புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 செப்., 2019

கோத்தா கொலை முயற்சி - குற்றஒப்புதல் வாக்குமூலம் நிராகரிப்பு

கோத்தபாய ராஜபக்ச கொலை முயற்சி வழக்கின் நான்காம் எதிரியான- புற்றுநோயால் பாதிக்கப்பட்டவரை பொலிஸார் கொடூரமாக சித்திரவதை செய்து குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர் என்று ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.
கோத்தபாய ராஜபக்ச கொலை முயற்சி வழக்கின் நான்காம் எதிரியான- புற்றுநோயால் பாதிக்கப்பட்டவரை பொலிஸார் கொடூரமாக சித்திரவதை செய்து குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர் என்று ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.

கோத்தபாய கொலை முயற்சி வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அண்மையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டிருந்தது. இந்த வழக்கில் சட்டமா அதிபர் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி ரோகாந்த அபேசூரியவும், எதிரி சார்பாக சட்டத்தரணி செல்வி தர்மராஜாவின் அணுசரனையில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசாவும் முன்னிலையாகியிருந்தனர்.

2006.12.01 அன்று கொழும்பு - கொள்ளுப்பிட்டி, பித்தலை சந்தியில் பாதுகாப்பு செயலாளரான கோத்தபாய ராஜபக்சவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டி விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தற்கொலை குண்டுதாரியால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது மூன்று இராணுவ பாதுகாப்பு அதிகாரிகள் உயிரிழந்ததுடன், கோத்தபாய ராஜபக்ச, இராணுவ பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட பொதுமக்களுக்கு கடும் காயங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அத்துடன் அரச சொத்துக்களுக்கு பெரும் சேதம் விளைவிக்கப்பட்டிருந்தது.

இச்சம்பவம் தொடர்பில், 2013.12.04ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரினால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஐவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நான்காம் எதிரியான செல்வச் சந்திரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையே அண்மையில் இடம்பெற்றிருந்தது. இவ்வழக்கில் சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிடர் ஜெனரல் முன்னிலையாகியிருந்தார்.

சட்டமா அதிபர் சார்பிலான வாதம்

ஜனாதிபதி சட்டத்தரணி ரோகாந்த அபேசூரிய குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் உண்மை விளம்பல் விசாரணை நிறைவடைந்ததையடுத்து தனது சமர்பணத்தில், பயங்கரவாதத் தடைப்பிரிவுப் பொலிஸார் நான்காம் எதிரியான செல்வச்சந்திரனை தடுத்து வைத்து விசாரணை செய்த காலத்தில் கைதியை தாக்கவும், சித்திரவதை செய்யவும் இல்லை என வழக்கிலிருந்து விடுதலையாவதற்காக தனது உடலில் பத்து கடும் காயங்களை கைதி தன்னைத் தானே தாக்கி சுய காயங்களை ஏற்படுத்தியுள்ளார் எனவும் தமது வாதத்தை முன்வைத்திருந்தார்.

அத்துடன் கோத்தபாய கொலை முயற்சி தாக்குதலின் எதிரி, சதியில் ஈடுபட்டதையும் கொலை முயற்சிக்கு உதவி ஒத்தாசை வழங்கியதாக தனது சொந்த விருப்பத்தில் குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு வழங்கியுள்ளார்.எனவே எதிரியால் வழங்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை அரசு தரப்பில் எதிரிக்கு எதிரான சான்றாக நெறிப்படுத்துவதற்கு நீதிமன்றம் கட்டளையிட வேண்டும் என அவர் தமது வாதத்தை முன்வைத்திருந்தார்.

எதிரி சார்பிலான வாதம்

அரச தரப்பு வாதத்தையடுத்து எதிரியின் சார்பில் முன்னிலையாகிய ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தனது வாதத்தில், 1993ஆம் ஆண்டு புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெறுவதற்காக கொழும்பு வந்து மஹரகம புற்றுநோய் வைத்திசாலையில் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வரும்பொழுது கொழும்பில் 2006ஆம் ஆண்டு பயங்கரவாத புலனாய்வு பிரிவுப் பொலிஸார் செல்வ சந்திரனை கைது செய்து, தடுத்து வைத்து, சித்திரவதை செய்து குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை பெற்றுள்ளனர்.

அரச தரப்பில் சாட்சியமளித்த சட்ட வைத்திய அதிகாரி சுப்பிரமணியம் கணேஷ், பொலிஸார் கைதியை தாக்கி சித்திரவதை புரிந்ததற்கான எந்தக் காயங்களும், கைதியின் உடலில் காணப்படவில்லையென சட்ட மருத்துவ அறிக்கையில் சாட்சியம் அளித்துள்ளார்.

எனினும், இவ்வழக்கில் எதிரி தரப்பால் சான்றுக்கு அழைக்கப்பட்ட சட்ட வைத்திய அதிகாரி உருத்திரமூர்த்தி மயுரதனின் சாட்சியமும், இவ்வழக்கின் எதிரியான சந்திரபோஸ் செல்வச்சந்திரனால் மன்றுக்கு வழங்கப்பட்ட சாட்சியமும், எதிரியை சித்திரவதை செய்ததன் மூலம் ஏற்பட்ட காயங்களும் சட்ட வைத்திய அதிகாரி சுப்பிரமணியம் கணேஷன் சாட்சியம் உண்மைக்கு புறம்பான பொலிஸாருக்கு சார்பான சாட்சியம் என்பதை நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

மேலும் எதிரி தரப்பின் சாட்சியமாக சாட்சியமளித்த சட்ட வைத்திய அதிகாரி உருத்திரமூர்த்தி மயுரதனின் சாட்சியத்தில் புற்றுநோயாளியான கைதியை பொலிஸார் சித்திரவதை செய்ததினால் கைதியின் உடலில் 12 கடுங்காயங்கள் காணப்படுவதாகவும், அந்தக் காயங்கள் கைதி தடுப்புப் காவலில் பொலிஸாரின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த காலத்தில் ஏற்பட்ட காயங்கள் எனவும் சட்ட வைத்திய அதிகாரி நீதிமன்றில் சாட்சியமளித்ததுடன் சட்ட மருத்துவ அறிக்கையும் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தார்.

சட்ட வைத்திய அதிகாரி சுப்பிரமணியம் கணேஷன் சாட்சியத்தின்படி, முதலில் எதிரியின் உடலில் எந்தக் காயங்களும் இல்லையென வாதத்தை முன்வைத்த பிரதி சொலிசிடர் ஜெனரல் எதிரி தரப்பால் சான்றுக்கு அழைக்கப்பட்டு சாட்சியமளித்த சட்ட வைத்திய அதிகாரி உருத்திரமூர்த்தி மயுரதன் எதிரியின் உடலில் 12 காயங்கள் காணப்படுவதாக சாட்சியமளித்ததையடுத்து, கைதியின் உடலிலுள்ள காயங்கள் பொலிஸாரின் சித்திரவதையால் ஏற்பட்டவையல்ல எதிரி தனக்குத் தானே ஏற்படுத்திக்கொண்டவை என்ற கற்பனை வாதத்தை முன்வைத்தார்.

ஆனால், எதிரியின் உடலிலுள்ள காயங்கள் ஏற்பட்டுள்ள இடங்கள் மற்றும் காயங்களின் தன்மையை பரிசீலனை செய்த சட்ட வைத்திய அதிகாரி உருத்திரமூர்த்தி மயுரதன் கைதியான செல்வச் சந்திரனின் உடலில் காணப்படும் காயங்கள் கைதி தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்ட சுயகாயங்கள் அல்ல. அவை சித்திரவதை மூலம் ஏற்பட்ட காயங்கள் என சாட்சியம் அளித்துள்ளார் என்பதை எதிரி தரப்பின் சார்பில் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அரசு தரப்பினதும், எதிரி தரப்பினதும் வாத பிரதி வாதங்களை செவிமடுத்த மேல் நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் சட்ட வைத்திய அதிகாரி சுப்பிரமணியம் கணேஷன் சாட்சியத்தை நிராகரித்தார்.

அத்துடன் சட்ட வைத்திய அதிகாரியான உருத்திரமூர்த்தி மயுரதனின் சாட்சியத்தின் படி, கைதியின் உடலில் காணப்படும் காயங்கள், கைதியினால் சுயமாக ஏற்படுத்திக் கொண்ட காயங்கள் அல்ல பொலிஸாரின் கட்டுப்பாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலத்தில் ஏற்படுத்தப்பட்ட காயங்கள் என எதிரி தரப்பால் முன்வைக்கப்பட்டுள்ள சான்றுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, அரசு தரப்பால் சான்றாக முன்வைக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை நிராகரிப்பதாக மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி தீர்ப்பளித்தார்

ad

ad