வியாழன், ஆகஸ்ட் 15, 2019

அமெரிக்க குடியுரிமை துறப்பு பட்டியலில் கோத்தாவின் பெயர் இல்லை

அமெரிக்க குடியுரிமையை துறந்தவர்களின் புதிய பட்டியலிலும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்வின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில்- மார்ச் 1 தொடக்கம், ஜூன் 30 வரையான காலப்பகுதியில் அமெரிக்க குடியுரிமையை துறந்தவர்களின் பட்டியல் நேற்று அமெரிக்க இராஜாங்கத்தினால் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் கோத்தாபய ராஜபக்சவின் பெயர் இடம்பெற்றிருக்கவில்லை.

தனது அமெரிக்க குடியுரிமை துறப்பு ஆவணம், மே 3ஆம் நாள் அமெரிக்க அரசாங்கத்தினால் உறுதி செய்யப்பட்டதாகவும், ஏப்ரல் 17ஆம் நாளில் இருந்து, அமெரிக்க குடியுரிமை பெற்றவராக கணிக்கப்படமாட்டார் என்றும், கோத்தாபய ராஜபக்ச கூறியிருந்தார்.

இதுதொடர்பான ஆவணம் தன்னிடம் இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்தநிலையில், அமெரிக்க அரசாங்கத்தின் பதிவாளர் வெளியிட்ட, முதலாவது காலாண்டில் அமெரிக்க குடியுரிமையை துறந்தவர்களின் பட்டியலில், கோத்தாபய ராஜபக்சவின் பெயர் இடம்பெறவில்லை.

இரண்டாவது காலாண்டுக்கான பட்டியலில், அவரது பெயர் இடம்பெறும் என்றும் கூறப்பட்டது.

எனினும், அமெரிக்க குடியுரிமையை துறந்தவர்களின் இரண்டாவது காலாண்டுக்கான 17 பக்க பட்டியல் ஓகஸ்ட் 7ஆம் நாளிடப்பட்டு, நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

இதில் கோத்தாபய ராஜபக்சவின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் அவர் அமெரிக்க குடியுரிமை கொண்டவராகவே கணிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோத்தாபய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமை இழப்பு உறுதி செய்யப்படாததால், சிக்கலை எதிர்கொண்டுள்ளார்.