புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 செப்., 2019

துபாயில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் 7 ஒப்பந்தம்: தமிழகத்தில் ரூ.4,200 கோடி முதலீடு - 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

துபாயில் நடந்த வர்த்தக தலைவர்கள் பேரவை கூட்டத்தில் தமிழகத்தில் ரூ.4,200 கோடி முதலீடு செய்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

தமிழகத்துக்கு அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார். இங்கிலாந்து, அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு அவர் நேற்று முன்தினம் இரவு துபாய் வந்தடைந்தார். இதன் மூலம் துபாய் நகருக்கு வருகை தரும் முதல் தமிழக முதல்-அமைச்சர் என்ற பெருமையை எடப்பாடி பழனிசாமி பெற்றுள்ளார்.



துபாயில் உள்ள தாஜ் ஓட்டலில் நேற்று மதியம் வர்த்தக தலைவர்கள் பேரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.

அவருடன் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி.உதயகுமார், தலைமை செயலாளர் க.சண்முகம், தொழில் துறை முதன்மை செயலாளர் முருகானந்தம், வர்த்தக தலைவர்கள் பேரவையின் தலைவர் பாராஸ் ஷதபுரி, பொதுச் செயலாளர் ஸ்ரீபிரியா, முதலீடுகள் பிரிவின் தலைவர் சுதேஷ் அகர்வால், இந்திய துணைத்தூதர் விபுல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஸ்ரீபிரியா தமிழில் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, “அமீரகம்-இந்தியா இடையே எப்போதும் சிறப்பான உறவு இருந்து வருகிறது. 2 வார வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் நிறைவாக அமீரகத்திற்கு வந்தது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்நாடு வாகன உற்பத்தி, எலக்ட்ரானிக்ஸ், உணவு தயாரிப்பு, ஏர்கிராப்ட் எம்.ஆர்.ஓ. தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் முன்னோடியாக விளங்குகிறது. குறிப்பாக வாகன உதிரிபாக உற்பத்தியில் இந்திய அளவில் 35 சதவீதம் தமிழ்நாட்டில்தான் தயாரிக்கப்படுகிறது. மருத்துவ சுற்றுலாவில் தமிழகம் உலகளவில் சிறந்து விளங்குகிறது. அமீரகத்தில் உள்ள வர்த்தகர்களை தமிழ்நாட்டிற்கு முதலீடு செய்ய அன்புடன் அழைக்கிறேன்” என்றார்.

வர்த்தக தலைவர்கள் பேரவையின் முதலீடுகள் பிரிவு தலைவர் சுதேஷ் அகர்வால் அமீரகம்-இந்தியா இடையே செய்யப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து கூறியதாவது:-

அமீரகம்-தமிழகம் இடையே முதலீடு தொடர்பாக மொத்தம் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தத்தை பல்வேறு நிறுவனங்கள் செய்துள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூ.4,200 கோடி. இதன்மூலம் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

துபாய் துறைமுக குழுமம் சார்பில் செய்யப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் மட்டும் தமிழ்நாட்டில் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். துபாய் துறைமுக குழுமம் (சேமிப்பு கிடங்குகள் அமைக்கும் திட்டம்), ஐ-டெக் நிறுவனம் (பல்நோக்கு வர்த்தக ஏற்றுமதி திட்டம்), ஜெயன்ட் நிறுவனம் (பயோ டீசல் திட்டம்), முல்க் ஹோல்டிங்ஸ் (புதிய தொழிற்சாலைகள் அமைக்கும் திட்டம்), புரோ குளோபல் லாஜிஸ்டிக்ஸ் (விவசாய பொருட்கள் உற்பத்தி திட்டம்), பிரைம் மெடிக்கல் (மருத்துவ சுற்றுலா), எம் ஆட்டோ (மின்சார வாகன தயாரிப்பு) ஆகிய நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

வெளிநாடுகளில் இருந்து இதுவரை மொத்தம் ரூ.9,280 கோடி மதிப்பில் தமிழகத்தில் முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு துபாயில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டார்.

ad

ad