திங்கள், ஜூன் 10, 2019

ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் இருந்த அகதியை ஏற்றுக்கொண்ட சுவிட்சர்லாந்து

மனுஸ்தீவில் உள்ள ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் சிறைவைக்கப்பட்டிருந்த சூடான் அகதிக்கு சுவிட்சர்லாந்தில் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளது.

அப்துல் அசிஸ் முகமது என்ற 25 வயது அகதியான அவர், ஆஸ்திரேலிய தடுப்பு முகாம் நிலையை ஆவணப்படுத்தியதற்காக மார்ட்டின் என்னல்ஸ் என்ற மனித உரிமை விருதை வென்றவர் ஆவார்.

முன்னதாக, 2017ல் ஆஸ்திரேலிய கார்ட்டியன் ஊடகமும் வீலர் மையமும் இணைந்த தயாரித்த ஒலித்தொடருக்காக 4,000 குரல் பதிவுகளை அனுப்பி வைத்திருக்கிறார்.கடந்த மார்ச் மாதம், ஜெனிவா ஐ.நா. மனித உரிமை அவையில் உரையாற்றிய அப்துல் அசிஸ் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு கொள்கை அகதிகளுக்கு ஏற்படுத்தும் மோசமான சூழலை விளக்கியிருந்தார்.தற்போது, சுவிட்சர்லாந்தில் தஞ்சமளிக்கப்பட்டுள்ளது தொடர்பாக பேசியுள்ள அப்துல் அசிஸ், சுவிஸ் என்ற அழகிய நாட்டில் எனக்கு தஞ்சமளிக்கப்பட்டிருக்கின்றது. ஆறு ஆண்டுகளில் முதல் முறையாக சுதந்திரமாக இருக்கிறேன், ஆனால் மனுஸ் மற்றும் நவுருத்தீவில் உள்ள எனது சகோதர சகோதரிகள் பாதுகாப்பான நாட்டில் அடைக்கலம் பெறும் வரை மனதளவில் என்னால் சுதந்திரமடைய இயலாது,” எனத் தெரிவித்திருக்கிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக வர முயன்ற 1000த்திற்கும் மேற்பட்ட அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்களை ஆஸ்திரேலிய அரசு, சுமார் 6 ஆண்டுகளுக்கு மேலாக மனுஸ் மற்றும் நவுருத்தீவில் சிறைவைத்திருக்கின்றது.