் அன்சார் இருவரும் தேசிய தவ்ஹீத் அமைப்பின் பள்ளிவாசலை இந்தப்பகுதியில் அமைத்து அதனை அப்துல் ரசூல் மற்றும் மொகமட் மிஜாம் என்பவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

இவர்களும் கைது செய்யப்பட்டு கெப்பிட்டிகொலாவ நீதிமன்றில் கடந்த 17 ஆம் திகதி ஆஜர்படுத்தப்பட்டவேளை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.