திங்கள், ஆகஸ்ட் 05, 2019

நீதி நழுவிய நீதியரசர் விக்கி டெனீஸ்வரனை நீக்கியது தவறு - விக்கிக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு!

வடக்கு மாகாண சபையின் மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சராக இருந்த பி.டெனீஸ்வரனை, முதலமைச்சராக இருந்த சி.வி. விக்னேஸ்வரன் பதவியிலிருந்து நீக்கியமை சட்டவிரோதமானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
வடக்கு மாகாண சபையின் மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சராக இருந்த பி.டெனீஸ்வரனை, முதலமைச்சராக இருந்த சி.வி. விக்னேஸ்வரன் பதவியிலிருந்து நீக்கியமை சட்டவிரோதமானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தனது பதவி நீக்கம் சட்டவிரோதமானது என்று தெரிவித்து, பி.டெனீஸ்வரன் அப்போதைய முதலமைச்சராக இருந்த சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, மேன்முறையீட்டு நீதிபதிகளான மஹிந்த சமயவர்தன மற்றும் பிரியந்த பெனாண்டோ ஆகியோர் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது குறித்த முடிவு அரசியலமைப்பிற்கு விரோதமானது என மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பி. டெனீஸ்வரனுக்கு பதிலாக மற்றுமொருவரை அமைச்சராக நியமிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கையும் சட்டவிரோதமானது என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்ததோடு, அத்தகைய நியமனத்தை மேற்கொள்ள முதலமைச்சருக்கு அதிகாரம் இல்லை என்றும் தீர்ப்பு அளித்துள்ளது.

அதனடிப்படையில் டெனீஸ்வரனை பதவியில் இருந்து நீக்கவும் அந்த பதவிக்காக கே.சிவனேசன் மற்றும் பீ.குணசீலன் ஆகியோரை நியமிக்கவும் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் எடுத்த தீர்மானம் செல்லுபடியற்றது என தெரிவித்த நீதிபதிகள் டெனிஸ்வரனுக்கு வழக்கு செலவுக் கட்டணத்தை செலுத்துமாறும் விக்னேஸ்வரனுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

அரசியமைப்புக்கு அமைய, மாகாண சபையொன்றின் அமைச்சர் ஒருவரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு மாத்திரமே உரியது என மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.