புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஜூலை, 2019

தமிழரசு கட்சி மாநாட்டில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன!


யாழ்ப்பாணத்தில் இன்று நடந்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 16ஆவது தேசிய மாநாட்டில், 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன
இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் 16ஆவது தேசிய மாநாடு
யாழ்ப்பாணம், வீரசிங்கம் மண்டபத்தில், கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தலைமையில் இன்று நடைபெற்றது. குறித்த நிகழ்வுக்கு முன்னர் துரையப்பா விளையாட்டரங்குக்கு அருகில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவுச்சதுக்கத்தில் வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், இரா.சம்பந்தன் தலைமையில் தந்தை செல்வாவின் சமாதிக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு, மாநாடு இடம்பெற்ற வீரசிங்கம் மண்டபம் வரை பேராளர்கள் ஊர்வலம் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவர், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், கட்சி உறுப்பினர்கள், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் அரசியல் தீர்வு, ஐ.நா.மனித உரிமைத் தீர்மானம், ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்வு, மீள்குடியேற்றம், கைதிகள் விடுதலையும் பயங்கரவாத தடைச்சட்டமும், தொழில் வேலைவாய்ப்பு, போராளிகள் ஜனநாயக நீரோட்டத்தில் இணைப்பு உள்ளிட்ட 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு,
இலங்கை நாட்டில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழினப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஏற்படாத காரணத்தால் இடம்பெற்று வரும் ஜனநாயக வழிப் போராட்டங்களினாலும், ஆயுதப் போரின் விளைவுகளாலும், 2012 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையான ஐ.நா.மனித உரிமைப் பேரவைத் தீர்மானங்களாலும், சர்வதேச சமூகத்தின் தலையீடுகளினாலும் இலங்கை இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும் என்ற அடிப்படையில் இலங்கை நாடாளுமன்றத்தில் புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன் பொருட்டு இடைக்கால அறிக்கை ஒன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இருந்த பொழுதிலும் தமிழினப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு ஏற்படவில்லை. தாமதங்களும், தடைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றை மிக விரைவில் இவ்வாண்டுக்குள் ஏற்படுத்த வேண்டுமென அரசையும், அரசியல் கட்சிகளையும், அனைத்து சமூகங்களிடமும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடமும் இம் மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.
அவ் அரசியல் தீர்வானது ஒருமித்த இலங்கை நாட்டில் தமிழ் மக்களின் இறையான்மை, சுய நிர்ணய உரிமை, மனித உரிமை வாழும் உரிமை அடிப்படையில் சமஷ்டிக் கட்டமைப்பில் பிராந்தியங்களினதும் தேசிய இனங்களினதும் தன்னாட்சி உரித்தை உறுதிப்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என இம்மாநாடு வற்புறுத்துகின்றது.
அத்துடன், ஐ.நா.மனித உரிமைப் பேரவைத் தீர்மானங்களை முழுமையாக நிறைவேற்றுவதற்கு பொருத்தமான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்க வேண்டுமென்று இம்மாநாடு கேட்டுக் கொள்கின்றது.
மேலும், போர்க் காலத்தில் முப்படைகளினாலும், காவல் துறையினாலும் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட தனியார், அரச நிலங்கள் தாமதமின்றி விடுவிக்கப்பட வேண்டுமென மாநாடு வலியுறுத்துகின்றது.
அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறிப்பாக போர்க் காலத்தில் இராணுவத்திடம் சரணடைந்தவர்கள், உறவினரால் கையளிக்கப்பட்டவர்கள் தொடர்பாக காலம் தாழ்த்தாமல் தீர்மானங்களை எடுக்க வேண்டும்.
தொடர்ந்தும், போரின் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தத்தம் நிலங்களில் உடன் மீள்குடியமர்த்தப்பட வேண்டும். போர் காரணமாக கைது செய்யப்பட்டவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்களுக்கு அரசியல் தீர்மானம் எடுக்கப்பட்டு மன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்படவேண்டும்.
தொழில்வாய்ப்பு என்ற வகையில், போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் கல்வி கற்ற, பட்டபடிப்புக் கொண்டவர்களுக்கு மூப்பு அடிப்படையில் 2012ஆம் ஆண்டுக்குப் பின்னரிலிருந்து வேலையற்றவர்கக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும். மேலும் தொண்டர் ஆசிரி நியமனத்தில் குறைபாடுகளை ஆராய்ந்து தகுதியுடையோருக்கு இவ்வாண்டுக்குள் நிரந்தர நியமனம் வழங்கவும் வேண்டும்.
போர் காரணமாகக் கல்வி பெற வாய்ப்பு அற்றவர்கள் குறிப்பாக போராளிகளாக இருந்தவர்களுக்கு சிறப்பு பயிற்சி, தொழில்நுட்பப் பயிற்சி வழங்கி அரசுத் துறையிலும், தனியார் துறையிலும் வேலைவாய்ப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும். மேலும் அரசுத் துறையில் ஏற்பட்டுள்ள வெற்றிடங்கள் அவ்வப் பிரதேசங்களிலிருந்தே சிற்றூழியர் ஆயினும் நிரப்புதல் வேண்டும்.
போரினால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் 90ஆயிரம் குடும்பங்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு புதுவாழ்வு, வாழ்வாதாரம் வேலைவாய்ப்பு பெறக்கூடியவகையில் தொழில் துறைகள் ஏற்படுத்தப்பட்டு அவர்கள் வாழ்வுரிமை உறுதிப்படவேண்டுமென மாநாடு வற்புறுத்துகிறது.
அத்துடன், நாடாளுமன்றத்திலும், மாகாணத்திலும், உள்ளூராட்சியிலும் பெண்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும். பாலியல் வன்முறைகளில், சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்களுக்கெதிராக தண்டனை வழங்கப்படுதல் துரிதப்படுத்தப்படவேண்டும் என வற்புறுத்துகின்றோம்.
போர் காரணமாக அழிக்கப்பட்ட, கைவிடப்பட்ட பெருந் தொழிற்சாலைகள் பொருத்தமான வகையில் நவீன மயமாக்கப்பட்டு மீளக் கட்டியெழுப்புதல், போரினால் பாதிக்கப்பட்டு வேலைவாய்ப்பு அற்றிருக்கும் இளைஞர்,யுவதிகளின் எதிர்கால வாழ்வாதாரத்தையும், வாழ்க்கையையும் கட்டியெழுப்புவதற்குப் பொருத்தமாக புதிய அறிவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய சிறுதொழில்கள், மத்தியதர தொழில்கள் பெருந்தொழில்துறைகளை குறுகியகால, நீண்டகால அடிப்படையில் உருவாக்கவேண்டும். பெரு முதலாளித்துவ முதலீடுகளுக்கு ஈடாக மக்கள் கூட்டாகவும் பங்களிப்பும் முகாமைத்துவமும் செய்து பயனுறும் தொழில்துறைகளும் உருவாக்கப்பட வேண்டும்.
அத்துடன், தெங்கு, பனம் பொருள் அபிவிருத்தி, மீன்பிடித்துறை அபிவிருத்தி, கல்வி போன்றவை குறித்த தீர்மானங்களும், மகாவலி நீர் வேளாண் அபிவிருத்தியில் குடிசார் மக்களின் இன வீதம் மாற்றப்படாமலிருப்பதை உறுதிசெய்யவேண்டும், போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வங்கிகள், வழங்கிய கடன்களிலிருந்து மீண்டுவர அரசாங்கம் உதவுதல்.
தொழிற்சங்க உரிமை, தேர்தல் முறை, வடக்கு, கிழக்கு மீனவர்களின் தொழிலுரிமை பாதுகாக்கப்படுத்தப்படல் வேண்டும். அரசு, தனியார் தேயிலை, றப்பர் முதலான தொழிலாளர்களுக்கும் வாழ்க்கைச் செலவுக் கேற்பச் சம்பளம் நிர்ணயிக்கப்பட வேண்டும்.
நெல்,வெங்காயம் முதலான வேளாண் விளைச்சல், மீன் வளம், பனை வளம் முதலான உற்பத்தி பண்டங்களுக்கு நியாய விலை நிர்ணயிக்கப்படவேண்டும். வேளாண்மை அறுவடைக் காலங்களில் அந்த உற்பத்திகள் இறக்குமதி நிறுத்தப்படவேண்டும்.
உலகத் தர ஆங்கில மருத்துவம், சித்த மருத்துவம் மற்றும் ஆயுள் வேதம், அதற்குரிய மருத்துவர்கள், தாதிகள் சிற்றூழியர் தேவைக்கேற்றவாறு நியமிக்கப்பட வேண்டும். சித்த மருத்துவபீடம் தரமுயர்த்தப்பட வேண்டும். கல்வித் துறைக்கு அங்கீகாரம் வழங்கவேண்டும். பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவம் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
மக்களின் உடல் நலம் உலக சுகாதார மேம்பாட்டை கொண்டதாகவும் அனைவருக்கும் மருத்துவம் கிடைப்பதையும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். மக்களுக்கு உலகதர மருத்துவம் உறுதிப்படுத்தவும் பொருத்தமான மருத்துவர்கள், தாதிகள் நியமனம் செய்யப்பட வேண்டும்.
மேலும், ஊடகத்துறை மிகுந்த அச்சுறுத்தலுக்கும், வன்முறைகளுக்கும் உள்ளாகி வருகிறது. இதற்கான விசாரணைகளை முன்னெடுக்க ஆணைக்குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என இம்மாநாடு வற்புறுத்துகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு நிவாரணம் வழங்கவும் வேண்டும்.
மேலும், போரினால் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக பாதிக்கப்பட்ட வடக்குக் கிழக்குப் பிரதேசங்களையும், மக்களையும் மீளக் கட்டியெழுப்புவதற்கு அனைத்துத் துறைகளிலும் முழுமையான ஒன்றினைந்த திட்டங்கள் தீர்மானிக்கப்பட்டு அத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தவும் நிறைவேற்றவும் நிபுணத்துவமும், வினைத்திறனும் அர்ப்பணிப்பும் கொண்ட பொறிமுறை நிறுவப்படவேண்டும்.
இந்தப் பிரகடனத்தில் வரிசைப்படுத்தப்பட்டுள்ள விடயங்களின்பால் அதிக அக்கறையை அரசு செலுத்தவேண்டும் என்றும், கூட்டு எதிர்கட்சி உட்பட அனைத்து அரசியலாளர்கள், சிவில் சமூகத்தினர்,மதத் தலைவர்கள், அரச துறைசாரா நிறுவனங்கள், புத்திஜீவிகள் உள்ளிட்ட நாட்டு நலனின்பால் அக்கறையுள்ள அனைவரும் தங்களாலான சாதக நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் அக்கறையோடும் அன்போடும் வேண்டி நிற்கின்றோம். ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ad

ad